வியாழன், 26 மார்ச், 2026

ஆந்திர பஸ் பற்றி எரிந்து 10 பேர் உடல் கருகி பலி!!

ஆந்திர மாநிலம் மார்கபுரம் மாவட்டத்தில் இன்று காலையில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது டிப்பர் லாரி மோதியது. இதில் தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 10 பயணிகள் உடல்கருகி பலியாகி உள்ளனர். ஆந்திர மாநிலம் மார்கபுரம் மாவட்டம் ராயபுரம் அருகே இன்று காலையில் தனியார் டிராவல்ஸ் பஸ் சென்று கொண்டிருந்தது. 

அப்போது அந்த பஸ்சும், டிப்பர் லாரியும் மோதி கொண்டது. இதில் தனியார் பஸ் உடனடியாக தீப்பிடித்தது. அதிகாலை நேரம் என்பதால் பல பயணிகள் தூக்கத்தில் இருந்தனர். இதனால் அவர்களால் உடனடியாக வெளியே வர முடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்தவுடனம் தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியை மேற்கொண்டனர்.

 இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக 10 பேர் வரை உடல் கருகி பலியாகி உள்ளனர். 25க்கும் அதிகமானவர்கள் காயங்களுடன் தப்பி உள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிர் பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தில் பஸ் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது. முதற்கட்ட விசாரணையில் தனியார் பஸ் ஹைதராபாத்தில் இருந்து பமுரு பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அதேபோல் சிமாகுர்தியில் இருந்து வந்த லாரியும், அந்த பஸ்சும் திடீரென்று நேருக்கு நேர் மோதி உள்ளது. பஸ் உடன் சேர்ந்து லாரியும் தீப்பிடித்து எரிந்துள்ளது. 

இந்த பஸ்சில் மொத்தம் 40 பேர் வரை பயணித்துள்ளனர். இதில் 12 பேர் எந்தவித காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks