வெள்ளி, 9 ஜனவரி, 2026

ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக யு/ஏ சான்று ஐகோர்ட் அதிரடி !!

விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு உடனடியாக யு/ஏ சான்று வழங்க தணிக்கை வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரிய உத்தரவையும் ரத்து செய்யவதாக தெரிவித்துள்ளது. 

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று (ஜனவரி 9) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழை வழங்க மத்திய தணிக்கை வாரியம் தாமதித்ததால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார்.

தணிக்கை குழு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “பதில் மனு தாக்கல் செய்ய அனுமதித்தால் நீதிமன்றம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில் அளிக்கப்படும். இப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது மத்திய அரசின் முடிவல்ல. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது. 

திரைப்படத்தில் பாதுகாப்புப் படைகளின் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். ஜனநாயகன் படத்துக்கு எதிராக புகாரளித்தவர் தணிக்கைக் குழு உறுப்பினர்.

சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்த பின்னரும் கூட படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப அதிகாரம் உள்ளது. இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் எந்த உள்நோக்கமும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது. ஜனநாயகன் படக்குழு தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “பெரும்பான்மை உறுப்பினர் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரை செய்துள்ளனர். 

பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும். ஆனால், ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்” என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து நீதிபதி பி.டி.ஆஷா, “ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்று மட்டுமே புகாரில் கூறப்பட்டுள்ளது, 

அந்த புகார் நிலைக்கத்தக்கதல்ல. படத்துக்கு யு/ஏ சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? யு/ஏ சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.இதனை தொடர்ந்து, ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் இன்றைக்கு (ஜன.9) தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

அதன்படி, நீதிபதி ஆஷா இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், ஜனநாயகன் படத்தை வெளியிடும் வகையில் படத்துக்கு உடனடியாக U/A சான்று வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரிய உத்தரவையும் ரத்து செய்தார்.

மேல்முறையீடு செய்ய கோரிக்கை: இதற்கிடையில், ‘ஜனநாயகன்’ வழக்கில் தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் தரப்பில் மேல்முறையீடு செய்ய தலைமை நீதிபதி முன்பாக முறையீடு செய்யப்பட்டது. அதற்கு, மனுவாக தாக்கல் செய்யுங்கள், பிற்பகலில் விசாரிக்கிறேன் என தலைமை நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks