சனி, 13 டிசம்பர், 2025

இந்தோனேசியாவில் உள்ள தமிழ் கல்வெட்டு - நொய்சு ஆச்சே

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் முறையாக இந்தோனேசியா பயணம் சென்றபோது ஜகார்த்தா அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற லாபூ தோபா கல்வெட்டை நேரில் கண்டு ஆய்வு செய்து அதைப்பற்றிய செய்தியை வெளியிட்டிருந்தேன். 


தற்சமயம் மீண்டும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிற்கு இப்போது வந்திருப்பதால் இங்குள்ள ஆச்சே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற தமிழ் கல்வெட்டினை நேரில் கண்டு அதனை காணொளிப் பதிவாக செய்யும் வாய்ப்பு கிடைத்தது.


 'மண்டபம்" என்ற தமிழ்ச்சொல் மட்டும் தெளிவாக தெரியும் வகையில் இந்தக் கல்வெட்டு உள்ளது. அண்மையில் கல்வெட்டியல் ஆய்வாளர் டாக்டர் மார்க்சிய காந்தி அவர்களைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது அவர் இக்கல்வெட்டின் தமிழ் எழுத்துக்கள் பற்றிய தகவலைப் பகிர்ந்து கொண்டதோடு அதில் உள்ள கல்வெட்டு வாசகத்தையும் அனுப்பி வைத்திருந்தார். நேரடியாக பார்த்தபோது முழுமையாக அவற்றை அடையாளம் காணமுடியவில்லை என்றாலும் மண்டபம் என்ற எழுத்தை தொட்டு பார்த்து வாசிக்க முடிந்தது. 

இந்த வாரத்தில் ஆச்சே பகுதியில் கடுமையான மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டதால் மின்சார தடை ஏற்பட்டு இருக்கின்றது. ஆகவே இன்று நாங்கள் அருங்காட்சியகம் சென்றபோது அங்கு கண்காட்சி பகுதிகள் திறந்திருந்தாலும் மின்சார விளக்கு இல்லை என்பதால் அங்கு உள்ளே செல்வது சிரமம் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். 

இவ்வளவு தூரம் வந்துவிட்டு பார்க்காமல் செல்லக்கூடாது என நான் என்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டு இங்கு ஆச்சே வந்த நோக்கமே இந்த கல்வெட்டை பார்ப்பதற்கு தான் என்ற என் விளக்கத்தையும் கூறினேன். இரண்டு அதிகாரிகள் உடனே எனக்கு உதவும் வகையில் மேலும் இருவரையும் அழைத்து அவர்கள் செல்போனைக் கொண்டு வெளிச்சத்தை உருவாக்கி இந்த கல்வெட்டை புகைப்படம் எடுக்கவும் அதனை ஒரு காணொளி பதிவு நான் செய்வதற்கும் எனக்கு உதவினார்கள். 

காணொளி பதிவு விரைவில் வெளிவரும். இந்த அருங்காட்சியகத்தில் உள்ள அதிகாரிகள் குறிப்பாக திருமதி ஹாவாணி, இளம் தொல்லியல் ஆய்வாளர் ரிஸாப் ஆகியோர் எங்களது ஆர்வத்தைக் கண்டு அருங்காட்சியகம் முழுவதையும் மின்சார விளக்கு இல்லை என்றாலும் ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று செல்போன் விளக்கொளியில் ஒவ்வொன்றையும் காட்டி விளக்கி எங்களுக்கு இங்குள்ள அரும்பொருட்களை பற்றிய அறிமுகத்தை வழங்கினார்கள். 

சோழர் கால செயல்பாடுகளைப் பற்றி நான் விரிவாக அவர்களுக்கு விவரித்தேன். பல தகவல்கள் அவர்கள் அறியாதவை. இந்தியா என்றால் சமஸ்கிருதம் என நினைத்துக் கொண்டிருந்த அவர்களுக்கு இது தமிழ் கல்வெட்டு என்பதைக் கூறி ராஜராஜன், ராஜேந்திரன் காலத்து வரலாற்றையும் விளக்கினேன். 

அருங்காட்சியக அதிகாரிகள் ஆர்வத்துடன் உரையாடினர். தமிழர்களை இங்கு சந்திப்பதல் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

-சுபா 11.12.2025 

ஆச்சே, 

இந்தோனேசியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks