ஆனால், அந்த விருந்துக்கு வந்த அழையா விருந்தாளியால் அந்நிகழ்வு தடைப்பட்டது.
அது மாலை நேரம், ஒரு பன்றி தீயில் வாட்டப்பட்டு, பன்றி இறைச்சி தயாராகிக் கொண்டிருந்தது.
அனைவரும் சிறிது நேரம் அரட்டை அடிக்கச் சென்றனர். அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, ஒரு பழுப்பு நிற உயிரினம் பன்றியைச் சுற்றியிருந்தது. அந்த உயிரினம் பன்றியின் சதையைத் துண்டுகளாகக் கிழித்து, அவற்றை அப்படியே விழுங்கிக் கொண்டிருந்தது.
"அது ஒன்றும் 400-பவுண்டு (181 கிலோ) எடைகொண்ட மிகப்பெரிய பன்றி இல்லை, ஆனால் ஒரு பெரிய விருந்துக்குப் போதுமானதுதான்," என ரோஜர்ஸ் கூறுகிறார்.
இவர் அமெரிக்காவின் வர்ஜீனியா டெக்கில் உள்ள மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் இணைப் பேராசிரியராக உள்ளார். கடந்த 22 ஆண்டுகளாக குவாம் தீவின் சூழலியல் குறித்தும் படித்து வருகிறார்.அன்று அனுமதியின்றி விருந்துக்கு வந்த அந்த உயிரினம், ஒரு பழுப்பு மரப் பாம்பு. இந்த உயிரினம் குவாம் தீவைச் சேர்ந்தது இல்லை.
1940களில் ஏதேனும் கவனக்குறைவால் குவாமுக்கு இந்த உயிரினம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது (ஒருவேளை ஒரு சரக்கு கப்பலில் பதுங்கியிருந்த நேரத்தில், தற்செயலாகக் கடலில் பயணிக்கும் சூழல் ஏற்பட்டு, இந்தத் தீவில் நுழைந்திருக்கலாம்).
சுண்ணாம்புக் கனிமம் நிறைந்த குவாம் தீவின் காடுகளில், இந்த மரப் பாம்புகள் வருவதற்கு முன்பு, இந்தத் தீவை பூர்வீகமாகக் கொண்ட ஏராளமான பறவைகள் வாழ்ந்தன.
ஆனால், இந்தப் பாம்பு அறிமுகமான 40 ஆண்டுகளுக்குள், அந்தத் தீவின் காடுகளில் வாழ்ந்த ஒவ்வொரு பறவையையும் வேட்டையாடப்பட்டன.
12 பறவை இனங்களில், தற்போது 10 அழிந்துவிட்டன. மீதமுள்ள இரண்டு பறவை இனங்கள், பாம்புகள் அணுக முடியாத குகைகள் மற்றும் நகர்ப்புறங்களில் வாழ்கின்றன.
இப்போது இத்தீவின் பறவை இனங்கள் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டு விட்டதால், குவாம் தீவில் உள்ள சுமார் இருபது லட்சம் பாம்புகள் (உண்மையான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது) எலிகள், மூஞ்சூறுகள், பல்லிகள் அல்லது மனிதர்கள் தூக்கியெறியும் உணவுகள் என அவற்றின் கண்ணில் படும் அனைத்தையும் உண்கின்றன.
"அதாவது, அவை எதையும் சாப்பிடும்.
அவ்வளவு ஏன், அவை ஒன்றையொன்றே கூடச் சாப்பிடும்" என்கிறார் ஹென்றி பொல்லாக். இவர், கொலராடோவில் உள்ள ஒரு லாப நோக்கற்ற அமைப்பான ‘தெற்கு சமவெளி நில அறக்கட்டளையின் (Southern Plains Land Trust)’ நிர்வாக இயக்குநராக உள்ளார். அவர் குவாமின் சுற்றுச்சூழலை முன்பு ஆய்வு செய்தவர்.
வேகமாக அதிகரித்து வரும் பாம்புகளின் எண்ணிக்கை, ஒரு காலத்தில் காடுகள் முழுவதும் நிறைந்திருந்து,
இப்போது மறைந்துபோன பறவைகளின் ஒலிகள், அழைப்புகள் என இந்த பூமியின் மோசமான சூழலியல் அமைப்பு என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது குவாம் தீவு.
ஆனால், பறவைகள் இல்லா காடுகளைக் கொண்ட தீவு என்பதைத் தாண்டி, இந்தப் பாம்புகளின் எண்ணிக்கை பெருகுவது வேறொரு விளைவையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனால் வேறோர் உயிரினமும் பயனடைகிறது. அது எட்டு கால்கள், நிறைய கண்கள் கொண்ட சிலந்திகள்.சிலந்திகள் நிறைந்திருக்கும் தீவில் பணியாற்ற வேண்டிய ரோஜர்ஸ், தான் சிலந்திகளுக்கு அச்சப்படுவதில்லை என்கிறார்.
பெரும்பாலான மரியானா தீவுகளில், மழைக்காலத்தில் குறைந்தளவு சிலந்திகளே இருக்கும், வறண்ட காலத்தில் அவை அதிகரிக்கும்.
ஆனால், குவாம் தீவில் அப்படியில்லை.
இத்தீவின் சுண்ணாம்புக் காடுகளில், ஆண்டு முழுவதும் பல மைல்களுக்கு நீளும் சிலந்தி வலைகளையும், அதை உருவாக்கிய சிலந்திகளையும் காணலாம்.
பிரமாண்டமான, மஞ்சள் நிற வயிற்றைக் கொண்ட வாழை சிலந்திகள் உள்ளன. அதன் வலைப்பின்னல் தங்க நிறத்தில் மின்னுவதை நீங்கள் காண முடியும்.
வேட்டையாடும் சிலந்திகள் பலவும் மனிதனின் கை அளவுக்குப் பெரியதாக இருக்கும். கூடார-வலை அமைப்பை உருவாக்கும் சிலந்திகள், மரங்களின் இடைவெளியைத் தங்களின் பரந்த பட்டுக் கூடாரத்தால் மூடிக்கொள்கின்றன.
ரோஜர்ஸ் பிந்தைய வகையை "காண்டோ" வலை (condo) என்று அழைக்கிறார். ஏனென்றால், அவை ஒவ்வொன்றும் எட்டு கால்கள் கொண்ட உயிரினங்களுக்கான பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளை ஒத்திருக்கும். மேலும், அவை பல்லாயிரக்கணக்கான சிலந்திகளின் ஒளிரும் கண்களைக் கொண்டுள்ளன.
"இந்தப் பெரிய வலையில் வெவ்வேறு அடுக்குகளில் பல பெண் சிலந்திகளும், சுற்றியுள்ள விளிம்புகளில் பல ஆண் சிலந்திகளும் இருக்கும்" என்கிறார் ரோஜர்ஸ்.
"இந்த வலைகள் சிறிய ஆர்கிரோட்ஸ் (Argyrodes) சிலந்திகளுக்கு மிகவும் பிடித்தமானவை, அவை இரையைத் திருடவும், எப்போதாவது உண்ணவும் செய்கின்றன. குவாமில் இந்த (காண்டோ) வலைகள் தரை மட்டத்தில் இருந்து, மர உச்சி வரை செல்லும். இந்தச் சிலந்தி வலைகள் அனைத்து இடங்களிலும் பரவியுள்ளன," என்று அவர் கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக