புதன், 22 ஜனவரி, 2025

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் !!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பான, கௌரவமான, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்து தருவதை இந்த அரசு உறுதி செய்யும் என்று அறிவித்ததோடு, இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றம் செய்தார். 

முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாதாந்திர பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள், கல்வி உதவித் தொகை ஆகிய நலத்திட்டங்களை உயர்த்தப்பட்ட விகிதத்தில் வழங்கி வருவதோடு, இலவச சமையல் எரிவாயு இணைப்பு. அடுப்பு மற்றும் சமையல் எரிவாயு மானியம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசு முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் மேம்பாட்டிற்காக சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. 

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22.1.2025), சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு நேரில் சென்று, அங்கு தங்கியுள்ள இலங்கை தமிழர்களிடம் அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். ஒக்கூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 227 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

இந்த முகாமில் முதற்கட்டமாக 90 வீடுகள் கட்டப்பட்டு கடந்த 17.9.2023 அன்று திறப்பு விழா நடைபெற்றது. நான்கு வீடுகள் கொண்ட தொகுப்பு வீடுகளுக்கு 20 லட்சம் ரூபாயும், ஒரு தனி வீட்டிற்கு 5.65 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது மற்ற முகாம்தாரர்களும் புதிய வீடுகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்ததன்பேரில் வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்த ஆய்வின் போது, முதலமைச்சர் முகாம்வாழ் இலங்கை தமிழர்களிடம் முகாமில் செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்ததோடு, முகாமிற்கு தேவைப்படும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார். 

அப்போது. முகாம் வாழ் தமிழர்கள் தங்கள் பயன்பாட்டிற்காக ஒரு சமுதாய நலக்கூடம் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை உடனடியாக ஏற்று முதலமைச்சர் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் பயன்பாட்டிற்காக சமுதாய நலக்கூடம் கட்டித்தரப்படும் என்று தெரிவித்தார். 

இந்த ஆய்வின்போது, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் குறித்து சீமான் சொன்னது என்ன?

தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில், விழுப்புரம் அருகேயுள்ள பூரிக்குடிசை கிராமத்தில் கள் விடுதலை மாநாடு ந...