செவ்வாய், 12 மே, 2026

முள்ளிவாய்க்கால்' என்பது ஒரு தீராத வடு.

இன்று தமிழ் சமூகத்தின் மத்தியில் 'முள்ளிவாய்க்கால்' என்பது ஒரு தீராத வடு. ஆனால், அந்த வடுவை அரசியலாக்கி, ஒரு புதிய அரசியல் சக்தியை (விஜய்) முடக்க நினைப்பவர்கள் வரலாற்றின் சில பக்கங்களை மறந்துவிடுகிறார்கள்.


 "காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால் விஜய் துரோகி" என்று முழங்குபவர்கள், ஈழப் போராட்ட வரலாற்றில் நடந்த நிழல் யுத்தங்களையும், சுயநல ஒப்பந்தங்களையும் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குக் காங்கிரஸ்தான் காரணம் என்பவர்கள், அந்தப் பழிவாங்கும் படலத்தைத் தூண்டிய புள்ளி எது என்பதை உணர வேண்டும்.

1991 ஸ்ரீபெரும்புதூர் நிகழ்ந்த அந்தப் படுகொலைதான் இந்தியாவிற்கும் புலிகளுக்குமான உறவை நிரந்தரமாகத் துண்டித்தது. அமெரிக்காவின் CIA மற்றும் இஸ்ரேலின் Mossad ஆகிய உளவு அமைப்புகள், தங்களுக்குப் பணியாத ராஜீவ் காந்தியை ஒழிக்கத் தீட்டிய திட்டத்தில், வி*டுதலைப் பு*லிகள் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டனர். "மீண்டும் ராஜீவ் ஆட்சிக்கு வந்தால் உங்களை அழித்துவிடுவார்" என்ற பொய்யான அச்சத்தை விதைத்து, பெரும் நிதி கொடுத்துத் தூண்டியதன் விளைவே அந்த “ முட்டாள்தனமான”படுகொலை. 

இந்தியாவின் இளம் பிரதமர் என்ற நம்பிக்கை நட்சத்திரத்தைச் சிதைத்ததன் மூலம், ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் அனுதாபத்தையும் புலிகள் இழந்தனர். அன்று அவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் எதை விதைத்தார்களோ, அதைவிட பலமடங்கை 2009-ல் முள்ளிவாய்க்காலில் அறுவடை செய்தனர். 

நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும் என்பதற்கமைய தமது தலைவரை கொன்றவர்களை 18 வருடங்கள் கழித்து காத்திருந்து பழி தீர்த்தது காங்கிரஸ். விஜய் காங்கிரஸுடன் சேருவது துரோகம் என்றால், ஈழப் போராட்ட வரலாற்றில் நடந்த பின்வரும் நிகழ்வுகளை என்னவென்று அழைப்பது? 

1984 முதல் 1987 வரை மன்னார், வல்வெட்டித்துறை, ஊரணி எனத் தமிழ் மக்களைக் கொன்று குவித்தது முதல் “லிபரேசன் ஒபரேசன் “ என்ற இராணுவ நடவடிக்கை வரை பல ஆயிரம் தமிழர்களை இனப்படு கொலை செய்து வெறியாட்டம் ஆடிய ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) இந்திய அமைதிப்படையை (IPKF) வெளியேற்றப் புலிகள் கைகோர்த்தனர்.

ரணசிங்க பிரேமதாச அரசு வழங்கிய T56 துப்பாக்கிகளும், வெடி மருந்துக்களும் , பெரும் தொகைப்பணங்களும் , Pick ups மற்றும் pajero வாகனங்களும் இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்த புலிகளிடம் கையளிக்கப்பட்டது. 

எதிரியான UNP கட்சியுடன் கைகோர்த்த இந்தச் செயல் தமிழ் மக்களுக்கு செய்த துரோகமா? இராஜ தந்திரமா? 1995ம் ஆண்டு சூரியக்கதிர் நடவடிக்கை மூலம் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து படை நடவடிக்கை மூலம் சுடுகாடாக்கிய இலங்கை சுதந்திரக்கட்சி( SLFP) . 

அந்த கட்சியே செம்மணிப்படுகொலைகளையும் நிகழ்த்தியது என்பது உலகிற்கே தெரியும்.

 ஆனால் அந்த கட்சியில் இருந்த மகிந்த ராஜபக்சேவுடன் மில்லியன் கணக்கான டாலர்கள் பேரம் பேசப்பட்டு ரணில் விக்ரமசிங்கவைத் தோற்கடிக்கத் தேர்தலைப் புறக்கணித்து, மகிந்தாவை அரியணையில் ஏற்றியது யார்? 

 அது தமிழ் மக்களுக்கு செய்த துரோகம் இல்லையா? தங்கள் தேவைக்காக எதிரியுடன் கைகோர்ப்பது இவர்களுக்கு 'ராஜதந்திரம்', ஆனால் விஜய் ஒரு கூட்டணியை முன்னெடுப்பது மட்டும் 'துரோகமா'? அதே மகிந்தாதானே இறுதியில் முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தை நடத்தி தமிழர்களை கொன்றொழித்தான். தமிழர்களின் எதிரிகளுடன் பு+லிகள் கைகோர்த்ததை ஏன் எவரும் தட்டிக் கேட்கவில்லை? 

காரணம் பயம். தண்டனைக்குட்படுத்தப்படுவோம் என்ற பயம், துரோகி முத்திரை குத்தப்படுவோம் என்ற பயம். முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்ததில் காங்கிரஸ் அரசு இலங்கைக்கு உதவியது உண்மைதான்.

ஆனால், இறுதி யுத்தத்தில் பாதுகாப்பாக மக்கள் வெளியேற முடியாமல் தடுத்தது யார்? போர் முனையில் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாவதற்குப் புலிகளும் ஒரு காரணம் என்பதை ஐநா சபை (UN) தனது அறிக்கைகளில் சுட்டிக்காட்டியுள்ளது.

 காங்கிரஸ் யாழ்ப்பாணத்திலோ அல்லது கிழக்கிலோ அல்லது கொழும்பிலோ உள்ள பொதுமக்களைக் தேடித்தேடி குறிவைக்கவில்லை; அவர்கள் இலக்கு புலிகளாக மட்டுமே இருந்தது. ஆனால் பொதுமக்கள் கொல்லப்பட காரணமாக இருந்தவர்கள் சிங்கள அரசு… 

ஒரு இந்தியக் குடிமகனாக, ஒரு அரசியல் தலைவராக விஜய்க்கு காங்கிரஸ் என்பது தனது நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான ஒரு பழம்பெரும் கட்சி மட்டுமே. ஒரு தமிழனாகத் துயரப்படும் அதே வேளையில், ஒரு இந்தியனாகத் தனது நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க வேண்டிய கடமை அவருக்கு உண்டு. ஏனெனில் விஜய் ஒரு இந்தியன். இலங்கைத் தமிழன் இல்லை. 

 ஒரு நல்ல குடிமகனுக்கு “முதலில் நாடு... அப்புறம் தான் இனம், மதம், மொழி அனைத்தும்." யாரையும் துரோகி என்று முத்திரை குத்துவதற்கு முன், கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள். உணர்ச்சிகளால் உந்தப்பட்டு முட்டாள்த்தனமாக எடுக்கப்பட்ட தவறான முடிவுகளே இன்று ஈழத்தமிழர்களை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது. 

 1941-ல் Pearl Harbour மீது ஜப்பான் தாக்குதல் நடத்தியபோது, அது ஒரு ராணுவ வெற்றியாகக் கருதப்பட்டது. ஆனால், பலம் பொருந்திய ஒரு நாட்டின் 'ஈகோவை' சீண்டியதன் விளைவு, இரண்டு அணு குண்டுகளாக ஜப்பான் மீது விழுந்தது. பலம் பொருந்திய ஒருவனை அவனது எல்லைக்கு அப்பாற்பட்டுச் சீண்டும்போது, அதன் எதிர்விளைவு தர்ம நியாயங்களுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும் என்பதற்கு இதுவே சாட்சி.

ஈழப் போராட்டத்திலும் இதே தவறுதான் நிகழ்ந்தது. 1991-ல் இந்தியப் பிரதமராக வரவிருந்த ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்ததன் மூலம், இந்தியா என்ற மாபெரும் சக்தியின் ஈகோவை விடுதலைப் புலிகள் உரசிப் பார்த்தனர். 

அதன் விளைவு? 2009-ல் முள்ளிவாய்க்காலில் ஒட்டுமொத்தமாக அறுவடை செய்யப்பட்டது. ஒரு நாட்டின் தலைவனை அந்நிய நாட்டு பயங்கரவாதக் குழு கொல்வதை எந்த ஒரு இறையாண்மை கொண்ட நாடும் வேடிக்கை பார்க்காது. ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகே, ஈழப்போராட்டம் தொடர்பான இந்தியாவின் பார்வை மாறியது. 

 தாங்கள் வளர்த்த புலிகளை தாங்களே அழிக்க வேண்டும் என முடிவெடுத்தது. ஆகவே அனுதாபம் தேடும் 'Victim Card' அரசியலை விடுத்து, வரலாற்றுப் பிழைகளை ஒப்புக்கொண்டு முன்னேறுவதே அறிவார்ந்த செயல்.

வல்லவனைச் சீண்டினால் அழிவு நிச்சயம் என்ற வரலாற்றை இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள். விஜய் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததில் எந்தத் தவறும் இருப்பதாக தெரியவில்லை.

முகின்தன் துரைராஜசிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks