சனி, 17 அக்டோபர், 2026

யாழ் மாவட்டத்தில் மூன்று பிரதேச செயலக பிரிவில் 11.23 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிலும் பயன்பாட்டிலும் இருந்துவந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளன. இக் காணிகளை விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வைத்து யாழ். மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனிடம் கையளிக்கப்பட்டன. 

பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஒருங்கிணைப்பு அதிகாரி கேர்ணல் W.M.A.M. நிசங்கவினால் இவ் ஆவணங்கள் மாவட்ட செயலரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்து வைக்கப்பட்டன.


விடுவிக்கப்பட்ட காணிகளின் பிரதேச செயலகப் பிரிவு ரீதியான விபரம்:
 வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவு): 1.29 ஏக்கர் 

 நல்லூர் பிரதேச செயலகப் பிரிவு: 5.06 ஏக்கர் 

 வடமராட்சி கிழக்கு (மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவு): 4.88 ஏக்கர்

 இதற்கமைய, மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மொத்தம் 11.23 ஏக்கர் காணிகள் பொதுமக்களின் மீள்குடியேற்றம் மற்றும் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட்டு அதற்கான ஆவணங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் அருகே 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிய சொகுசுப் பேரூந்து!

புத்தளம் அருகே சொகுசுப் பேரூந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து புத்தளம் வழியாக அநுராதபுரம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சொகுசுப் பேரூந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த பேரூந்து புத்தளம் மற்றும் கருவலகஸ்வெவ பிரதேசங்களுக்கு இடைப்பட்ட மீஒய பாலத்தில் இருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடும் மழை காரணமாக பாதையில் வழுக்குப்பட்டு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தநிலையில் பேரூந்து மீஒய பாலத்தில் இருந்து பள்ளத்தில் பாய்ந்துள்ளது.

நாகப்பட்டினத்தில் 135 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த தவெக நிர்வாகி பதுக்கி வைத்திருந்த ரூ.135 கோடி மதிப்பிலான உயர் ரக போதை பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். 

ரூ.270 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத்தப்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். தவெக நிர்வாகி பூபாலன், அவரது கூட்டாளிகள் சுகன், சதீஷ், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

போதைப் பொருள் வழக்கில் நாகை சுங்கத்துறை அலுவலகத்தில் தவெக நிர்வாகியிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். நாகை சுங்கத்துறை அலுவலகத்தில் தவெக நிர்வாகி உள்ளிட்ட 4 பேரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். 

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு தஞ்சையில் உள்ள போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர்.

வெள்ளி, 16 அக்டோபர், 2026

செயற்கைக்கோள் இணைய சேவையில் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் போட்டி

செயற்கைக்கோள் இணைய சேவையில் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் போட்டியிடத் தயார் என ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை துவக்க சில தொழிலதிபர்கள் குறிப்பாக அம்பானி தடையாக இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் எங்கள் நிறுவனம் எப்போதும் போட்டியைக் கண்டு அஞ்சுவதில்லை; தகவல் தொடர்புத் துறையில் ஸ்டார்லிங்க் உட்பட எந்தவொரு நிறுவனத்துடனும் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும், போட்டியை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. 

இது தொடர்பான அறிக்கையில், 2016-ல் தொடங்கப்பட்ட எங்களின் ஜியோ, தற்போது 53 கோடிக்கும் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. ஜியோவின் செயற்கைக்கோள், இணைய சேவைக்கான அனுமதிகள் கூட இன்னும் நிலுவையில் தான் உள்ளன,

ஒன்றிய அரசின் ஒப்புதல்களுக்காகக் காத்திருக்கின்றன. என ரிலையன்ஸ் குறிப்பிட்டுள்ளது. ஜியோ உட்பட ஒவ்வொரு நிறுவனமும் இந்தியாவின் கொள்கை, சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான அனுமதி நடைமுறைகளையே பின்பற்றுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என ரிலையன்ஸ் கூறியுள்ளது. 

சமீபத்தில் எலான் மஸ்க் தனது 'எக்ஸ்' தளத்தில், முகேஷ் அம்பானி போன்ற இந்தியப் பெருநிறுவன அதிபர்கள் இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் வருகையைத் தடுத்து, தங்களது ஏகபோக உரிமையைப் பாதுகாக்க முயல்வதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

புடினை விட ஜெலன்ஸ்கியுடன் கையாள்வது ‘மிகவும் கடினம்’

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான எரிசக்தி போர்நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து, ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான உக்ரைனின் புதுப்பிக்கப்பட்ட தாக்குதல்களை டொனால்ட் டிரம்ப் ஒரு "அவமானம்" என்று அழைத்ததோடு, வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மீதான தனது விமர்சனத்தையும் புதுப்பித்துள்ளார். 

கடந்த வாரம் டிரம்பால் திடீரென அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தத்தை கீவ் கைவிடுவதாக ஜெலென்ஸ்கி கூறியதைத் தொடர்ந்து, உக்ரைன் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்கியது; அந்தப் போர்நிறுத்தத்திற்கு ரஷ்யாவோ அல்லது உக்ரைனோ தாங்கள் ஒப்புக்கொண்டதாகக் கூறவில்லை.“அவர் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையை உயர்த்துவது மட்டுமே செய்கிறார். 

இது மிகவும் கண்டிக்கத்தக்கது,” என்று அமெரிக்க அதிபர் வியாழக்கிழமை ஒளிபரப்பப்பட்ட ‘நியூஸ்மேக்ஸ்’ (Newsmax) ஊடகத்துடனான நேர்காணலில் தெரிவித்தார். “தாக்குதல் நடத்தக்கூடிய பல இலக்குகள் உள்ளன; ஆனால், டீசல் சுத்திகரிப்பு நிலையங்களை அதாவது டீசல் தயாரிக்கப்படும் இடங்களை தாக்கும்போது, ​​அது உலகிற்குத் தேவையான ஒரு பொருளைப் பாதிப்பதாக அமைகிறது. 

இது உலகிற்குச் செய்யப்படும் எந்த நன்மையும் அல்ல.” கடந்த வாரம், ரஷ்யா உலகச் சந்தைகளில் பெருமளவில் டீசலை விநியோகிக்கும் என்ற நிபந்தனையின் பேரில், அந்த நாட்டின் மீதான தடைகளை டிரம்ப் தளர்த்தியதைத் தொடர்ந்து, கீவ் (உக்ரைன்) மற்றும் வாஷிங்டன் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தத்தை விமர்சித்த ஜெலன்ஸ்கி, இது அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக எரிபொருள் விலையைக் குறைப்பதற்கான முயற்சி என்று பரவலாகக் கருதப்படுகிறது என்றார். மேலும், இந்த ஒப்பந்தம் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் முழு அளவிலான படையெடுப்பைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல அந்த நாட்டிற்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.மோதலில் ஈடுபட்டுள்ள இரு தலைவர்கள் குறித்த தனது கருத்துக்களை டிரம்ப் நியூஸ்மேக்ஸிடம் மீண்டும் தெரிவித்தார். 

"நான் ஜெலென்ஸ்கியின் பெரிய ரசிகன் அல்ல," என்று டிரம்ப் கூறினார். "உண்மையில் அவர்கள் இருவருமே இந்த மோதல் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புவார்கள் என நான் நினைக்கிறேன், ஆனால் புட்டினைக் காட்டிலும் ஜெலென்ஸ்கியைக் கையாள்வது மிகவும் கடினம் என்று நான் கருதுகிறேன்.

" ஸ்டார்லிங்க் சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டதாக உக்ரைன் இந்த வாரம் அறிவித்ததால், வாஷிங்டனுடனான கீவ்வின் உறவு மேலும் மோசமடைந்தது. இது, ஒரு நொடியில் உக்ரைனின் ஆளில்லா விமானத் தாக்குதல் பணிகளையும் முக்கியமான வான் பாதுகாப்புகளையும் முடக்கியது. 

இந்த வாரம் லண்டன் சென்றிருந்தபோது, ​​ஸ்டார்லிங்க் திடீரெனக் கட்டுப்படுத்தப்பட்டதால், டிரம்பால் தனிப்பட்ட முறையில் தான் காட்டிக்கொடுக்கப்பட்டதாக உணர்வதாகவும், ஒரு கூட்டாளியை இழந்ததற்காக வருந்துவதாகவும் உக்ரைனிய அதிபர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் ரூ. 8.5 கோடி, சொத்து பணம் முடக்கம்

போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரூ. 8.5 கோடிக்கும் அதிக பெறுமதியான பணமும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, யாழ்ப்பாண நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள 15 மில்லியன் ரூபாய் பணமும், யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 70 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான இரு மாடி வீடொன்றுமே இவ்வாறு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. 

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவுகள் நேற்று (15) முதல் 14 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது கடந்த 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி யாழ்ப்பாண விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளினால் 15 மில்லியன் ரூபாய் பணம், லொறி ஒன்றுடன், 5 பேரையும் கைது செய்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

இதுதொடர்பாகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில், யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேக நபரொருவர், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய பணத்தைக் கொண்டு 7 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான இரு மாடி வீட்டை நிர்மாணித்துள்ளமை தெரியவந்துள்ளது.

 இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.

வியாழன், 15 அக்டோபர், 2026

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு இணையாக “குமுதினி படுகொலை”.

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு இணையாக ஈழத்தமிழர் வரலாற்றில் இன்றும் மறக்கமுடியாமல் இருப்பது “85ம் ஆண்டு நிகழந்த ஒரு கோரமான படுகொலை. ! 


அதன் பெயர் “குமுதினி படுகொலை”. 1985ல் வடமாகாணத்தையே உலுக்கிய கோரப்படுகொலை அது. குமுதினி படகுப் படுகொலை( Kumutini boat massacre) என்பது இலங்கையின் உள்நாட்டுப் போர்க் காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக நடுக்கடலில் நிகழ்த்தப்பட்ட ஒரு மிக கொடூரமான கூட்டுப் படுகொலையாக ஆண்டாண்டு நினைவு கூருகிறோம். 

இந்த படுகொலையை யார் நிகழ்ந்தியது என்பதை தெரிந்து கொண்ட நாம் இந்த படுகொலை ஏன் நிகழ்த்தப்பட்டது என்பது பற்றி பலர் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை, வாருங்கள் அந்த வரலாற்றை பார்க்கலாம்.

1984 இன் இறுதியில் இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்ற ராஜீவ் காந்தி, தனது தாயார் இந்திரா காந்தியின் கொள்கைகளில் இருந்து சற்றே மாறுபட்டு, இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வை விட அரசியல் ரீதியான தீர்வையே விரும்பினார். 

 இதனால், இலங்கையில் மோதல்களை நிறுத்தவும், பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் அவர் தீவிரமாக முயன்றார். ஆனால் ஜேஆர் பெரிதாக பணியவில்லை, ஜேஆரை தமது வழிக்கு கொண்டுவர “றோ”களத்தில் இறங்கியது. 

1980களின் தொடக்கத்தில் (1983-1984 காலப்பகுதியில்) இந்தியாவின் உளவு அமைப்பான 'றோ' (R&AW) தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சியும் உதவிகளையும் வழங்கியது என்பது வரலாற்று உண்மை. 

“றோ” பயிற்சி வழங்கியதன் உண்மையான நோக்கமே போராளிகளை வைத்து இலங்கை அரசிற்கு தலைவலி கொடுப்பதற்காக தான். அன்றைய இயக்கங்களான புலி, ரெலோ , புளட், ஈரோஸ் ஈபிஆர்ரெல்எப் போன்ற இயக்கங்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் இந்திய “றோ”வால் கொடுக்கப்பட்டது. 

 அதன் அறுவடையாக அன்றைய காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தின் மீது அனைத்து போராளிக் குழுக்களாலும் பரவலாக தாக்குதல் நடாத்தப்பட்டது. 1985 மே 9 ஆம் திகதி, டெலோ (TELO) அமைப்பின் தளபதி “மீசோ”என்பவரின் தலைமையில் வவுனியா - கிளிநொச்சி எல்லையிலிருந்த கொக்காவில் இராணுவ முகாம் மீது ஒரு பாரிய தாக்குதல் நடத்தப்பட்டது.

அரசாங்கத் திணைக்களத்திற்குச் சொந்தமான இரு புல்டோசர்களை (Bulldozers) கடத்திய டெலோ போராளிகள், அவற்றை குண்டு துளைக்காத வாகனங்களாகவும், கண்ணிவெடி அகற்றும் வாகனங்களாகவும் மாற்றி முகாமிற்குள் புகுந்தனர். 

இந்தத் துணிச்சலான நேருக்கு நேர் மோதலில் 48 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் தளபதி மீசோ உட்பட 9 டெலோ போராளிகளும் மரணமடைந்தனர். 

மே மாதப் பகுதியில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ விநியோகப் பாதைகளைத் துண்டிக்கும் நோக்கில் கண்ணிவெடித் தாக்குதல்களையும், அரச உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தும் நடவடிக்கைகளையும் EROS மேற்கொண்டது. 

உமாமகேஸ்வரன் தலைமையிலான plote அமைப்பு, அந்த காலகட்டத்தில் மிக அதிகமான எண்ணிக்கையிலான போராளிகளைக் கொண்ட இயக்கமாக இருந்தது.

1985 மே மாதத்தில், இலங்கை இராணுவத்தினர் தமிழ் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக மன்னார், செட்டிக்குளம் மற்றும் வவுனியா பகுதிகளில் plote அமைப்பினர் இராணுவ ரோந்து அணிகள் மீது தொடர்ச்சியான மறைந்திருந்து தாக்கும் (Ambush) உத்திகளைக் கையாண்டனர். 

மன்னார் மற்றும் காரைநகர் கடற்படைத் தள எல்லைகளில் பாதுகாப்புப் படையினரின் நகர்வுகளை முடக்குவதற்கான தாக்குதல்களில் ஈபிஆர்எல்எஃப் ஈடுபட்டது. மேலும், மட்டக்களப்பு மற்றும் கிழக்கு மாகாணப் பகுதிகளில் இராணுவத்தினருக்குத் தகவல் வழங்கும் ஒற்றர்களைக் குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தினர். 

அவ்வாறு அனைத்து இயக்கங்களும் வெவ்வேறாக நின்றாலும் ஒரு பொது எதிரியை எதிர்த்து சண்டையிட்டனர். புலிகளும் சிறு சிறு தாக்குதல் நடாத்தினார்கள், அதில் முக்கியமான தாக்குதல் வல்வெட்டித்துறையில் மே 12 அன்று இராணுவ ரோந்து அணி மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் ஒரு இராணுவ அதிகாரி உட்பட 10 சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். 

இந்த தாக்குதலுக்கு பழிவாங்கவே வல்வை நூலகப் படுகொலை ( செம்மீன் சனசமூக நிலையம்) மற்றும் ஊறணிபடுகொலை போன்ற படுகொலைகள் 1985 மே 10-12 ஆம் திகதிகளில் இலங்கை இராணுவத்தினரால் நடத்தப்பட்டது.

அப்பகுதியில் இருந்த சுமார் 70 தமிழ் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை இராணுவத்தினர் வலுக்கட்டாயமாக ஒன்றுதிரட்டி, வல்வெட்டித்துறை நகரின் பொது நூலகக் கட்டடத்திற்குள் செல்லுமாறு பணித்தனர். 

பின்னர் அந்த நூலகக் கட்டடத்தை வெடிவைத்துத் தகர்த்ததன் மூலம் அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு முன்னர் இன்னொரு சம்பவத்தை இங்கு குறிப்பிட வேண்டும், 

ரோவிற்கு இராணுவத்தை தாக்குவதை விட சிங்களபகுதிகளில் மக்களை தாக்கி கொல்வதையே விரும்பியது. ஜேஆருக்கு அழுத்தம் கொடுக்க சிங்கள மக்கள் மீது பாரிய கொலைவெறித்தாக்குதல் ஒன்றை நிகழ்த்தினால் மட்டுமே ஜேஆரை பணிய வைக்க முடியும் என திட்டமிட்டு இத்தாக்குதலை செய்ய முதலில் ploteஐ அணுகியது ரோ. 

இதற்கு திட்டவட்டமாக மறுத்துவிட்டார் உமாமகேஸ்வரன், சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டம் இல்லை எமது போராட்டம் என உறுதியாக கூறிவிட்டார், அதன்பின்னர் புலிகளை அணுகி அவரை மாபெரும் சிங்கள படுகொலை நிகழ்த்த வேண்டும் என கேட்டனர், 

அதற்கு புலிகள் கூலியாக ஆயுதமும் பணமும் கேட்டனர் . ரோவும் பணமும் ஆயுதமும் வழங்கியது. படுகொலைக்கான சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தனர் புலிகள். 1985 மே 12 அன்று வல்வை நூலகப்படுகொலை இடம் பெற்றது. தாக்குதலில், நூலகக் கட்டடத்திற்குள் போராளிகள் என சந்தேகத்தின் பேரில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 70 தமிழ் பொதுமக்கள்(பெரும்பான்மையானோர் இளம் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள்) உடல் சிதறிப் பலியாயினர். 

இந்த வல்வை நூலக படுகொலைக்கு பழிவாங்குவது என்ற போர்வையிலேயே லெப்டினட் கேணல் விக்டர் தலமையில் ஒரு கொலைவெறிக் கும்பல் அநுராதபுரத்திற்கு அனுப்பபட்டனர். 

அநுராதபுரப் படுகொலை(Anuradhapura massacre) என்பது 1985 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அநுராதபுர நகரை கலங்கடித்த சிங்களப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட ஒரு கொடூரமான கொலைவெறித் துப்பாக்கித் தாக்குதல். 

இலங்கையின் உள்நாட்டுப் போரின் வரலாற்றில், தமிழ் ஆயுதக் குழுக்களால் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிக்கு வெளியே நடத்தப்பட்ட முதல் பெரிய மற்றும் மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆயுததாரிகள், விக்டர் தலமையில் வவுனியாவில் ஒரு அரசுப் பேருந்தைக் கடத்தி, இராணுவ சீருடையில் அநுராதபுர நகருக்குள் நுழைந்தனர். அநுராதபுரம் பிரதான பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த அவர்கள், பேருந்துக்காகக் காத்திருந்த பொதுமக்கள் மீது தானியங்கி ஆயுதங்களால் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

அதன் பின்னர், பௌத்தர்களின் புனிதத் தலமான ஜெய ஸ்ரீ மகா போதி வளாகத்திற்குள் சென்று, அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பௌத்த துறவிகள், கன்னியாஸ்திரிகள் மற்றும் பொதுமக்கள் மீதும் கடுமையான துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தி கொன்று குவித்தனர். 

அநுராதபுர நகரை விட்டு வெளியேறும் போது, வில்பத்து தேசிய பூங்காவிற்குள் புகுந்து அங்கிருந்த 23 வனவிலங்குத் துறை ஊழியர்களையும் அவர்கள் படுகொலை செய்தனர். 

இந்தத் கொடூரத் தாக்குதலில் மொத்தம் 146 சிங்களப் பொதுமக்கள் மற்றும் பௌத்த யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர்.நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பிரபாகரனின் உத்தரவின் பேரில், மன்னார் மாவட்டத்தின் அப்போதைய தளபதிகளான விக்டர் மற்றும் ராதா ஆகியோரின் வழிநடத்தலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

எவ்வாறாயினும், இத்தாக்குதலில் முக்கியத் திட்டமிடல் அல்லது களப் பங்களிப்புகளில் விடுதலைப் புலிகளின் மற்றொரு மூத்த தளபதியான லெப். கேணல் புலேந்திரன் (அக்டோபர் 1987-ல் பலாலியில் சயனைட் அருந்தி மரணமடைந்தவர்) உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெறுகிறது. இந்த ஒரு படுகொலை சிங்களவர்களை மேலும் ஆத்திரம் அடைய வைத்தது. அநுராதபுர தாக்குதல் நடந்து அடுத்த நாளே 1985 மே 15 அந்த கோரமான பழிவாங்கல் நடவடிக்கை ஒன்று வடக்கில் நிகழ்ந்தது. 

அதுதான் “ குமுதினி படுகொலை”. 1985 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கும் புங்குடுதீவுக்கும் (குறிகாட்டுவான்) இடையே பயணித்த பொதுமக்கள் போக்குவரத்துப் படகான 'குமுதினி'யில் இருந்த தமிழ் பயணிகள் மீது நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதலே “குமுதினிப் படுகொலை”. 1985 மே 15 அன்று காலை 7:15 மணியளவில் நெடுந்தீவு மாவலித் துறைமுகத்திலிருந்து சுமார் 64 முதல் 72 வரையிலான பயணிகளுடன் குமுதினி படகு யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டது. 

தீவுப் பகுதி மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கும் அத்தியாவசியப் போக்குவரத்துக்கும் இந்தப் படகே உயிர்நாடியாக விளங்கியது. படகு புறப்பட்டுச் சுமார் அரை மணி நேரத்தில், நயினாதீவு அருகே நடுக்கடலில் வந்துகொண்டிருந்தபோது, சிவிலியன் உடையில் (Plain clothes) வந்த இலங்கைக் கடற்படையினர் 6 பேரைக் கொண்ட குழுவினர் கண்ணாடி இழை ( fibre glass)விசைப்படகில் வந்து குமுதினியை வழிமறித்தனர். 

துப்பாக்கிகளைக் காட்டிப் பயணிகளை மிரட்டிய அவர்கள், படகின் எஞ்சின் பகுதிக்கு அருகில் இருந்த பலகைகளை அகற்றி 4 அடி ஆழமான ஒரு குழியை உருவாக்கினர். அதன் பின்னர் பயணிகள் ஒவ்வொருவராகப் படகின் மேல் தளத்திற்கு (Deck) அழைக்கப்பட்டனர்.

 உள்ளே அழைக்கப்படுபவர்கள் வெட்டப்படும் போது எழும் மரண ஓலம் மற்றும் அலறல் சத்தம் மற்றவர்களுக்குக் கேட்கக் கூடாது என்பதற்காக, "உங்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சத்தமாகச் சொல்லுங்கள்" என அரைகுறைத் தமிழில் கடற்படையினர் கட்டளையிட்டனர். 

துப்பாக்கிகள் இருந்தபோதிலும், சத்தம் வெளியே கேட்கக் கூடாது என்பதற்காகக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் முக்கோண கூர்க்கா கத்திகள்( Triangular Blade Knife / Tri-dagger), கோடலிகள் மற்றும் இரும்புக்கம்பிகளைப் பயன்படுத்திப் பயணிகளை கொடூரமாக வெட்டியும் குத்தியும் படுகொலை செய்து அந்த எஞ்சின் குழிக்குள் தள்ளினர். 

சிலர் நடுக்கடலில் குதித்துத் தப்பிக்க முயன்ற போது அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகமும் செய்யப்பட்டது. இந்தத் கொடூரத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் மதப் பெரியவர்கள் எனப் பாகுபாடின்றி 36 தமிழ் பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டனர். 

இந்த குமுதினிப் படுகொலை சர்வதேச அளவில் கண்டனங்களைப் பெற்ற இந்த நெஞ்சை உறைய வைக்கும் படுகொலை என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமே இல்லை, ஆனால் இந்த படுகொலைக்கான காரணம் புலிகளின் அநுராதபுர வெறியாட்டத்திற்கான பழிவாங்கல் என்ற உண்மையை எம்மவர்கள் உணர மறுக்கின்றனர். 

 ஒன்றும் செய்யாத அப்பாவிகளான எம்மை குறிவைத்து சிங்களவர்கள் தாக்குகிறார்கள் என உலகின் முன் கண்ணீர் வடிக்கிறோம். ஆனால் முதலில் குளவிக்கூட்டில் கல்லெறிந்தது நாமே என்ற உண்மைகளை வெளியுலகிற்கு மூடி மறைக்கிறோம். 83 ஜூலை கலவரத்திற்கும் முதலில் கல்லெறிந்தது நாம் என்பதை ஒத்துக் கொள்ள மறுக்கிறோம். போர் என்றால் இராணுவத்திற்கும் போராளிகளுக்கும் இடையே நடப்பது, இந்தியாவின் நலனுக்காக ஆயுதம் பணம் வாங்கி கொலை செய்யும் கூலிப்படையாக மாறி புலிகள் செய்த முட்டாள்த்தனமான செயல் அப்பாவி சிங்கள மக்களை கொன்றது. 

அந்த கோரவெறியாட்டத்தின் பின்னர் பழிவாங்கும் இராணுவத்தின் வெறியாட்டங்களும் தொடர்ந்தன. இனவிடுதலைக்காக புறப்பட்ட புலிகள் இயக்கம் மட்டும் எதற்காக சிங்கள மக்களை குறி வைக்க வேண்டும்?

ஒட்டுக்குழு, துரோகிகள், என புலிகளால் முத்திரை குத்தப்பட்ட ரெலோ புளட், ஈரோஸ், ஈபிஆர்எல்எப் போன்ற மாற்றியத்தினரிடம் இருந்த மனிதாபிமானம் சிங்கள மக்களை கொல்லும் விடயத்தில் புனிதர்கள் என்று தம்மைத்தாமே வர்ணித்த புலிகளிடம் ஒரு துளி கூட இருந்ததில்லை. 

இந்த மனிதாபிமானமற்ற தன்மையே அவர்களை முற்றாக அழிக்கப்பட காரணமாக இருந்தது. புலிகளின் அழிவு என்பது முள்ளிவாய்க்காலில் அல்ல…

புலிகளின் அழிவு என்பது எப்பொழுது அப்பாவி பொதுமக்களையும் சகோதர இனத்தவர்களையும் கொல்லத் தொடங்கினரோ அப்போதே அவர்களின் அழிவும் ஆரம்பித்து விட்டது. வரலாறு என்பது ஒருபோதும் ஒரு பக்கமானது அல்ல, அது வெற்றியாளர்களின் புகழ்பாடுவதோ அல்லது ஒரு தரப்பின் வலிகளை மட்டும் நியாயப்படுத்துவதோ அல்ல.

 1985 மே மாதத்தில் நிகழ்ந்த இந்தச் நெடிய தொடர் படுகொலைகள் வல்வெட்டித்துறை நூலகத் தாக்குதல், அநுராதபுரக் கொலைவெறியாட்டம் மற்றும் அதன் நேரடித் தாக்கமாக அரங்கேறிய ‘குமுதினி’ நடுக்கடல் படுகொலை என்பவை ஈழத் தமிழர் வரலாற்றில் ஆற்றொணாத் துயரத்தையும், அதேவேளை அரசியல்ரீதியான கசப்பான உண்மைகளையும் எஞ்சவிட்டுச் சென்றுள்ளன. 

போர்க்களத்தில் எதிரியை எதிர்கொள்வது போராட்டம், ஆனால், பாதுகாப்பற்ற அப்பாவிப் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்கப்படும் எச்செயலும் எத்தகைய காரணங்களைக் கூறினாலும் அது வரலாற்றின் முன்னால் குற்றமே. 

 ஒரு தரப்பின் தவறான வியூகங்களும், இலக்குத் தப்பிய வன்முறைகளும் மறுபுறம் இன்னும் கோரமான பழிவாங்கல்களுக்குத் தீனிபோட்டு, இறுதியில் சொந்த இனத்தின் எளிய மக்களின் உயிர்களையே நடுக்கடலில் பலிகொடுத்தது. "வரலாற்றின் பிழைகளை மறைக்காமல், உண்மைகளைத் தைரியமாக எதிர்கொள்ளும் போதே அடுத்த தலைமுறைக்கான சரியான பாதையை நாம் வடிவமைக்க முடியும்.

" முள்ளிவாய்க்காலில் வந்து முடிவடைந்த பேரிழப்புகளின் வித்துக்கள் எங்கே தூவப்பட்டன என்பதைப் புரிந்துகொள்ள இதுபோன்ற வரலாற்றுப் பக்கங்களை நடுநிலையோடு வாசிப்பது அவசியமானது. 

படுகொலைகளின் வலிகளைச் சுமக்கும் அதேவேளை, வன்முறை எப்போதுமே நிரந்தர விடுதலையைத் தராது என்ற வரலாற்றுப் பாடத்தை உணர்ந்து, மனிதாபிமானமும் அறமும் சார்ந்த பாதையில் மட்டுமே எமது வரலாற்றின் எதிர்காலம் பயணிக்க வேண்டும்.

இது ஒரு முகப்புத்தகத்தின் பிரதியாக்கம்.

முகிந்தன் துரைராஜசிங்கம்

Thank You Google

Thank You Google
Thanks