உயர் நீதிமன்ற நீதிபதிகள் முர்து பெர்ணான்டோ, யசந்த கொதாகொட இந்த தீர்ப்பை இன்று (ஜூலை 23) வழங்கினர்.
அப்போதைய பதில் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 02வது சரத்தின் ஊடாக அமல்படுத்திய அவசரகால சட்டமானது, தன்னிச்சையான மற்றும் அதிகாரமற்ற தீர்மானம் என, உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வில் குழாமில் பெரும்பான்மையான நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
எனினும், பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவினால் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தின் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறப்படவில்லை என, மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வில் இருந்த நீதிபதி அர்ஜீன ஒபேசேகர தனது தீர்ப்பை அறிவித்திருந்தார்.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் மற்றும் லிபரல் இளையோர் அமைப்பு ஆகியோரினால் இந்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இலங்கையில் 2022ம் ஆண்டு பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்திலேயே இந்த பொருளாதார நெருக்கடி கடுமையான தாக்கத்தை நாட்டில் ஏற்படுத்தியது.
அரிசி, பால்மாவு, எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதுடன், பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்திருந்தது.
இந்த நிலையில், அப்போதைய ஆட்சியாளரான கோட்டாபய ராஜபக்ஸவின் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டங்களை ஆரம்பித்திருந்தனர்.
''இந்த தீர்ப்பின் ஊடாக ரணில் விக்ரமசிங்கவுக்கு பாதிப்பு ஏற்படாது. அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக நஷ்ட ஈடுகளை செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்படலாம். அது வேறொரு விடயம். நான் அறிந்த விதத்தில் இந்த தீர்ப்பின் ஊடாக ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட போவதில்லை.'' என மூத்த வழக்கறிஞர் யூ.ஆர்.டி.சில்வா தெரிவிக்கின்றார்.
பதில் ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் ரணில் விக்ரமசிங்கவினால் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டமையின் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில், அந்த தீர்ப்பானது அடுத்து பதவிக்கு வரும் ஜனாதிபதிகளுக்கு பாரிய சவாலானதாக அமையும் என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர், சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
''அவசரகால சட்டத்தை போராட்ட காலத்தில் அமல்படுத்தியமையினால், பெரும்பாலானோர் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. இது சட்டவிரோதமானது என்ற நிலையிலேயே நீதிமன்றத்தை நாடியிருந்தனர். 2022ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தின் ஊடாக, 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் 12ஃ1 சரத்தின் கீழ் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக பலர் கூறியிருந்தனர்.
ஏனென்றால், இந்த இடத்தில் பாரிய போராட்டங்கள், மக்கள் ஒன்று கூடல்கள் இருக்கவில்லை. தேவையேற்படும் பட்சத்தில் கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தியிருக்கலாம். மேல் மாகாணத்திற்கு மாத்திரம் அவசரகால சட்டத்தை அமல்படுத்தயிருக்கலாம்.
நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டிருக்கலாம். எனினும், நாடு முழுவதும் அவசரகால சட்டம் அமல்படுத்தியமையினாலேயே பிரச்னை ஏற்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு மிக முக்கியமானது. முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த தீர்ப்பின் ஊடாக வழக்கின் கட்டணத்தை மாத்திரமே செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. அவருக்கு இல்லாது போவதற்கு ஒன்றும் இல்லை.'' என அவர் குறிப்பிடுகின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக