செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

இஸ்லாமிய பேரரசரின் வரலாறு!!

சுமார் ஆறு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மூன்று கண்டங்களின் முக்கிய பிரதேசங்களை (ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா) கட்டி ஆண்ட இஸ்லாமிய கிலாஃபத் எனும் உஸ்மானிய சாம்ராஜ்யம் (Ottoman Empire), 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வரலாற்றின் பக்கங்களில் இருந்து மறையத் தொடங்கியது. 


1924-ல் இந்தப் பேரரசு உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்ட நிகழ்வு, நவீன உலக வரைபடத்தையே மாற்றியமைத்தது. இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தின் சிதறலிலிருந்து டஜன் கணக்கான புதிய நாடுகள் பிறந்தன. ஒவ்வொன்றும் தனக்கான எல்லைகளையும், இறையாண்மையையும், கொடியையும் பெற்றுக்கொண்டன. 

ஆனால், இந்த வரலாற்றுப் பிரிவினையில் ஒரு தேசம் மட்டும் அனாதையாக்கப்பட்டது. அதுதான் ஃபலஸ்தீனம் (Palestine). முதல் உலகப் போரின் (1914-1918) முடிவிலும், அதனைத் தொடர்ந்து 1924-ல் கிலாஃபத் முழுமையாகக் கலைக்கப்பட்ட பின்னரும், மத்திய கிழக்கின் நிலப்பரப்பு பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற காலனியாதிக்க சக்திகளால் கூறு போடப்பட்டது. உஸ்மானியரின் ஆளுகைக்குக் கீழ் ஒரே நிலப்பரப்பாக இருந்த பகுதிகள் தனித்தனி நாடுகளாக அறிவிக்கப்பட்டன.


 வரலாற்று ரீதியாக அந்தப் பிரிவினைக்குப் பின் உருவான நாடுகள் மற்றும் அவற்றின் சுதந்திரக் காலத்தை பார்ப்போம். 

1. துருக்கி (Turkey - 1923): உஸ்மானியப் பேரரசின் மையப்பகுதியாக இருந்த இடத்தில், முஸ்தபா கமால் அத்தாதுர்க் தலைமையில் நவீன குடியரசாகத் துருக்கி உருவானது. இதுவே உஸ்மானியரின் நேரடி வாரிசு நாடாகும்.

 2. ஷாம் பிரதேசம் (The Levant): சிரியா (1946): உஸ்மானிய ஆட்சிக்குப் பிறகு பிரான்ஸின் காலனித்துவக் கட்டுப்பாட்டில் இருந்தது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சுதந்திரம் பெற்றது.

லெபனான் (1943): சிரியாவிலிருந்து பிரிக்கப்பட்டு, பிரான்ஸ் ஆட்சியின் கீழ் நிர்வகிக்கப்பட்டு, பின்னர் தனி நாடானது. ஜோர்டான் (1946): முன்னதாக "டிரான்ஸ்ஜோர்டான்" என்று அழைக்கப்பட்ட இது, பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு ஹுசைனி வம்சத்தின் கீழ் தனி நாடானது. ஈராக் (1932): உஸ்மானியரின் மாகாணங்களாக இருந்த பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்து பின்னர் சுதந்திரம் பெற்றது. 

3. அரேபியத் தீபகற்பம் (The Arabian Peninsula): சவூதி அரேபியா (1932): உஸ்மானிய வீழ்ச்சிக்குப் பிறகு, நஜ்த் மற்றும் ஹிஜாஸ் பகுதிகளை இணைத்து இப்னு சவூத் தலைமையில் இன்றைய சவூதி அரேபியா உருவானது. யமன் (1918, 1967): வடக்கு யேமன் 1918-ல் உஸ்மானியர்களிடமிருந்து விடுதலை பெற்றது. தெற்கு யேமன் 1967-ல் பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. 

வளைகுடா நாடுகள்: குவைத் (1961), பஹ்ரைன் (1971), கத்தார் (1971), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (1971) ஆகியவை நீண்ட காலம் பிரிட்டிஷ் பாதுகாப்பில் இருந்து, பின்னர் தனித்தனி தேசங்களாக உருவெடுத்தன. 

4. வட ஆப்பிரிக்கா: எகிப்து (1922): உஸ்மானியரின் முக்கிய மாகாணமாக இருந்த எகிப்து, பிரிட்டிஷ் காலனித்துவத்திலிருந்து விடுபட்டு தனி நாடானது.

 5. பால்கன் மற்றும் ஐரோப்பிய பகுதிகள்: உஸ்மானியப் பேரரசின் வீழ்ச்சிக்கு முன்னரே அல்லது வீழ்ச்சியின் போதே கிரேக்கம் (1830), செர்பியா, பல்கேரியா, ருமேனியா, அல்பேனியா மற்றும் போஸ்னியா போன்ற நாடுகள் ஐரோப்பியப் பகுதியில் தனித்தனியாகப் பிரிந்து சென்றன. 

ஆனால் ஃபலஸ்தீனம்? மேலே குறிப்பிடப்பட்ட பட்டியல் ஒரு கசப்பான உண்மையை உணர்த்துகிறது. உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்த எகிப்தியர்களுக்கும், ஈராக்கியர்களுக்கும், சிரியர்களுக்கும், துருக்கியர்களுக்கும் தனித்தனி நாடுகள் கிடைத்தன. (குர்துக்களுடயை போராட்டம் தனி நாடு போராட்டம் என்பன நீண்ட நெடிய வரலாறை கொண்டது. 

இன்னொரு நாளில் அதை பார்ப்போம்) அவர்கள் அனைவரும் இன்று ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசுகளாக (Nation States) உள்ளனர். ஆனால், ஃபலஸ்தீனம் (1948)? உஸ்மானிய ஆட்சிக்குப் பிறகு பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் (British Mandate) கீழ் சென்ற ஃபலஸ்தீனம், மற்ற அரபு நாடுகளைப் போல சுதந்திரம் பெறுவதற்குப் பதிலாக, ஒரு மாபெரும் துரோகத்தைச் சந்தித்தது.

1948-ல் ஃபலஸ்தீன மண்ணில், ஐரோப்பாவிலிருந்து வந்த யூதர்களுக்காக ஆக்கிரமிப்பு தேசம் என்ற புதிய நாடு உருவாக்கப்பட்டது. பூர்வீக ஃபலஸ்தீன மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் பறிக்கப்பட்டன. 1948-ல் தொடங்கிய அந்த ஆக்கிரமிப்பு இன்றும் தொடர்கிறது. 

எல்லோருக்கும் நாடு, ஃபலஸ்தீனர்களுக்கு மட்டும் அகதி முகாம் என்ற நிலை உருவாக்கப்பட்டது. இன்றுவரை ஃபலஸ்தீனம் ஒரு முழுமையான சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்படவில்லை. இன்று வரைபடத்தில் நாம் காணும் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் உஸ்மானியப் பேரரசின் சாம்பலில் இருந்து எழுந்தவையே. 

ஆனால், அந்த வரைபடத்தில் ஃபலஸ்தீனம் என்ற பெயர் மட்டும் அழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. காஸா, மேற்குக் கரை, அல்குத்ஸ் - ஜெருசலேம் என எஞ்சியிருக்கும் சிறு நிலப்பகுதிகளையும் ஆக்கிரமிப்பு தேசம் தொடர்ந்து அபகரித்து வருகிறது. வரலாறு பல நாடுகளை உருவாக்கியது, ஆனால் ஃபலஸ்தீனத்தை மட்டும் வஞ்சித்தது என்பதே நிதர்சனம்.

அப்துல்லா இப்னு நசீர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks