வியாழன், 5 பிப்ரவரி, 2026

இலங்கையில் பாடசாலைகளை மூடுவது குறித்த அரசின் திட்டம்!

3000 அரச பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்கள்.குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் கருத்து வெளியிட்டுள்ளது. 

 அதன்படி, குறித்த தீர்மானத்தினால் மலையக மாணவர்களின் இலவச கல்வி உரிமை பாதிக்கப்படலாம் என அந்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நாடு முழுவதும் 10 க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள் உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் 10,047 பாடசாலைகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  


 நுவரெலியாவில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அந்தச் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் வேலு இந்திரச்செல்வன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 1,500 பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 


எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை 3,000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.தற்போது மாணவர்கள் 3 கிலோமீற்றர் சுற்றளவிற்குள் கல்வி கற்கும் வகையில் பாடசாலைகள் அமைந்துள்ளன. எனினும், புதிய சுற்றுநிரூபத்தின் ஊடாக இந்தத் தூரத்தை 5 கிலோமீற்றராக அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது ஒரு திட்டமிட்ட செயல், முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மலையக மாணவர்கள் மீண்டும் பழைய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.


இலங்கையின் 2025 அரச பாடசாலைகள் தொடர்பான மக்கள் தொகை கணக்கெடுப்பு நாடு முழுவதும் ஆசிரியர்கள் எவ்வாறு பரவியுள்ளனர் என்பதில் பெரிய வித்தியாசத்தைக் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் (DCS) புள்ளிவிபரங்களின்படி, தேசிய சராசரி 16 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றாலும், ஒரு வகுப்பறையில் உண்மையான அனுபவம் பெரும்பாலும் ஒரு பிள்ளை கற்கும் பாடசாலை வகையைப் பொறுத்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 இந்தப் பிரச்சினை ஆரம்பப்பிரிவு பாடசாலைகளில் அதிகம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.5 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டுமே கற்பிக்கின்ற பாடசாலைகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் "வகை 3" பாடசாலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒப்பீட்டளவில் இங்கு 34,000 ஆசிரியர்கள் 580,000க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கையாளுகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks