இதுகுறித்து ஐரோப்பாவில் அச்சம் எழுந்துள்ளது. ஆனால், வளைகுடா அரபு நாடுகள் டிரம்பை ஸ்திரத்தன்மைக்கான சக்தியாக பார்க்க முனைகின்றன.
அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரபு செய்தி ஊடகத்தில் வெளியான கட்டுரையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய வணிகத் தலைவர் கலாஃப் அல்-ஹப்தூர் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார். "மத்திய கிழக்கில் பாதுகாப்பு மிக முக்கியமானது.
இதற்காக உடன்பாடுகளை வலுப்படுத்துவதிலும், தீவிரவாதச் சக்திகளைக் கட்டுப்படுத்துவதிலும் டிரம்ப் கவனம் செலுத்துவார். இது முன்னோக்கிச் செல்லும் வழியை வழங்குகிறது."
சௌதி அரேபியா ஜோ பைடனை விட டிரம்பை சாதகமானவராகப் பார்க்கிறது.
கடந்த 2017-ஆம் ஆண்டு டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு ரியாத்தை தேர்ந்தெடுத்தார். அமெரிக்காவின் பெரும் பணக்காரரும் முதலீட்டாளருமான ரூபர்ட் முர்டோக் இந்த யோசனையை வழங்கி, அதனை நடத்தினார் என்று கூறப்படுகிறது.
தனது மருமகன் ஜாரெட் குஷ்னர் மூலம், சௌதி அரேபிய ஆட்சியாளரான பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் டிரம்ப் நட்பு கொண்டிருக்கிறார்.
சௌதி அரேபியாவின் மனித உரிமைகள் மீறல்களுக்காக அந்நாட்டை ஒதுக்கி வைக்க வேண்டும் என ஜோ பைடன் கூறியதை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மன்னிக்கவுமில்லை மறக்கவுமில்லை.டொனால்ட் டிரம்புக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலுள்ள உறவின் வரலாறு கலவையான ஒன்று.
ஒருபுறம், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்ததன் மூலமும், ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகளை இஸ்ரேல் கைப்பற்றியதை அங்கீகரித்ததன் மூலமும், டிரம்ப் இஸ்ரேலை மகிழ்வித்தார், அரபு நாடுகளை வருத்தப்படுத்தினார்.
ஆனால் அவர் 2020-இல் ஆபிரகாம் உடன்படிக்கையை கொண்டுவந்தார். இது, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மொராக்கோ ஆகிய நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே முழு ராஜதந்திர உறவுகளை நிறுவியது, சூடானை அதற்கு ஒப்புக்கொள்ள வைத்தது.
டிரம்ப் இரான் மீது மூர்க்கத்தனமாக இருந்தார். இப்போதும் அப்படித்தான் இருக்கிறார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு, கூட்டு விரிவான செயல் திட்டம் (Joint Comprehensive Plan of Action - JCPOA) என்று அழைக்கப்படும் இரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றினார். அதனை ‘வரலாற்றில் மிக மோசமான ஒப்பந்தம்’ என்று அழைத்தார் அவர்.
அந்த ஒப்பந்தத்தின் நோக்கம், இரானின் அணுசக்தி முயற்சிகளைக் கட்டுப்படுத்துவது.
ஆனால் அது இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தைச் சமாளிக்கத் தவறி, இரானின் புரட்சிகரக் காவலர் படைக்கு நிதி கிடைக்க வழிசெய்தது என்ற கருத்தைக் கொண்டிருந்தார் டிரம்ப். இந்த நிதியை இரான் பல மறைமுகப் போராளிக் குழுக்களுக்கு வழங்கியது என்றும் அவர் கருதினார்.
அந்தப் பிராந்தியத்தின் பல அரசுகளும் இந்தக் கருத்தைக் கொண்டிருந்தன.
கடந்த 2020-ஆம் ஆண்டு, டிரம்ப் இரானின் புரட்சிகர காவலர் படையின் குட்ஸ் அணித் தலைவரான காசிம் சுலைமானியைக் கொலை செய்ய உத்தரவிட்டார். இது இரானுக்கு ஆத்திரமூட்டியது. ஆனால் பல வளைகுடா அரபு நாடுகளை அது திருப்திப்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக