வெயிலின் தாக்கத்தால் 120 க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். இதில் சிறுவர்கள், முதியவர்கள் அதிகம். பலருக்கு வாந்தி, ஒவ்வாமை ஏற்பட்டது. பலர் சோர்வடைந்து திடலை விட்டு வெளியேறினர். சிலரை ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 60 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநாடு நடந்தது திறந்தவெளி திடல் என்பதால் வெயிலின் தாக்கம் காரணமாக சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சார்லஸ் (34) என்பவர் மயங்கி விழுந்தார்.
அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல், பல இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டன. மாநாட்டு திடல் பின்பகுதியில் தொடர்வண்டியில் இருந்து குதித்த 2 வாலிபர்கள் காயம் அடைந்தனர்.இவ்வாறு விபத்துகளில் சிக்கியவர்களை மீட்டு அரசு, தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.
இதனால் 10 நிமிடத்திற்கு ஒரு முறை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் ஒலித்தவாறு சென்றபடி இருந்தது. மேலும் சில ஆம்புலன்ஸ்கள் நெரிசல் காரணமாக செல்ல வழியின்றி சிக்கி பரிதவித்தன.காலையில் தொடங்கிய ஆம்புலன்ஸ் குரல் மாலை வரையிலும் ஓயாமல் ஒலித்தபடி இருந்தது.
திருச்சி மலைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த தவெக மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிவாசன் (35), தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கலையரசன் (39) ஆகியோர் தலைமையில் 7 பேர் ஒரு மகிழுந்தில் தவெக மாநாட்டுக்கு நேற்று புறப்பட்டனர்.
அஜய் (24) என்பவர் ஓட்டினார். உளுந்தூர்பேட்டை அடுத்த பாலிஷேக் உசேன்பேட்டை அருகே திடீரென கார் சாலையோர 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சீனிவாசன் மற்றும் கலையரசன் உயிரிழந்தனர்.காயமடைந்த அஜய் உட்பட 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை பாரிமுனையைச் சேர்ந்த வசந்தகுமார்(20), நண்பரான ரியாசுடன்(17) துள்ளுந்தில் சென்றபோது, தேனாம்பேட்டை டிஎம்எஸ் அருகே மணல் சுமையுந்து மீது மோதி வசந்தகுமார் உயிரிழந்தார். ரியாஸ் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தாம்பரம் சந்தோஷ்புரம் அருகே தவெக மாநாட்டுக்குச் சென்ற மூடுந்து சாலைத் தடுப்பில் மோதியதில் ஓட்டுநர் உட்பட 11 பேர் இலேசான காயமடைந்தனர்.
தவெக மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மது அருந்திவிட்டு வரக்கூடாது, மது அருந்திவிட்டு வந்தால் மாநாட்டிற்குள் அனுமதி கிடையாது என்று விஜய் அறிவித்திருந்தார். ஆனால், நேற்று மாநாட்டுத் திடலைச் சுற்றி உள்ள மதுக்கடைகளில் தொண்டர்கள் மதுவாங்க முண்டியடித்தனர்.
குறிப்பாக விக்கிரவாண்டி பகுதியில் உள்ள மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டி, விசாலை, கூட்டேரிப் பட்டு பகுதியில் உள்ள 4 மதுக் கடைகளில் திறந்த இரண்டு மணி நேரத்திலேயே ரூ.10 இலட்சத்திற்கும் மேல் மதுபானம் விற்பனையாகி உள்ளது. மேலும் அங்குள்ள கடை வீதிகளில் சாலையில் அமர்ந்தவாறு மது குடித்து திறந்தவெளிக் குடிப்பகமாக மாற்றினர்.
உச்ச கட்டமாக மாநாட்டுத் திடலில் அமர்ந்து சிலர் வாங்கி வந்த மதுபாட்டில்களை திறந்து சாவகாசமாக குடித்தனர்.
இந்தக் காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாகப்பரவி விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக