செவ்வாய், 27 ஜனவரி, 2026

யாழில். ஊர்காவற்துறை பல்பொருள் அங்காடிக்கெதிராக 34 குற்றச்சாட்டு!!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறிச் செயற்பட்ட பல்பொருள் அங்காடி மற்றும் பலசரக்கு கடை ஆகியவற்றுக்கு நீதிமன்றம் பாரிய அபராதம் விதித்துள்ளதுடன், அவற்றைச் சீல் வைத்து மூடவும் உத்தரவிட்டுள்ளது. பொது சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) மேற்கொண்ட திடீர் சோதனையைத் தொடர்ந்து இந்தச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


சுகாதார நடைமுறைகளை மீறிய பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு எதிராக 34 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டதனை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து உரிமையாளருக்கு ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

 அதேவேளை பலசரக்கு கடை ஒன்றுக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட நிலையில் , கடை உரிமையாளரும் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , கடை உரிமையாளருக்கு 65 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

காலாவதியான பொருட்களை (Expired items) விற்பனைக்கு வைத்திருந்தமை, மனிதப் பாவனைக்கு உகந்ததல்லாத உணவுப் பொருட்களைக் காட்சிப்படுத்தியமை, பொருட்களை உரிய முறையில் களஞ்சியப்படுத்தத் (Improper Storage) தவறியமை, பொதுவான சுகாதார விதிமுறைகளைப் பேணாமை போன்ற காரங்களுக்காகவே இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

நேற்றைய தினம் (திங்கட்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உரிமையாளர்கள் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து அபராதம் விதித்த நீதவான், சுட்டிக்காட்டப்பட்ட சுகாதாரச் சீர்கேடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை இரு வர்த்தக நிலையங்களுக்கும் சீல் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks