கட்சிகளின் வாக்கு சதவீதத்துக்கு ஏற்ப, எஞ்சிய 29 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த சூழலில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, நாடாளுமன்ற தேர்தல் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 196 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 69 சதவீத வாக்குகள் பதிவாகின. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் என்பிபி கூட்டணி 141 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த கூட்டணிக்கு 61 சதவீத வாக்குகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் என்பிபி கூட்டணிக்கு கூடுதலாக 18 இடங்கள் கிடைத்தன.
ஒட்டுமொத்தமாக என்பிபி கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதேபோல, தேர்தலில் வெற்றி பெற்ற இடங்கள் மற்றும் வாக்கு சதவீத அடிப்படையில் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு 40 இடங்கள் கிடைத்தன. முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கவின் புதிய ஜனநாயக முன்னணிக்கு 5 இடங்களும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 3 இடங்களும் கிடைத்துள்ளன. இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு 8 இடங்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் கிடைத்தன.
மற்ற கட்சிகள் 7 இடங்களை பெற்றுள்ளன.
தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளை பொருத்தவரை, மட்டக்களப்பு மாவட்டம் தவிர்த்து, மற்ற அனைத்து பகுதிகளிலும் என்பிபி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. மட்டக்களப்பில் மட்டும் இலங்கை தமிழ் அரசு கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. யாழ்ப்பாணத்தில் என்பிபி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அங்கு தமிழர் கட்சி அல்லாத தேசிய கட்சி அமோக வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறை. மலையக தமிழர்கள் அதிகம் வாழும் நுவரெலியா மாவட்டத்திலும் என்பிபி கூட்டணி முதலிடம் பிடித்துள்ளது. கண்டி, மாத்தளை, ரத்தினபுரி, கேகாலை, பதுளை, களுத்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த கூட்டணிஆதிக்கம் செலுத்தியுள்ளது.
இந்த தேர்தல் முடிவு குறித்து தமிழ்த்தேசிய ஆய்வாளர் சர்வேந்திராவின் எண்ணங்கள்….
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் 2024 – சில அவதானங்கள்
2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவகள் வெளியாகி விட்டன. 159 ஆசனங்களைப் பெற்று, 2/3 பெரும்பான்மைக்குத் தேவையான 150 ஆசனங்களுக்கும் அதிகமான ஆசனங்களை NPP பெற்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் முன்னர் எனது நண்பர் ஒருவரைச் சந்தித்த NPP முக்கியஸ்தர் ஒருவர் ‘ நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவோம். அதன் பின் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 160 ஆசனங்கள் கைப்பற்றுவோம்’ என உறுதியாகக் கூறியுள்ளார். இத் தகவலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே நண்பர் என்னிடம் சொன்னார்.
இப்போது 159 ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. 160 யைக் குறிவைத்து அடித்து 159 இனை விழுத்தியிருக்கிறார்கள். வைத்த குறியில் சில விழாமலும் போயிருக்கலாம். எதிர்பாராமலும் சில விழுந்திருக்கலாம்.மட்டக்களப்புத் தேர்தல் மாவட்டம் தவிர்ந்த ஏனைய இடங்களில் முன்னணிக்கட்சியாகவும் NPP வந்திருக்கிறது. இவர்களின் வெற்றி தற்செயலானது அல்ல; திட்டமிட்டுச் செயலாற்றுகிறார்கள் என்பது நன்கு தெரிகிறது.
தமிழர் தாயகத்தில் இத் தேர்தல் முடிவகள் குறித்து சில அவதானங்களை இங்கு பதிவு செய்கிறேன். ஒப்பீட்டுக்காக 2020 ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் முடிவுகளை எடுத்துள்ளேன். கட்சிகளின் பெயர்களுக்காகப் பல இடங்களில் சின்னங்களையும் பயன்படுத்தியுள்ளேன்.
1. 2024 தேர்தலில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் ( ஈழத் தமிழர் ஒரு தேசம்/தேசிய இனம்) கொண்ட கட்சிகள் வடக்கு கிழக்கில் 10 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றன.
(வீடு 8, சைக்கிள் 1, சங்கு 1). 2020 ஆண்டுத் தேர்தலில் இது 13 ஆக இருந்தது( வீடு 10, சைக்கிள் 2, விக்கி – 1).
2020 இல் 7 ஆக இருந்த யாழ் தேர்தல் மாவட்ட ஆசனங்கள் இம்முறை 6 ஆகக் குறைக்கப்பட்டிருந்தன. 7 ஆசனங்கள் இருந்திருந்தால் சங்கு ஒரு ஆசனம் பெற்றிருக்கும். இக் குறைப்பைக் கவனத்திற. கொண்டால், வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2 ஆசனங்கள் தேர்தல் பெறுபேறு அடிப்படையில் இழக்கப்பட்டடிருக்கின்றன.
2. யாழ் தேர்தல் மாவட்டத்தில் இம் முறை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் 2 ஆசனங்களைப் பெற்றுள்ளன.( ஊசியைச் சேர்க்கவில்லை. சேர்தால் 3). சங்குக்கு கிடைத்திருக்கக் கூடிய ஒரு ஆசனம் 16 வாக்குகளல் NPP யிடம் பறி் போயுள்ளது. 2020 இல் இது 5 ஆக இருந்தது. ஆசனங்கள் சார்ந்து இது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதொரு பின்னடைவு.
3. இதேவேளை யாழ் தேர்தல் மாவட்டத்தில் வாக்குகள் அடிப்படையில் வாக்குகளின் வீழ்ச்சி ஆசனங்களின் வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது அதிகமில்லை. 2020 யை விட 2024 இல் ஏறத்தாழ 19,000 வாக்குகள் குறைவடைந்திருக்கின்றன.
2024 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு ஆதரவாக 149,197 வாக்குகளும் 2020 ஆண்டில் 168. 270 வாக்குகளும் கிடைத்திருப்பதாக ஒரு தரவு கூறுகிறது.
டக்ளஸ், அங்கயன் தரப்புக்கு இத் தடவை ஏறத்தாழ 30,000 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. 2020 ஆம் ஆண்டு இது ஏறத்தாழ 96,000 ஆக இருந்தன. இவ்வாறு குறைவடைந்த 66,000 வாக்குகள் இத் தடவை NPP க்கு கிடைத்த 80,830 வாக்குகளுக்குள் விழுந்திருக்க வேண்டும் என ஒரு கணிப்புத் தெரிவிக்கிறது.
4. யாழப்பாணத்தில் ஊசிக்கு விழுந்த வாக்குகள் குறித்த கவலை பலருக்கு உண்டு. வாக்களித்த மக்களின் மனநிலையை இவ் விடயத்தில் புரிந்து கொள்ள முடியவில்லை என்ற கருத்தும் உண்டு. பலரும் பேசத் தயங்கிய ஒரு விடயத்தைத் துணிந்து முதலில் பேசியவர் என்ற எண்ணம் குறிப்பிட்டளவு மக்களின் மனதில் பதிந்து விட்டது போலும். சிறை சென்றவர் என்ற அனுதாபமும் இருந்திருக்கக் கூடும்.
எனது நண்பர் ஒருவர் தேர்தலுக்கு முன்னர் சொன்னார்.
‘ நான் பல தேர்தல் வீடியோக்கள் பாக்கிறனான். ஓருத்தருக்கும் இல்லாத அளவுக்கு சனம் ஆளுக்கு கிட்டப் போகுது. விருப்பத்தோடை கதைக்குது. சனத்தைக் கவருர ஏதோ ஒண்டு ஆளிட்டை இருக்குது’. ஊசிக்கு 1 ஆசனம் வரக்கூடும் என்றும் சொன்னார். அது நடந்திருக்கிறது.
5. வன்னி தேர்தல் மாவட்டத்தில் இத் முறை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு 2 ஆசனங்கள் கிடைத்துள்ளன. 2020 இல் இது 3 ஆக இருந்தது. இங்கும் இதுவொரு் பின்னடைவுதான்.
6. வாக்குகள் சார்ந்து இத் தடவை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு ஆதரவாக ஏறத்தாழ 60,000 வாக்குகள் வன்னித் தேர்தல் தொகுதியில் கிடைத்துள்ளன. 2020 இல் இது ஏறத்தாழ 89,000 ஆக இருந்தது. வாக்குகளில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி உண்டு.
7. வடக்கில், இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளாத கட்சி NPP முதன்மை இடத்துக்கு வந்தமை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு குறியீட்டு வடிவில் பெரிய பின்னடைவுதான்.
தமிழ்த் தேசிய நிலைப்பாடு தோல்வியடைந்து விட்டது என்ற பரப்புரைக்கும் இது காரணமாகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உடைவு வந்திருக்காவிடின் இது நிகழ்ந்திருக்காது. இவ் இரண்டு மாவட்டங்களிலும் வீட்டுக்கும் சங்குக்கும் கிடைத்த வாக்குகளைக் கூட்டிப் பார்த்தால் தமிழத் தேசிய நிலைப்பாடே முதல் இடத்தில் வருகிறது. ஓவ்வொரு மாவட்டத்திலும் 1 போனஸ் ஆசனமும் மேலதிகமாகக் கிடைத்திருக்கும்.
இவ் உடைவுக்கு எவரெவர் காரணமாக இருந்தார்களோ, அவர்கள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
8. வடக்கில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளின் வாக்குகள் 2004 ஆண்டுடன் ஒப்பு நோக்கும் போது ஒவ்வொரு தடவையும் குறைவடைந்து வருகின்றது. கட்சிளுக்குள் ஏற்பட்ட பிளவுகளும், முரண்பாடுகளும், மக்கள்மயப்பட்ட செயற்திட்டக் குறைபாடு, பொது வாழ்வில் தூய்மை குறித்துக் கிளம்பும் சந்தேகம் போன்றவை இதற்குக் காரணமாக அமைகின்றன.
9. வடக்கில் ஏற்பட்ட சரிவை கிழக்கு மாகாணம் ஒரளவு தாங்கிப் பிடித்துள்ளது. இத் தேர்தலில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு ஆதரவாக 5 ஆசனங்கள் இங்கு கிடைத்துள்ளன. 2020 இல் இது 3 ஆக இருந்தது. மட்டக்களப்பில் 1 ஆசனம் அதிகமாகக் கிடைத்துள்ளது. கடந்த தடவை தவறிப் போன அம்பாறை மாவட்டப் ( நான் திகாமடுல்ல எனக் குறிப்பிடவில்லை) பிரதிதிநிதித்துவம் இத் தடவை கிடைத்துள்ளது. திருமலையில் கடந்த தடவை போல 1 ஆசனம் கிடைத்துள்ளது.
10. கடந்த தடவை அம்மாறை மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைக்கமல் போனமைக்கு கருணா அங்கு போட்டியிட்டமையால் தமிழ் வாக்குகள் பிரிந்து போனதே காரணமாகப் பார்க்கப்பட்டது. இத் தடவை தமிழ் ஆர்வலர்கள் கருணாவடன் முன்கூட்டியே கதைத்து இம்முறை அங்கு கருணா போட்டியிடுவதைத் தவிர்க்க வைத்துள்ளார்கள் என்ற தகவலயும் அறிய முடிந்தது. சங்கு தனியாகக் போட்டியிட்டாலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
11. வாக்குகள் சார்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு NPP யினைத் தோற்கடித்துள்ளது. இம் மாவட்டத்தில் இத் தடவை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு ஆதரவாக ஏறத்தாழ 114,000 வாக்குகள் கிடைத்துள்ளன. 2020 இல் இவ் வாக்கு எண்ணிக்கை ஏறத்தாழ 93,000 ஆக இருந்தது. இத் தடவை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழத் தேசிய ஆதரவு வாக்குகள் அதிகரித்துள்ளன.
12. அம்பாறை மாவட்டத்தில் இத் தடவை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு ஆதரவாக ஏறத்தாழ 42,000 வாக்குகள் கிடைத்துள்ளன. 2020 இல் இது ஏறத்தாழ 25,000 ஆக இருந்தது. இங்கும் வாக்கு அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது.
13. திருமலையில் இத் தடவை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு ஆதரவாக ஏறத்தாழ 36,000 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. 2020 இல் இத் தொகை ஏறத்தாழ 45,000 ஆக இருந்தது. வாக்கில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
14. ஓட்டுமொத்தமாக நோக்கும்போது கிழக்கை விட வடக்கில் தமிழ்த் தேசிய நிலைப்பாடு கூடுதல் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பது தெரிகிறது. தமிழ்ப் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை கிழக்கில் அதிகம். அம்பாறையில் போட்டியிடுவது தொடர்பாக கருணாவடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
இங்கு நான் தமிழ்ப் பிரதிநிதித்துவம் எனக் குறிப்பிடுவது தமிழர் பிரதிநிதியாக வருதலை அல்ல. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் பிரதிநிதிகளாக வருதலையே குறிப்பிடுகிறேன்.
15. வடக்கில் NPP முன்னணியில் வந்தமையினை ‘ வடக்கில் தமிழ் மக்கள் இனவாதத்தைப் புறந்தள்ளிருக்கிறர்கள்’ என NPP இன் டில்வின் சில்வா கூறியிருப்பதாக ஊடகச் செய்தி ஒன்றில் கண்டேன்.
இக் கூற்றில் இரண்டு பிரச்சினைகள் உண்டு.
1. தமிழ் மக்கள் மத்தியிலான வாக்கு எண்ணிக்கையில் தமிழ்த் தேசிய நிலைப்பாடுதான் இப்போதும் முன்னிலையில் நிற்கிறது.
2. நாங்கள் தேசம்/ தேசிய இனம் என நாம் எம்மை அடையாளப்படுத்துவது அனைத்துலகச் சட்டங்களின் பாற்பட்டதும், லெலின் முதல் பெனடிக்ட் அன்டேர்சன் வரையிலான தலைவர்களாலும், அறிஞர்களலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட எமது உரிமையுன் பாற்பட்டதேயன்றி, அது இனவாதமல்ல.
16. மேலே குறிப்பிட்ட விடயங்களைத் தொகுத்துப் பார்க்கும் போது தமிழத் தேசிய நிலைப்பாடு தோல்வியடைந்திருக்கிறது என்ற கூற்று பொருத்தமற்றது என்பது நன்கு தெரிகிறது. இந் நிலைப்பாடு நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது என்று கூறலாம்.
மேலும், NPP க்கு வாக்களித்தவர்களிடம் தனியாக ஒரு கருத்துக் கணிப்புவைத்து ஈழத் தமிழர் வரு தேசம்/ தேசிய இனம் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா என்று கேட்டால் பெரும்பாலானோர் ஓம் என்றுதான் பதிலளிப்பர்.
தேர்தலில் பலர் கொள்கையை மட்டும் பார்த்து வாக்களிப்பது இல்லை என்பது ஒரு அரசியற் பிரச்சினை.
தற்போதுள்ள நிலையை வந்த பின் காப்போன் நிலை எனப் புரிந்து, இதற்கு என்ன செய்யப்பட வேண்டும் என்பது உரையாடப்பட வேண்டும்.
17. பொருளாதாரத்தில் Joseph Shumpeter முன்வைத்த creative destruction என்ற கோட்பாடு ஒன்று உண்டு. இதனைப் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’என்பதற்கு நிகராகப் பார்க்கலாம்.
இங்கு பழையன, புதியன என்பவை ஆட்களைக் குறிப்பவை அல்ல. புத்தாக்கத்தையும், புதிய பண்பாட்டையும் குறிப்பன. எமது ஈழத் தமிழ் தேச நிர்மாணத்துக்கும் இக் கோட்பாட்டுச் சிந்தனை உதவும்.
இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக