சனி, 29 மார்ச், 2025

மியான்மர் நிலநடுக்கத்தில் 1,002 பேர் பலி!

மியான்மர் நாட்டின் மையப் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 1002 பேர் உயிரிழந்ததாகவும், 2,376 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

30 பேரைக் காணவில்லை. மாண்டலே நகரில் மட்டும் 694 பேர் உயிரிழந்துவிட்டதாக மியான்மரின் ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் தடைபட்டதால் மியான்மரின் பெருநகரங்கள் பலவும் இருளில் மூழ்கின. மியான்மர் நாட்டின் ராணுவம் மற்றும் இதர துறைகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. 

தாய்லாந்திலும் நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நிலடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவும் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளன.அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றின்படி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி மியான்மர் நகரான சர்காயிங்-ன் வடமேற்கில் 16 கிலோமீட்டரில், அமைந்திருந்தது. 

இந்த பகுதி தலைநகர் நேபிடோவிற்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மியான்மரில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு 12 நிமிடங்களே ஆன நிலையில், மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டாவது ஏற்பட்ட நிலநடுக்கம் 6.4 ஆக பதிவானது. இதன் மையம், சர்காயிங்கிற்கு தெற்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நேபிடோவில் சாலைகள் சிதைந்திருப்பதை படங்கள் காட்டுகின்றன. நாட்டின் ராணுவ அரசு 6 பகுதிகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நிலநடுக்கம் மியான்மரை புரட்டிப் போட்டுள்ள நிலையில், அதன் ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் ஹிலெய்ங் உலக நாடுகளிடம் உதவி கேட்டுள்ளார். "எந்தவொரு நாடோ, அமைப்போ அல்லது தனி நபரோ மியான்மருக்கு வந்து உதவ விரும்பினால் வரவேற்கிறோம்." என்று அவர் தனது தொலைக்காட் உரையில் கூறியுள்ளார். அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏஷியான் ஆகியவை மியான்மருக்கு உதவ உறுதியளித்துள்ளன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு உதவுவதற்காக முதல் தொகுதி நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மியான்மரில் ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூச்சி இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்படவில்லை என்று பிபிசியின் பர்மியன் சேவைக்கு சிறைத்துறை அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். 

தலைநகரில் உள்ள சிறைச்சாலையில் சூச்சி பாதுகாப்பாக உள்ளார் என்று அந்த தகவல்கள் கூறுகின்றன. 2021-ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட சூச்சி, அது முதல் அங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 2023-ம் ஆண்டு வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்ட அவர் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

காசா ரஃபாவில் ஐ.டி.எஃப் தரைவழி நடவடிக்கையைத் தொடங்கியது

ஐ.டி.எஃப் துருப்புக்கள் ரஃபாவில் தரைவழி நடவடிக்கையைத் தொடங்கின, அதனுடன் பல மணி நேரங்கள் தொடர்ந்த ஏராளமான வான்வழித் தாக்குதல்களும் நடந்தன. அ...