செவ்வாய், 17 மார்ச், 2026

எஞ்சின் செயலிழந்த நிலையில் மத்திய தரைக்கடலில் ரஷ்ய எண்ணெய் கப்பல்...!

எஞ்சின் செயலிழந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து ரஷ்ய எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது பிராந்தியத்திற்கு உடனடி மற்றும் கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக மத்திய தரைக்கடல் நாடுகள் ஒன்றிணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளன.

ரஷ்யாவிற்குச் சொந்தமான இந்த பாரிய கப்பல், எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாகக் கடந்த சில மணிநேரங்களாக எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி நீர்ப்பரப்பில் மிதந்து கொண்டிருக்கிறது.கடலில் நிலவும் பலத்த காற்று மற்றும் நீரோட்டத்தினால் இந்தக் கப்பல் அண்டை நாடுகளின் கடற்கரையை நோக்கித் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இலட்சக்கணக்கான பீப்பாய் கச்சா எண்ணெயைக் கொண்டுள்ள இந்தக் கப்பல் கடற்கரையில் மோதி விபத்துக்குள்ளானால், சரிசெய்ய முடியாத பாரிய சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படும் என அண்டை நாடுகள் அச்சம் வெளியிட்டுள்ளன.இந்த விவகாரத்தில் சைப்ரஸ், கிரீஸ் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் தமது மிகுந்த கவலையை வெளியிட்டுள்ளன.

இந்தக் கப்பல் தமது கடல் எல்லைக்குள் நுழையும் பட்சத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட வேண்டும் என அந்த நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் மோசமான வானிலை காரணமாக, கப்பலை மீட்கும் பணிகளில் பெரும் சிக்கல்கள் நீடிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒருவேளை எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அதனைத் தடுப்பதற்கான போதிய வசதிகள் அங்கு இல்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks