திங்கள், 16 பிப்ரவரி, 2026

பெரினிகே எகிப்தின் செங்கடல் பகுதியில் தொல்லியல் தமிழி பானை ஓடு!!

பெரினிகே எகிப்தின் செங்கடல் பகுதியில் இரண்டாம் தாலமியால் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒரு பல பண்பாட்டார் வாழ்ந்த துறைமுக நகரம் ஆகும். இது சுயெசு கால்வாய்க்கு தெற்கே 825 கி.மீ. தொலைவில் இருந்தது. பண்டு தென்னிந்திய பொருள்கள் இந்த துறைமுகத்திற்கு வந்திறங்கின. 


இங்கு நடத்திய அகழ்வாய்வில் 71 செ மீ உயர புத்தர் சிலையும் 7.55 கிலோ மிளகு, தேக்கு மரம், மட்கலங்கள் ஆகியன கண்டெடுக்கப் பட்டுள்ளன. இது இந்த இடத்தில் இந்தியர் குடியிருப்பு இருந்ததை உறுதி செய்தது. மேலும் இங்கு ணந்தை கீரன், கொற்ற பூமான் என எழுத்து பொறித்த தமிழி பானை ஓடு காணப்பட்டது. அண்மையில் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பாக 4 நாள் தமிழ் கல்வெட்டியல் கருத்தரங்கம் நடந்து முடிந்தது. 

இதில் முதல் நாள் முதல் உரையில் சுச்சர்லாந்து நாட்டு பேராசிரியர் இங்கோ திராச்சு, அவரது உடனாளர் பேராசிரியை சார்லொட்டி கிமிட்டு ஆகியோர் தமது ஆய்வு அறிக்கையை முன் வைத்தனர். இறுதியாக பேராசிரியை சார்லொட்டி பெரினிகேவில் புதிதாக கண்டு அறியப்பட்ட தமிழி கல்வெட்டு ஒன்றை பற்றி கூறி தமது உரையை நிறைவு செய்தார். அது 23 எழுத்துகள் கொண்ட நீண்ட ஒரு பலகை கல்வெட்டு ஆகும். 

இந்த இடுக்கையில் அதை பற்றி தான் கருத்து வைக்க போகிறேன். இது நெடும் பயணம் மேற்கொள்ளும் செலாவரின் (travellers) எழுத்து செதுக்கும் சிற்பி ஒருவர் வைத்த பலகைக் கல் என்கிறது இக் கல்வெட்டு. அயல்நாட்டில் 23 எழுத்துகளில் அமைந்த மிக பெரிய தமிழி கல்வெட்டு இதுவே ஆகும்.​

தாஉக்காளர் தன் கொத்தான் கொத்தான் வயிததிபலகை. ta-u-k-kaa-la-r ta-n ko-t-taa-n ko-t-taa-n va-yi-ta-ti pa-la-kai தாஉக்காளர் / தாவுக்காளர் - வழிப்போக்கர், to pace out a distance, traveller, உலகளந்தான் றா அயது (குறள் 610); தன் - உடைய; கொத்து - எழுத்து செதுக்கு, to engrave, carve, கொத்தான் - சிற்பி; பலகை - எழுத்து கல். இதை வைத்தது இப்பலகை என்று பிரித்து படிக்க வேண்டும். இதன் பொருள் தொலைவான இடம் கடக்கும் வழிப்போக்கர் (வணிகர்) உடைய எழுத்து செதுக்கும் சிற்பி இந்த பலகைக் கல்லை வைத்தான் என்பதே. வணிகரோடு தொடர்புடைய தாவாளம் என்ற சொல்லுக்கும் தாவுக்காளர் என்ற சொல்லுக்கும்ம் நெருங்கிய தொடர்புண்டு. 

ஏனெனில் வணிகரே பெரும்பாலும் நெடும் தொலைவு பயணிப்பர். ஆளர் என்ற பன்மைக்கு தம் என்ற பன்மை இடாது தன் என்ற ஒருமை இட்டது இலக்கணப் பிழை ஆகும். இதனால் கடல் வணிகர் எப்போதும் தம்முடன் ஒரு சிற்பியை வைத்திருந்தனர் என்று தெரிகின்றது. இதில் புழங்கும் முதல் எழுத்து -D & பலகையில் புழங்கும் பகரமும் சில தகர எழுத்தும் தமிழி எழுத்துகள் அல்ல, அவை சிந்து எழுத்துகளே. 

அதனால் பச்சை வண்ணத்தில் குறிக்கப்பட்டுள்ளன. இந்த முதல் எழுத்து D/த வட பிராமியில் da என்ற குறியீடாக பயன்படுத்தப்பட்டதை அறிக. இது ஒரு ஈரெழுத்து கல்வெட்டு ஆகும். நான் 2005 இல் ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வு பொருள்களை மத்திய தொல்லியல் துறை அலுவலகம் அமைந்த சென்னை கோட்டையில் பொழுது போக்காக பார்த்து வந்தபின் அகழ்வாய்வு, பழைய எழுத்துகள் ஆகியவற்றில் ஆர்வம் வளர்த்துக் கொண்டேன். பின்பு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகள் என்னும் நூலை படித்து தமிழி எழுத்துகளை அடையாளம் கண்டு படிக்கத் தொடங்கினேன். 

அந்த அறிவு தான் இப்போது இந்த கல்வெட்டை படிக்க எனக்கு உதவியது. பின்னர் 2007 இல் பேரா இரா. மதிவாணனிடம் சிந்து எழுத்து படிப்பதை கற்றுக் கொண்டேன். அப்படியே படிப்படியாக ஒரு கல்வெட்டு ஆய்வாளன் ஆகிவிட்டேன். 

இந்த கல்வெட்டு மூலம் சிந்து எழுத்தை தமிழாக படித்ததை நகையாட்டு செய்தவர் இனி கொண்டாடப் போகின்றார் பேரா இரா. மதிவாணனை. முன்னம் கொல்லிமலை நெடுவலம்பட்டி வணிக கல்வெட்டில் இதே போல தமிழி, சிந்து எழுத்து கலந்திருந்தது. அது உரிய கவனிப்பின்றி போய்விட்டது.

இது ஒரு முகப்புத்தகத்தின் பிரதியாக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks