வியாழன், 24 ஜூலை, 2025

"ஒரு பை மாவுக்கு உயிரையும் கொடுப்பேன்"-காஸா மக்கள்

"வீட்டுக்கு ஒரு பை மாவு கொண்டுவந்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் நான் விநியோக இடத்தை அடைந்தேன். ஆனால் அங்கு சென்ற போது என்ன செய்வது என எனக்கு தெரியவில்லை . "காயமடைந்தவர்களை காப்பாற்ற முயற்சிப்பதா, உயிரிழந்தவர்களை தூக்கிச் செல்வதா அல்லது மாவைத் தேடுவதா? எனது குழந்தைகள் உணவு உட்கொள்ள ஒரே ஒரு பை மாவை வீட்டுக்கு கொண்டு செல்ல முடியும் என்றால் நான் மரணத்தை ஏற்றுக்கொண்டிருப்பேன் என இறைவன் மீது ஆணையாகச் சொல்கிறேன்.

"மக்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற சர்ச்சைக்குரிய காஸா மனிதநேய அறக்கட்டளை (GHF) விநியோகிக்கும் உதவியை மட்டுமே நம்பியுள்ள நிலையில், ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி, உதவி மையங்கள் அருகே கொலைகள் எல்லாம் காஸாவில் கவலையளிக்கும் பிரச்னைகளாகி வருகின்றன. "காஸா மனிதநேய அறக்கட்டளை (GHF) மே 27ஆம் தேதி செயல்படத் தொடங்கியதிலிருந்து, காஸாவில் உணவு பெற முயன்றபோது 1,000-த்திற்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்," என்கிறார் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் தமீன் அல்-கீதான்.

"ஜூலை 21ஆம் தேதி வரை காஸாவில் உணவை பெற முயன்றபோது 1,054 பேர் கொல்லப்பட்டதாக நாங்கள் பதிவு செய்திருக்கிறோம், இதில் 766 பேர் காஸா மனிதநேய அறக்கட்டளை அமைந்துள்ள இடங்களுக்கு அருகிலும், 288 பேர் ஐநா மற்றும் பிற மனிதநேய அமைப்புகளின் உதவி வாகனங்களுக்கு அருகிலும் கொல்லப்பட்டுள்ளனர்," என அவர் பிபிசி உலக சேவையிடம் தெரிவித்தார்.மே மாத இறுதியில் தெற்கு மற்றும் மத்திய காஸாவில் பல உதவி மையங்களில் குறைவான அளவு உதவிகளை வழங்கி காஸா மனிதநேய அறக்கட்டளை தனது செயல்பாடுகளை தொடங்கியது. 

அதற்கு முன்பு 11 வாரங்கள் இஸ்ரேல் காஸாவை முடக்கி எந்த உணவையும் அந்தப் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை.கடந்த 72 மணி நேரத்தில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் அந்தப் பகுதியில் 21 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக காஸா நகரில் செயல்படும் ஷிபா மருத்துவமனையின் இயக்குநர் முகம்மது அபு சல்மியா சொல்கிறார். 

 காஸாவில் சுமார் 900,000 குழந்தைகள் பட்டினியால் வாடுவதாகவும், அவர்களில் 70,000 பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கவலையளிக்கும் எண்ணிக்கையில் இறப்புகளை சந்திப்பதாகவும், குறிப்பாக நீரிழிவு மற்றும் சிறுநீரக நோயாளிகள் அபாயத்தில் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

கடந்த 48 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 33 பேர் உயிரிழந்திருப்பதாக ஹமாஸ் தலைமையிலான சுகாதார அமைச்சகத்தை சேர்ந்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். 2023-ஆம் ஆண்டு போர் தொடங்கியது முதல் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்பட்ட இறப்புகள் 101-ஆக உள்ளன, இதில் 80 பேர் குழந்தைகள் என்று அவர்கள் மேலும் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks