கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு பகுதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து இன்றிரவு (ஏப்ரல் 8) போலீஸாரினால் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் பிபிசி தமிழிடம் உறுதி செய்தனர்.
கைது செய்யப்பட்டமைக்கான காரணம் கூறப்படாத நிலையில், பிள்ளையான் கொழும்புக்கு அழைத்து செல்லப்படவுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவினர் கட்சியினருக்கு அறிவித்துள்ளனர்.
சிவில் ஆடைகளில் வேன் ஒன்றில் வருகைத் தந்த பாதுகாப்பு அதிகாரிகளே இவ்வாறு பிள்ளையானை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் உள்ளிட்ட சில சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை, பிபிசி தமிழுக்கு சில தினங்களுக்கு முன்னர் வழங்கிய பேட்டியில், பிள்ளையான் மறுத்திருந்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் சிவநேசத்துரை சந்திரகாந்தன், பிள்ளையான் என அழைக்கப்பட்டார்.
1990ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தனது 16வது வயதில் இணைந்த பிள்ளையான், முக்கிய தாக்குதல்களில் முன்னிலை வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதியாக விளங்கிய கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் கைகோர்த்து 2004ம் ஆண்டு புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த பிள்ளையான், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக