மாவட்ட தொழிலாளர் நலத்துறையினர் தங்கள் வழக்கமான கள ஆய்வுக்கு சென்றபோது, அப்பா ராவ் என்பவர் கடம்பன்குளம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, அவர் ஆந்திராவிலிருந்து வந்திருப்பதும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊருக்கு செல்லாமல் இங்கேயே ஆடு மேய்த்துக் கொண்டிருப்பதும் தெரியவந்தது என, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஆதிமுத்து பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
கடந்த மாதம் 31-ம் தேதி மீட்கப்பட்ட அப்பா ராவிடம் பிபிசி தமிழ் பேசியது.
"ஊருக்கு செல்ல பணம் வேண்டும் என்பதாலும் அதை உரிமையாளர் தர மாட்டார் என்பதாலும்" தன்னுடைய ஊருக்கு செல்ல அவர் முயற்சிக்கவில்லை என தெரிவித்தார்.ஏற்கெனவே இந்த பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலில் கொத்தடிமைகளாக இருந்தவர்களை மீட்டுள்ளோம்.
அதே போன்று, எங்களுக்கு கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில், வேறு சிலர் கொத்தடிமைகளாக இருக்கின்றனரா என்று ஆய்வு செய்ய சென்றிருந்தோம். அப்போது அவர் (அப்பா ராவ்) ஆடு மேய்த்துக் கொண்டிருந்ததை பார்த்தோம். அவரிடம் விசாரித்த போது அவர் ஆந்திராவில் காக்கிநாடா பகுதியில் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் என்று தெரிவித்தார்" என கூறினார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு, தனது உறவினர்களுடன் புதுச்சேரி சென்று கொண்டிருந்த போது, ஒரு ரயில் நிலையத்தில் இறங்கி டீ குடித்துள்ளார்.
அவர் மீண்டும் ஏறி செல்வதற்குள் ரயில் புறப்பட்ட நிலையில், காளையார்கோயில் பகுதிக்கு அப்பா ராவ் வந்து சேர்ந்ததாக ஆதிமுத்து கூறுகிறார்.
"அவரிடம் விசாரித்தபோது சில நேரங்களில் தமிழில் பதில் அளித்தார், சில நேரங்களில் தமிழும் தெலுங்கும் கலந்து பேசினார்," என்று தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தெரிவித்தார்.
பின்னர் அங்கிருந்தே அவரை அதிகாரிகள் மீட்டனர்.
காளையார்கோயில் தாலுகா அலுவலகத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டது. அவரது உரிமையாளரான அண்ணா துரை தாலுகா அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில் சம்பளம் இல்லாமல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கொத்தடிமையாக அப்பா ராவ் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தது உறுதியானதாக ஆதிமுத்து தெரிவித்தார்.
இதையடுத்து, அண்ணா துரை கைது செய்யப்பட்டார். அவர் மீது கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் 1976 மற்றும் பிஎன்எஸ் 143 (ஐபிசி370 -மனித கடத்தல் குறித்து கையாளும் பிரிவு) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அப்பா ராவை பணிக்கு அமர்த்திய அண்ணா துரை தோட்ட உரிமையாளராக இருந்து வருகிறார், அவருக்கு 60 ஆடுகள் இருந்துள்ளன. அருகில் உள்ள காட்டுப் பகுதிகளுக்கு சென்று ஆடுகளை மேய்த்து வந்துள்ளார் அப்பா ராவ்.
கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்த அண்ணாதுரை, தற்போது பிணையில் வெளியே வந்துள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம். ராஜா கூறுகையில், "அண்ணாதுரை தனது பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் நபராக உள்ளார். கிராம மக்களிடம், அப்பா ராவுக்கு உணவு, துணிமணி கொடுக்கலாம், ஆனால் பணம் கொடுக்கக் கூடாது என்று கூறியுள்ளார். தான் வேலை செய்ததற்கான கூலியை அண்ணாதுரை வழங்கவில்லை என்று கிராமத்தில் உள்ள இளைஞர்கள் சிலரிடம் அப்பா ராவ் புகார் தெரிவித்துள்ளார்.
அவர்கள் மூலமாக அப்பகுதியில் இயங்கி வரும் தன்னார்வ அமைப்புக்கும் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்கிறார்.மனித கடத்தல் குறித்த வழக்குகளை கையாளும் எம் ராஜா கூறுகையில், "இது போன்ற சம்பவங்களில் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்வதே சவாலாக உள்ளது என்கிறார்.
"கொத்தடிமைகள் குறித்த வழக்குகளில், கொத்தடிமை தடுப்புச் சட்டம் மட்டுமல்லாமல் மனித கடத்தல் குற்றத்துக்கான சட்டப்பிரிவு பிஎன்எஸ் 143 ( ஐபிசி 370)-ஐயும் சேர்க்க வேண்டும் என்று 2017ம் ஆண்டு காவல் டிஜிபி சுற்றறிக்கை விடுத்திருந்தார்.
பல வழக்குகளில் இந்த சட்டப்பிரிவை சேர்ப்பதில்லை. கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும், மனித கடத்தல் சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டால், தண்டனை காலம் அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் வரை விதிக்கப்படும். இந்த வழக்கிலும் வலியுறுத்திய பிறகு தான், அந்த சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டது" என்கிறார்.இருபது ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்த அப்பா ராவ் ஒரு முறை கூட அங்கிருந்து தப்பிச் செல்ல முயவில்லை.
அவரிடம் இது குறித்து கேட்ட போது, எப்படி ஊருக்கு செல்வது என்று தெரியவில்லை என்று கூறியதாகவும் ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் காசு வேண்டும், தனது உரிமையாளர் காசு தரவில்லை என்றும் தெரிவித்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
எனினும் தற்போது சொந்த ஊர் திரும்ப வேண்டும் என்று தொடர்ந்து அப்பா ராவ் கூறி வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
"தாலுகா அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மீண்டும் அண்ணாதுரையிடம் வேலைக்கு செல்ல விருப்பம் இருக்கிறதா என்று கேட்ட போது, 'இல்லை' என்று கூறினார். அவரை மீட்டபோது, அவரது துணி மற்றும் உடைமைகள் அவர் தங்கியிருந்த இடத்தில் இருந்தன, அவற்றை எடுத்து வருவதற்காக கூட மீண்டும் அங்கு செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டார். தாலுகா அலுவலகத்தில் அண்ணாதுரை வந்த போது அவரது பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை" என்று தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஆதி முத்து தெரிவித்தார்.
மதுரையில் முதியோர் இல்லத்தில் தற்போது இருக்கும் அப்பா ராவை பிபிசி தமிழ் தொடர்புகொண்டு பேசியது. மிக சரளமாக பேசவில்லை என்றாலும், தன்னைப் பற்றிய சில தகவல்களை அப்பா ராவால் பகிர்ந்துகொள்ள முடிந்தது. சில வார்த்தைகள் தமிழிலும், சில வார்த்தைகள் தெலுங்கிலும் பேசினார்.
அவர் என்ன வேலை செய்துக் கொண்டிருந்தார் என்று கேட்டதற்கு, "ஆடு மேய்த்தேன், காசு தரவில்லை" என்று கூறினார்.
"ஊரில் எனக்கு மனைவி, மகன், மகள் இருக்கின்றனர். மகளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. ஊரில் விவசாயம் செய்து வந்தேன், நெல் பயிரிட்டு வந்தேன்" என்றும் கூறினார். ஏன் அவர் ஊருக்கு திரும்பி போகவில்லை என்று கேட்டதற்கு, "காசு தருகிறேன், தருகிறேன் என கூறினார், ஆனால் காசு தரவில்லை, ஊருக்கு போகவில்லை" என்று தெரிவித்தார்.
அவர் வசித்து வரும் இல்லத்தின் கண்காணிப்பாளர் அன்னலட்சுமி, "அவருக்கு நாம் பேசுவது புரிகிறது.
ஆனால், அவரால் சரளமாக திருப்பி பேச இயலவில்லை. ஆந்திராவிலிருந்து சில அதிகாரிகள் தொடர்பு கொண்ட போது, அவரால் தெலுங்கிலும் தெளிவாக பேச இயலவில்லை. அவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது அவருக்கு வெளி உலகத் தொடர்பு மிகவும் குறைவாக இருந்துள்ளது.
அதனால் கூட பேச்சு தெளிவில்லாமல் போயிருக்கலாம். இங்கிருக்கும் போது மிகவும் அமைதியாக இருப்பார், யாரிடமும் பேச மாட்டார்"என்றார்.ஆந்திராவில் அவர் வசித்து வந்ததாக கூறும் இடங்களில் அவரது குடும்பத்தினரை கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு மாத காலமாகியும் அதிகாரிகளுக்கு அது சவாலான பணியாக உள்ளது.
"அவர் கூறும் இடங்களின் பெயர்களும் அங்குள்ள பெயர்களும் சற்று வெவ்வேறாக உள்ளன.
மேலும் அவர் கூறும் மாவட்டம் தற்போது இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது" என்று தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த'பார்வதிபுரம்' என்ற ஊரின் பெயரை அப்பா ராவ் கூறியுள்ளார். எனினும், பெயரில் இருந்த ஊருக்கு சென்றபோது அது அவருடைய ஊர் அல்ல என்பது தெரியவந்தது.
ஆந்திராவில் உள்ளூர் செய்தித்தாளில் அப்பாராவின் புகைப்படத்துடன் அவர் குறித்த விவரங்கள் விளம்பரம் செய்யப்பட்டுள்ளன என்று கூறும் வழக்கறிஞர் எம் ராஜா, "அப்பா ராவ் குறிப்பிடும் இடம் ஒடிசா மாநில எல்லையில் உள்ளது.
இவர் கூறும் பகுதிகள் தற்போது மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளன, பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த பகுதிகள் ஆந்திராவில் உள்ளதா அல்லது ஒடிசாவில் உள்ளதா என்பதே தெரியவில்லை. ஆந்திர மாநில அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் அவரது குடும்பத்தினரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக