வியாழன், 24 ஜூலை, 2025

மலையகம் நானுஓயாவில் மண் மற்றும் கற்பாறைகள் சரிவு!!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா உடரெதல்ல மேற்பிரிவு தோட்டத்தின் குடியிருப்பு பின்புறத்தில் உள்ள மலையிலிருந்து பாரிய மண்மேட்டுடன் கற்பாறைகள் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் வாழும் 7 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த குடியிருப்புகளில் பின்னால் இருந்த கற்பாறைகள் மண்மேடோடு சரிந்துள்ளமையினால் குடியிருப்புகளில் இருந்த எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லையெனவும் தெரிவித்தனர். 

 நானுஓயா உடரெதல்ல மேற்பிரிவு தோட்டத்தில் கடந்த 19 ஆம் திகதி அதிகாலை முதல் இன்று (23) வரை சிறிது சிறிதாக மண்மேடுடன் கற்பாறைகள் சரிந்து வீடுகளுக்கு அருகில் இருந்த ஆட்டுத் தொழுவத்தில் விழுந்ததால் ஆடு ஒன்றும் இறந்து போனதாகவும் ஆட்டுத் தொழுவமும் கடுமையாக சேதமாகியுள்ளன.

 தொடர்ந்தும் மழையுடன் காலநிலை நீடிக்கும் பட்சத்தில் குறித்த பகுதியில் மண்மேட்டுடன் கற்பாறைகள் சரிந்து வீழுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும், இரவு நேரங்களில் சிறு பிள்ளைகளை வைத்துக்கொண்டு மழை காலங்களில் உயிர் அச்சத்துடன் வாழ்வதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். 

 அண்மையில் சரிந்து விழுந்த கற்களும் ஆங்காங்கே ஆபத்தான நிலையில் தேங்கி நிற்பதை காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பாக பிரதேசத்திற்கு பொருப்பான கிராம உத்தியோகத்தர் ஊடாக நுவரெலிய பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks