கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வட மாநில வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் செல்லியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆரம்பாக்கம் பஜார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 12ம் தேதி பள்ளியிலிருந்து தனது பாட்டி வீட்டிற்கு சென்ற சிறுமியை பின்தொடர்ந்து சென்ற வடமாநில வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பினார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையிலும், பிறகு பொன்னேரி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது தொடர்பாக, ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். மேலும், ஆரம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், வடமாநில வாலிபர் ஒருவர் சிறுமியை பின்தொடர்ந்து செல்வது பதிவாகி இருந்தது.
அந்த காட்சிகளின் அடிப்படையில் வடமாநில வாலிபரை போலீசார் தீவிரமாக தேடினர்.
ஆனாலும், குற்றவாளியை கைது செய்ய முடியாமல் திணறினர். எனவே, குற்றவாளியை கைது செய்யக்கோரி, பல்வேறு அரசியல் கட்சியினர், தனியார் அமைப்பினர் மறியல், முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டனர். இதற்கிடையே, 10 நாட்களுக்கு மேல் விசாரணை நடத்தி வந்த நிலையில், குற்றவாளி பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தனர்.
மேலும், டிஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சுமார் 15 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு ஆந்திர மாநிலம் சூலூர்ப்பேட்டை, நெல்லூர், குண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் தேடினர். மேலும் புறநகர் ரயில்களில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று மதியம் சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லூர் புறப்பட்ட மின்சார ரயிலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரின் முக ஜாடையுடன் கஞ்சா போதையில் தள்ளாடியபடி ஒருவர் ஏறினார்.
இதைக் கண்ட தனிப்படை போலீசார் அந்த நபருடன் ரயிலில் பயணம் செய்தனர்.
சூலூர்ப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கிய அந்த நபர் பெட்டிக்கடை அருகே சென்று அமர்ந்தார். அப்போது, தனிப்படை போலீசார் அந்த நபரை செல்போனில் படம் பிடித்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ஜெயஸ்ரீயின் வாட்ஸ்அப்புக்கு அனுப்பினர்.
இதையடுத்து, சிறுமி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்ற டிஎஸ்பி ஜெயஸ்ரீ அந்த புகைப்படத்தை சிறுமியிடம் காட்டினார். அப்போது, சிறுமி இந்த நபர்தான் என்று அடையாளம் காட்டினார்.
அதேநேரம் அவனது பல் உடைந்து இருந்ததாகவும் சிறுமி தெரிவித்தார்.
இதையடுத்து, டிஎஸ்பி ஜெயஸ்ரீ, தனிப்படை போலீசாரை தொடர்பு கொண்டு அந்த நபரை கைது செய்யுமாறு தெரிவித்தார். மேலும், அவனது பல் உடைந்துள்ளதா என்று பார்க்குமாறு கூறினார். போலீசார் அந்த நபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும், அவனது பல் உடைந்திருப்பதை உறுதி செய்தனர்.
பின்னர், ஆரம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இதையடுத்து, போலீசார் அந்த நபரை காரில் ஏற்றி ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சிறுமியை பலாத்காரம் செய்த நபர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், சூலூர்ப்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், கஞ்சா போதையில் ஆரம்பாக்கம், அக்கம்மாபேட்டை, தடா பகுதிகளில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக