அதற்கமைய, இன்று நாடு முழுவதும் உள்ள சட்டத்தரணிகள் நீதிமன்றப் பணிகளிலிருந்து விலகியுள்ளனர்.
இதனால் நீதிமன்ற சேவைகளைப் பெற்றுக்கொள்ள வந்த பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சில நீதிமன்றங்களுக்கு முன்னால் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் பூதவுடல்கள் கொழும்பிலுள்ள தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்ததுடன், நேற்று மாலை பிடிகல, கொடமுன பகுதியில் அமைந்துள்ள அவர்களின் இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.
தற்போது பூதவுடல்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், சட்டத்தரணிகள் மற்றும் பிரதேசவாசிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை தலாங்கம, அக்குரேகொட இராணுவத் தலைமையகத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு பல்பொருள் அங்கடியின் வாகனத் தரிப்பிடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 44 வயதுடைய சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது 42 வயதுடைய மனைவி டபிள்யூ.ஏ. நிசன்சலா ஆகியோர் உயிரிழந்தனர்.
காரில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இத்துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
சந்தேகநபர்கள் தப்பிச் செல்லப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் கார் காலி, பத்தேகம - அகலிய பகுதியில் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொலையாளிகளைக் கண்டறிய 12 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இக்கொலையுடன் தொடர்புடைய நால்வர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த நேற்று தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக