ஞாயிறு, 30 மார்ச், 2025

கேகாலை மருத்துவமனையின் மருத்துவரைத் தாக்கி ஒருவர் கைது.

கேகாலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிறப்பு மருத்துவரைத் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மார்ச் 28 ஆம் தேதி மதியம் தனிப்பட்ட தகராறு காரணமாக கேகாலை பொது மருத்துவமனையின் முன்பக்கத்தில் சம்பந்தப்பட்ட நபர் சிறப்பு மருத்துவரைத் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டியைச் சேர்ந்த 29 வயதுடையவர். காயமடைந்த சிறப்பு மருத்துவர் தற்போது கேகாலை பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து கேகாலை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மியான்மரில் கடும் நிலநடுக்கத்துக்கு மத்தியிலும் தாக்குதல்!!

மியான்மரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையிலும், ஏற்கெனவே போரால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டில் சில பகுதிகளில் ராணுவம் வெடிகுண்டு தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றது. இந்த தாக்குதல்கள், "அதிர்ச்சிகரமானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என ஐ.நா சபை விவரித்துள்ளது. நிலநடுக்கத்துக்குப் பிறகு மக்களை மீட்பதற்கு நாம் முயற்சித்துவரும் வேளையில் ராணுவம் "வெடிகுண்டுகளை தொடர்ந்து வீசுவது முற்றிலும் நம்ப முடியாததாக உள்ளது" என ஐ.நா சபையின் சிறப்பு அறிக்கையாளர் டாம் ஆன்ட்ரூஸ் பிபிசியிடம் தெரிவித்தார். 

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக் கவிழ்ப்பு மூலமாக அந்நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவம், தனது அனைத்து (தாக்குதல்) நடவடிக்கைகளையும் கைவிடுமாறு அவர் வலியுறுத்தினார்."ராணுவம் மீது செல்வாக்கு உள்ள எவரேனும் அதன் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி, இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை தெளிவாக உணர்த்த வேண்டும்," என அவர் கூறினார். "ராணுவ ஆட்சியாளர்கள், ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்," என்றும் அவர் கூறினார்.

நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள நௌங்சோவில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக, பிபிசி பர்மிய சேவை உறுதிப்படுத்தியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டு குறைந்தது மூன்று மணிநேரத்துக்குள் உள்ளூர் நேரப்படி மாலை 03.30 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. 

நிலநடுக்கம் ஏற்பட்ட முக்கிய பகுதியான சர்காயிங் பிராந்தியத்தின் வட-மேற்கு பகுதியில் உள்ள சாங்-யூ டவுன்ஷிப்பில் வான்வழித் தாக்குதல்கள் நடைபெற்றதாக, ஜனநாயகத்துக்கு ஆதரவான கிளர்ச்சிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 

இக்குழுக்கள் ராணுவ ஆட்சியை அதிகாரத்திலிருந்து நீக்குவதற்காக போராடி வருகின்றன. ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட தேசிய ஒற்றுமை அரசு (என்யூஜி), நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் "தங்களை பாதுகாத்துக்கொள்ள எதிர் தாக்குதல்களை தவிர்த்து, இன்றிலிருந்து (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு வாரங்களுக்கு தாக்குதல்களை நிறுத்தி வைப்பதாக," அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

ராணுவம் இந்த பிரதேசத்தில் தொடர்ச்சியாக, அவமானகரமான தோல்விகளை சந்தித்து, பெருமளவிலான நிலப்பகுதியை இழந்தது. தன்னுடைய ஆட்சிக்கு ஏற்படும் எதிர்ப்பை எதிர்கொள்ள வான்வழித் தாக்குதல்களையே ராணுவம் பெருமளவில் நம்பியுள்ளது. நிலநடுக்கத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள சர்காயிங் பிராந்தியத்தின் பெரும்பகுதிகள் ஜனநாயகத்துக்கு ஆதரவான எதிர்ப்பு குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆட்சிக்கவிழ்ப்பு நடந்து நான்கு ஆண்டுகளாகியும் நாட்டின் கால்வாசி பகுதிகள் கூட ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என, பிபிசி நடத்திய புலன் விசாரணை மூலம் தெரியவந்தது. கிளர்ச்சிக் குழுக்கள் மற்றும் எதிர்ப்பு குழுக்கள் நாட்டின் 42% நிலப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், மீதமுள்ள பகுதியில், பெரும்பாலான இடங்களில் சண்டை நடந்து வருவதாகவும் புலன் விசாரணை கூறுகிறது.

வான்வழி தாக்குதல்களில் ராணுவத்தின் கை ஓங்கியுள்ளது. வான்வழி தாக்குதல்களை முறியடிப்பதில் எதிர்ப்பு குழுக்களுக்கு போதாமை உள்ளது. எவ்வித பாரபட்சமும் இன்றி, ராணுவத்தால் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் பள்ளிகள், மடங்கள், தேவாலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மிக மோசமான வான்வழித் தாக்குதல்களில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 170 பேர் கொல்லப்பட்டனர்.

"ராணுவ நிர்வாகம் உண்மையை வெளிப்படுத்தாது என்பதே, கடந்த காலங்களில் ஏற்பட்ட மானுட பேரழிவுகள், இயற்கை பேரழிவுகளில் இருந்து எங்களுக்கு தெரிந்தது. மனிதநேய உதவிகள் எங்கு அதிகம் தேவைப்படுகிறதோ அங்கு அவற்றைத் தடுக்கும் வழக்கத்தையும் ராணுவம் கொண்டுள்ளது," என்றார் அவர். 

 "உதவிகளை அவர்கள் ஆயுதமாக்கிக் கொள்வார்கள். தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு உதவி பொருட்களை அனுப்பிவிடுவார்கள், தங்களின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளுக்கு அனுப்ப மறுத்துவிடுவார்கள். "எங்கெல்லாம் அதிக உதவிகள் தேவைப்படுகிறதோ, அங்கு வழிகளை மறித்து, அவற்றை கொண்டு செல்வோரை கைது செய்வார்கள், கடந்த காலங்களில் இயற்கை பேரிடர்களுக்கு உதவிப்பொருட்கள் கொண்டு செல்வதில் அவர்களின் அணுகுமுறை இப்படித்தான் இருந்தது. "இந்த பேரிடரிலும் இப்படித்தான் நடக்கும் என நான் அஞ்சுகிறேன், அப்படித்தான் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்."

யாழ் - திருச்சி நேரடி விமான சேவை

யாழ்ப்பாணம் (Jaffna) - திருச்சிராப்பள்ளி (திருச்சி) இடையிலான நேரடி விமான சேவை இன்று முதல் ஆரம்பமாகிறது. 47 ஆண்டுகளுக்குப் பின்னர் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை இயக்கப்படுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விமான சேவையை இண்டிகோ (Indigo) நிறுவனம் இயக்குகிறது.அதன்படி, திருச்சியில் இருந்து இன்று (30.03.2025) பிற்பகல் 1.25 மணிக்கு புறப்படும் விமானம் ஒரே ஒரு மணிநேரத்தில் பிற்பகல் 2.25 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும் என தெரிவிக்கப்படுகின்றது. 

அதேநேரம், யாழ்ப்பாணத்தில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 4.05 மணிக்கு திருச்சிக்கு வந்து சேரும் என கூறப்படுகின்றது.இதுவரை திருச்சியில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்குதான் நாள்தோறும் 2 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.

 அந்தவகையில், திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்வோர் இந்த விமான சேவைகளை பயன்படுத்தி வந்தனர். இதற்கு அதிகமான கட்டணமும் செலுத்தி வந்தனர்.இந்நிலையில், திருச்சி - யாழ்ப்பாணம் இடையேயான விமான கட்டணமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பாஜக கூட்டணி!!

எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா சந்திப்பினால் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழலில் அமித்ஷாவின் அவசர அழைப்பில், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார்.அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினேன். மாநில தலைவராக எனது கருத்தை கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளேன். கூட்டணி தொடர்பாக பேச இன்னும் நிறைய காலம் உள்ளது. பாஜக யாருடன் கூட்டணி என்பது குறித்துப் பேச வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை. கூட்டணி குறித்து எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. 

கட்சி தான் முக்கியம். எனது கட்சியை வலிமைப்படுத்தவே உழைத்து வருகிறேன். தொண்டனாகவும் பணி செய்வேன். பாஜக தேசியத் தலைவர் தேர்தல், மாநிலத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கட்சி நலனைவிட தமிழ்நாடு நலனே முக்கியம்.

மீடியா வெளிச்சத்திற்காக பிரதமர் குறித்து பேசுகிறார் விஜய். மைக் எடுத்துப் பேசி, கைகாட்டிவிட்டுப் போவதில்லை அரசியல்.

களத்தில் வேலை செய்ய வேண்டும்.சக்திமிக்கவர்களைப் பேசினால் மைலேஜ் கிடைக்கும் அதனால் பிரதமர் பற்றி விஜய் பேசுகிறார்.  கட்சி தொடங்கி 3 முறை வெளியே வருவது ஒரு அரசியல். கட்சி தொடங்கி விஜய் எத்தனை முறை வெளியே வந்துள்ளார்? எத்தனை முறை மக்களைச் சந்தித்துள்ளார்?

மைக் எடுத்து கைக்காட்டி விட்டு செல்வது மட்டும் அரசியல் அல்ல களத்தில் நின்று வேலை பார்ப்பது தான் அரசியல். யாருக்கு யார் எதிரி என்பதை வாக்காளர்கள்தான் முடிவு செய்கிறார்கள் இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கூட்டணி குறித்து எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. கட்சி தான் முக்கியம். எனது கட்சியை வலிமைப்படுத்தவே உழைத்து வருகிறேன். 

தொண்டனாகவும் பணி செய்வேன் என்று கூறியிருப்பதன் மூலம் அதிமுக பாஜக கூட்டணி உறுதி என்பதையும் தலைவர் பொறுப்பில் இருந்து தான் மாற்றப்படலாம் என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

சனி, 29 மார்ச், 2025

2009 இறுதி யுத்தத்தின் மறைக்கப்பட்ட பக்கம் .

இந்தியா தமிழீழத்தை எப்போதும் தனது துருப்பு சீட்டாகவே பயன்படுத்தி வந்தது. அந்தவகையில் தான் ஆரம்பத்தில் இந்திரா காந்தி காலத்தில் தனது நலன் சார்ந்து ஈழத்தமிழர்களுக்கு இந்தியா உதவிகள் செய்தது. 
 ஆனால் இந்தியாவிலுள்ள உயர்சாதிகளின் திட்டத்திற்கு ஈழத்தமிழர்கள் இணைங்க மாட்டார்களென்று தெரிந்த பின் நிலைமைகள் வெகுவாக மாறியது. ஈழத்தமிழர்களை கொல்ல இந்திய அமைதிப்படையை (IPKF) அனுப்பியதிலிருந்து நிறைய சொல்லலாம். அதேநேரத்தில் தனது நோக்கம் தமிழகத்தில் பலத்த எதிர்ப்பை உண்டாக்கியதை அடுத்து ராஜீவ் காந்தியின் கொலையை காரணமாக காட்டி தமிழீழ மக்களை ஒடுக்கவும் தனது வன்மத்தை மறைக்கவும் அதனை பயன்படுத்தியது. 

இலங்கை எவ்வளவு தூரம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இருந்ததுவோ, அதே அளவு இந்திய அரசாங்கமும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. ஒரே வித்தியாசம், இலங்கை அரசாங்கத்தை விட, இந்தியா உலக அளவில் தன் ஆளுமையை செலுத்தக் கூடிய நாடாக இருந்தது. ஒரு வேளை இந்தியா விடுதலைப் புலிகளை ஆதரித்திருந்தால், தனித் தமிழீழத் தேசம் உருவாகியிருக்கக்கூடும்.

கொம்பனி வீதி இரவு விடுதி மோதல் – நால்வருக்கு விளக்க மறியல்!

கொம்பனி வீதியில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களும் ஏப்ரல் 1 ஆம் திகது வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

அதன்படி அவர்கள் நேற்று (26.03.25) கொழும்பில் உள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை இது தொடர்பாக யோஷித ராஜபக்ச கடந்த 25 ஆம் திகதி கொம்பனி வீதி பொலிஸ்சாரிடம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்திருந்ததுடன் இந்த மோதலில் சம்பவ இடத்தில் இருந்த ஒரு பாதுகாப்பு அதிகாரி தாக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை காயமடைந்த பாதுகாப்பு அதிகாரி கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மியான்மர் நிலநடுக்கத்தில் 1,002 பேர் பலி!

மியான்மர் நாட்டின் மையப் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 1002 பேர் உயிரிழந்ததாகவும், 2,376 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

30 பேரைக் காணவில்லை. மாண்டலே நகரில் மட்டும் 694 பேர் உயிரிழந்துவிட்டதாக மியான்மரின் ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் தடைபட்டதால் மியான்மரின் பெருநகரங்கள் பலவும் இருளில் மூழ்கின. மியான்மர் நாட்டின் ராணுவம் மற்றும் இதர துறைகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. 

தாய்லாந்திலும் நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நிலடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவும் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளன.அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றின்படி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி மியான்மர் நகரான சர்காயிங்-ன் வடமேற்கில் 16 கிலோமீட்டரில், அமைந்திருந்தது. 

இந்த பகுதி தலைநகர் நேபிடோவிற்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மியான்மரில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு 12 நிமிடங்களே ஆன நிலையில், மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டாவது ஏற்பட்ட நிலநடுக்கம் 6.4 ஆக பதிவானது. இதன் மையம், சர்காயிங்கிற்கு தெற்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நேபிடோவில் சாலைகள் சிதைந்திருப்பதை படங்கள் காட்டுகின்றன. நாட்டின் ராணுவ அரசு 6 பகுதிகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நிலநடுக்கம் மியான்மரை புரட்டிப் போட்டுள்ள நிலையில், அதன் ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் ஹிலெய்ங் உலக நாடுகளிடம் உதவி கேட்டுள்ளார். "எந்தவொரு நாடோ, அமைப்போ அல்லது தனி நபரோ மியான்மருக்கு வந்து உதவ விரும்பினால் வரவேற்கிறோம்." என்று அவர் தனது தொலைக்காட் உரையில் கூறியுள்ளார். அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏஷியான் ஆகியவை மியான்மருக்கு உதவ உறுதியளித்துள்ளன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு உதவுவதற்காக முதல் தொகுதி நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மியான்மரில் ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூச்சி இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்படவில்லை என்று பிபிசியின் பர்மியன் சேவைக்கு சிறைத்துறை அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். 

தலைநகரில் உள்ள சிறைச்சாலையில் சூச்சி பாதுகாப்பாக உள்ளார் என்று அந்த தகவல்கள் கூறுகின்றன. 2021-ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட சூச்சி, அது முதல் அங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 2023-ம் ஆண்டு வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்ட அவர் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சிவப்பு வணக்கம்

டிரம்பிற்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் பேரணி !!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு சீனா பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையன்று பங்குச் சந்தை ...