சொகுசுக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பிறகு ஹன்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பிரெஞ்சுப் பெண் ஒருவர், கப்பலில் இருந்த மருத்துவர்களிடம் தனது அறிகுறிகளைத் தெரிவித்தபோது,அது ஒருவேளை வெறும் பதட்டமாக இருக்கலாம் என்று அவரிடம் கூறப்பட்டதாக ஸ்பெயின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொடிய ஹன்டா வைரஸ் பரவலின் மையமாக இருந்த கப்பலில் பயணம் செய்த அந்தப் பெண், சளி போன்ற அறிகுறிகளால் அவதிப்பட்டு வந்ததாகவும், ஆனால் அவை குணமடைந்து வருவதாகவும், அவருக்குக் காய்ச்சல் இல்லை என்றும் ஜேவியர் படில்லா பெர்னால்டெஸ் கூறினார். பின்னர், அந்தப் பெண் "மிகவும் கவலைக்கிடமான" நிலையில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.
ஸ்பானிய அதிகாரிகளால் "சிக்கலான" மற்றும் "முன்னெப்போதும் இல்லாத" நடவடிக்கை என விவரிக்கப்பட்ட ஒரு நிகழ்வில், 48 மணி நேரத்தில் 23 நாடுகளைச் சேர்ந்த 120 பேர் தாயகம் திரும்பியதைத் தொடர்ந்து, எம்வி ஹோண்டியஸ் கப்பல் திங்கள்கிழமை மாலை கேனரி தீவான டெனெரிஃபில் உள்ள துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டது.
செவ்வாய்க்கிழமை இரவு, ஹோண்டியஸ் கப்பலில் இருந்து பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற கடைசி இரண்டு மீட்பு விமானங்கள் நெதர்லாந்தில் தரையிறங்கின.
கிருமி நீக்கம் செய்வதற்காக ராட்டர்டாமில் நிறுத்தப்படவுள்ள அந்தக் கப்பலில், இருபத்தாறு பணியாளர்களும் இரண்டு சுகாதாரப் பணியாளர்களும் தங்கியுள்ளனர்.
பயணத்தின் போது உயிரிழந்த ஒரு ஜெர்மானியப் பயணியின் உடலையும் அந்தக் கப்பல் கொண்டு செல்கிறது.
கப்பலில் இருந்த மூன்று பேர் உயிரிழந்திருந்த போதிலும், மேலும் எட்டு பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த போதிலும், ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஸ்பானிய வெளிநாட்டு சுகாதார சேவையைச் சேர்ந்த மருத்துவர்கள் அந்த பிரெஞ்சுப் பெண்ணைப் பரிசோதித்து, அவரது அறிகுறிகளைப் பதட்டம் அல்லது மன அழுத்தம் என்று நிராகரித்துவிட்டனர் என படில்லா கூறினார்.
"இந்த அறிகுறிகள் ஹன்டா வைரஸுடன் ஒத்துப்போகும் என்று அவர்கள் நினைக்கவில்லை. ஏன்? ஏனென்றால், சில நாட்களுக்கு முன்பு தனக்கு இருமல் ஏற்பட்டு அது மறைந்துவிட்டதாகவும், அந்த நேரத்தில் தனக்கு இருந்தது ஒருவித மன அழுத்தம், பதட்டம் அல்லது நரம்புத் தளர்ச்சி போன்றது என்றும் அவர் அவர்களிடம் கூறினார். எனவே அது (ஹன்டா வைரஸாக) வகைப்படுத்தப்படவில்லை," என்று படில்லா கூறினார்.
டெனெரிஃபேயிலிருந்து கப்பல் புறப்பட்டபோது பேசிய உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயெசஸ், கப்பலில் இருந்தவர்களுக்கு உதவிக்கு வந்ததற்காக ஸ்பெயினுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், பிரெஞ்சுப் பயணி தற்போது "மிகவும் கவலைக்கிடமான" நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார். "அவர் இன்னும் சிறிது காலம் கப்பலிலேயே தங்கியிருந்தால் என்னவாகியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக