செவ்வாய், 5 நவம்பர், 2024

தமிழ்நாடு சித்ரவதை, கொலைக்கு உள்ளாகும் இளம் பணிப்பெண்கள்!!

கடந்த சில நாட்களுக்குள் 18 வயதுகூட நிரம்பாத வீட்டுப் பணிப் பெண்கள் இருவர் கொடுமைப்படுத்தப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு துவக்கத்தில், பல்லாவரம் தொகுதியின் எம்.எல்.ஏ-வின் மகனும் மருமகளும் தன்னைக் கடுமையாக்க கொடுமைப்படுத்தியதாக ஒரு இளம்பெண் அளித்த வாக்குமூலம், தமிழ்நாட்டையே அதிரவைத்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதேயான அந்த பட்டியலினத்துப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகளைக் கேட்கும் யாரும் பதறிப்போய்விடுவார்கள். 

தனக்கு நடந்த கொடுமைகளை அந்தத் தருணத்தில் பிபிசி-யிடம் பகிர்ந்திருந்தார் அந்தப் பெண். 12-ஆம் வகுப்பையே முடித்திருந்த அந்தப் பெண்ணுக்கு இரண்டே நாட்களில் கொடுமைகள் ஆரம்பித்தன. “இரண்டு நாட்களிலேயே எனக்கு கடுமையான வேலைகள் கொடுத்தனர். ஒரு நாள் அவர்கள் மும்பைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அன்று இரவு 2 மணி வரை அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு, பிறகு தான் தூங்கினேன். காலையில் உணவும் தயார்செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தனர். 

ஆனால், என்னால், 7 மணிக்குத்தான் எழுந்திருக்க முடிந்தது. அதற்கு என்னை கடுமையாகத் தாக்கி, அசிங்கமாகத் திட்டினார்கள்,” என்று கூறியிருந்தார். இதேபோல, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி துணி துவைக்கத் தெரியாது என்று கூறியதற்காக, 10 மிளகாயைச் சாப்பிடச் சொல்லி கொடுமைப்படுத்தியதாக அந்தப் பெண் கூறியிருந்தார். “ஒரு நாள் நான் விரைவாக எனது பணியை முடிக்கவில்லை என்பதற்காக காலை 10 முதல் இரவு 11 மணி வரை கரண்டியால் என்னை அடித்தார். 

நான் எவ்வளவு கெஞ்சியும் நிறுத்தாமல், என் முகத்தை கழுவிவிட்டு வரச் சொல்லி என்னை அடித்தார்கள்” என்று தெரிவித்த அந்தப் பெண், பொங்கலுக்காக வீட்டிற்கு வந்தபோது, காவல்துறையிடம் புகார் கொடுத்திருந்தார். வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், எம்.எல்.ஏவின் மகனையும் மருமகளையும் கைதுசெய்தனர். இந்த விவகாரத்தில், காயம்பட்ட பெண் சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்து தப்பிவிட்டார். ஆனால், இதேபோல துன்புறுத்தப்பட்ட எல்லோருக்கும் இதுபோன்ற வாய்ப்பு கிடைப்பதில்லை.

 இதுபோன்ற விஷயங்கள் தொடரவே செய்கின்றன. சில சமயம் இளம்பெண்கள் கொல்லப்படுவதும் நடக்கிறது.கடந்த ஒரு மாதத்திற்குள் மட்டும், வீட்டு வேலை செய்வதற்காக அழைத்துவரப்பட்ட 18 வயதுகூட நிரம்பாத இரு பெண்கள் தாங்கள் வேலை பார்த்த இடங்களிலேயே கொடுமைப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டிருக்கின்றனர். ஒரு கொலை பெங்களூருவிலும் ஒரு கொலை சென்னையிலும் நடந்திருக்கிறது. 

முதல் சம்பவம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தத்தில் சேலம் - கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் ஒரு சிறிய பாலம் இருக்கிறது. இந்தப் பாலம் அமைந்துள்ள பகுதியில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி துர்நாற்றம் வீசியுள்ளது. இது தொடர்பான தகவல் கிடைத்ததும் அங்குவந்த சங்ககிரி காவல்துறையினர், அந்தப் பகுதியில் கிடந்த சூட்கேஸ் ஒன்றிலிருந்து துர்நாற்றம் வந்ததைக் கண்டறிந்தனர். 

அந்த சூட்கேஸைத் திறந்து பார்த்தபோது, பாலிதீன் கவரால் முகம் மூடப்பட்டு, பிளாஸ்டிக் டேப் சுற்றப்பட்ட நிலையில், ஒரு பெண்ணின் சடலம் கிடைத்தது. அந்தப் பெண் யார் என்பது அடையாளம் தெரியாத நிலையில், சடலத்தோடு கிடைத்த சூட்கேஸை வைத்தும் புலனாய்வு நடந்தது. அந்த சூட்கேஸ் இரு நாட்களுக்கு முன்பாக பெங்களூரில் வாங்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு, பெங்களூரில் இருந்து சங்ககிரிக்கு வந்த வாகனங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. ஓசூருக்கும் சங்ககிரிக்கும் இடையிலான சிசிடிவி பதிவுகள் ஆராயப்பட்டன. அதில் ஒரு கார் காவல்துறையின் கவனத்தைக் கவர்ந்தது. அதற்குப் பிறகு, அந்தக் காரின் உரிமையாளர் யார் என்ற விவரங்களைத் தேடியதன் முடிவில், ஒடிசாவில் பதுங்கியிருந்த அபினேஷ் சாகு அக்டோபர் 26-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். 

இதற்குப் பிறகுதான் கொலைசெய்யப்பட்ட பெண் குறித்த தகவல்கள் வெளிவந்தன. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட தகவல்களின்படி, கொலைசெய்யப்பட்ட பெண் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர். 15 வயதான அந்தச் சிறுமி, அபினேஷ் சாகுவின் தந்தை கார்த்திக்சந்திர சாகு நடத்திய ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்துவந்தார். அந்தப் பெண்ணை தன் வீட்டில் வேலை செய்வதற்காக அபினேஷ் சாகு பெங்களூருவில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்துவந்தார். 

அங்கு அந்தச் சிறுமி சரியாக வேலைசெய்யவில்லை என்று கூறி, அந்தத் தம்பதி சிறுமியை தொடர்ந்து துன்புறுத்திவந்துள்ளனர். சம்பவம் நடந்த தினத்தன்று அஸ்வினி பாடீல் பூரிக் கட்டையால் சிறுமியைத் தலையில் தாக்கியதில் அந்தச் சிறுமி இறந்துவிடவே, சடலத்தை ஒரு சூட்கேஸில் வைத்து, சங்ககிரிக்கு அருகில் அவர்கள் வீசிவிட்டுப்போனது தெரியவந்தது. இப்போது அந்தத் தம்பதி, நீதிமன்றக் காவலில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.நவம்பர் 1-ஆம் தேதியன்று சென்னை மேத்தா நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த ஒரு வீட்டில் இருந்து 15 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. 

இது தொடர்பாக நடந்த விசாரணையில், சடலமாகக் கிடைத்த அந்தச் சிறுமி தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்றும் 2023-ஆம் ஆண்டு முதல், முகமது நிவாஸ் என்பவருடைய குழந்தையைப் பராமரிப்பதற்காக சென்னையில் வசித்துவந்தார் என்பதும் தெரியவந்தது. இதற்குப் பிறகு காவல்துறையினர் அந்த வீட்டில் வசித்துவந்த முகமது நிவாஸ், அவருடைய மனைவி நாசியா உள்ளிட்ட ஆறு பேரைக் கைதுசெய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில், முகமது நிவாஸ் - நாசியா தம்பதியின் ஆறு வயது மகனைப் பார்த்துக் கொள்வதற்காக, தஞ்சாவூரில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு 15 வயதுச் சிறுமியை 2023-ஆம் ஆண்டு அழைத்துவந்தது தெரியவந்தது. 

இந்த விவகாரம் தொடர்பாக நாசியா அளித்த வாக்குமூலத்தில், சரியாக வேலை பார்க்கவில்லையென அந்தச் சிறுமியை தானும் தன் கணவர் நிவாஸ் மட்டுமல்லாது, அவர்களது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் அடித்துத் துன்புறுத்திவந்துள்ளதாகத் தெரியவந்தது. அக்டோபர் 31-ஆம் தேதியன்று அந்தச் சிறுமியை முகமது நிவாஸ் தம்பதியும் அவர்களுடைய நண்பரான லோகேஷ் - அவருடைய மனைவி ஜெயசக்தி உள்ளிட்டோரும் கடுமையாகத் தாக்கியதில் அந்தச் சிறுமி உயிரிழந்திருக்கிறார். 

இந்த விவகாரம் தொடர்பாக நாசியா அளித்த வாக்குமூலத்தில், அந்தச் சிறுமி இறப்பதற்கு முன்பாக எப்படியெல்லாம் துன்புறுத்தப்பட்டார் என்ற பகுதி படிப்பவர் யாரையும் பதறவைக்கும். இதைற்குப் பிறகு முகமது நிவாஸ், அவரது மனைவி நாசியா, லோகேஷ், அவருடைய மனைவி ஜெயசக்தி, நிவாஸின் சகோதரி சீமா பேகம், அந்த வீட்டில் வேலை பார்த்துவந்த மகேஸ்வரி உள்ளிட்ட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

கெம்பிட்டிய வளவு உரிமையாளர் கொலை- திடுக்கிடும் தகவல்கள்!!

கேகாலை, கெம்பிட்டிய வளவு உரிமையாளரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட...