திங்கள், 12 ஜனவரி, 2026

இலங்கை சுங்க திணைக்களத்திற்கு உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, யாழ்ப்பாணத்தின் எல்லைப் பாதுகாப்பு உட்கட்டமைப்பை மேம்படுத்த அவுஸ்திரேலியா முன்வந்துள்ளது.

அந்தவகையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் (ABF) இரண்டு உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள் இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் இன்று (திங்கட்கிழமை) காங்கேசன்துறை (KKT) துறைமுக வளாகத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. 

இதில் ஒன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் (JIA) பயணிகளின் பொதிகளைச் சோதனையிடப் பயன்படுத்தப்படும். மற்றையது காங்கேசன்துறை துறைமுகத்தில் சரக்குக் கையாளல் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்படும். 

 அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் (Paul Stephens), அவுஸ்திரேலிய எல்லைப் படையின் தளபதி போல் எட்வர்ட்ஸ் (Paul Edwards) மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த அதிநவீன ஸ்கேனர்கள் மூலம் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், தங்கம் கடத்தல் மற்றும் ஏனைய தடைசெய்யப்பட்ட பொருட்களை மிகத் துல்லியமாகவும் வேகமாகவும் கண்டறிய முடியும். இது வடபகுதியின் சர்வதேச நுழைவாயில்களின் பாதுகாப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்த உதவும்.

 அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை இடையிலான ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு அங்கமாகவே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்பு புரிந்துணர்வு மேலும் வலுவடைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks