பெண் ஒருவர் உட்பட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர், லாகோஸ் தோட்டம், கித்துலாவைப் பிரதேசத்தைச் சேர்ந்த, 36 வயதுடைய பிமிதா சுபாஷினி என்ற 'பலாதொட்ட மதூ' என்றழைக்கப்படுபவராவார்.
சந்தேகநபரைக் கைது செய்தபோது அவரிடமிருந்து 250 கிராம் 490 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 301 கிராம் 580 மில்லி கிராம் ஹெரோயின் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தச் சந்தேகநபர், குற்றவாளியான 'குடு சலிந்து'வின் போதைப்பொருட்களைப் பல்வேறு அளவுகளில் பொதி செய்து மொத்தமாக விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தப் பெண் சந்தேகநபருக்கு எதிராகப் பெரும் அளவில் போதைப்பொருள் வைத்திருந்தது தொடர்பாக மேல் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சந்தேகநபரான பெண்ணின் கணவரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தற்போது சிறைச்சாலையில் உள்ளவர் எனத் தெரியவந்துள்ளது.
வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவு, பண்டாரகமைப் பகுதியில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டபோது, பீதியடைந்த 'குடு சலிந்து'வின் முக்கிய உதவியாளர்கள் அங்கிருந்து தப்பிச்செல்லப் பல தந்திரங்களைக் கையாண்டுள்ளனர்.
அப்போது, ஒரு சந்தேகநபர் மோட்டார் சைக்கிளோட்டி போல மாறுவேடமிட்டு, அப்பகுதியில் உள்ள ஒரு விகாரையில் இருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்றபோது, வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினர் அவரைச் சூட்சுமமாகக் கைது செய்தனர்.
இந்தச் சந்தேகநபர் 29 வயதுடையவர், தியகம கல்பாத்த பிரதேசத்தைச் சேர்ந்த லஹிரு குமார என்ற 'சூட்டி' என்றழைக்கப்படுபவர் ஆவார்.
அவரிடமிருந்து 25 கிராம் 740 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர் 'குடு சலிந்து'வின் முக்கிய போதைப்பொருள் விநியோகஸ்தர் என்றும், இவருக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக மேல் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
சந்தேகநபரின் சகோதரரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தற்போது சிறைச்சாலையில் உள்ளவர் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட இந்த இரண்டு கடத்தல்காரர்களும், இவ்வாறான சுற்றிவளைப்புகளின்போது தப்பிச் செல்லவும், அதிகாரிகளை ஏமாற்றிச் சட்டரீதியான பாதுகாப்புப் பெறவும் தேவையான தந்திரங்களில் நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இந்த இரண்டு சந்தேகநபர்களும் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக