திங்கள், 6 அக்டோபர், 2025

பசறை - 13வது மைல்கல் லுணுகலை வீதியில் மண்சரிவு!!

பதுளை மாவட்டத்தை பாதித்துள்ள சீரற்ற வானிலை காரணமாக, பசறை 13வது மைல்கல் அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, பாறைகள் விழுந்து வீதி தடைபட்டுள்ள நிலையில், தற்போதுள்ள ஆபத்து காரணமாக, ஒரு மருங்கை மாத்திரம் திறந்து வைக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. 


 அத்துடன் பசறை, கனவெரெல்ல மேற்கு, ஹெலபொல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அங்கு வசிக்கும் மூன்று குடும்பங்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப பசறை பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

 இதற்கிடையில், பலத்த மழையை கருத்தில் கொண்டு, பல மாவட்டங்களின் பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையின்படி, அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களில் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் ஏற்கனவே தெரிவித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 பதுளை மாவட்டத்தில் ஹாலி எல, எல்ல, பதுளை, பசறை, குருநாகல் மாவட்டத்தில் நாரம்மல, மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல, ரத்தோட்டை, மொனராகலை மாவட்டத்தில் படல்கும்புர, பிபில மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை ஆகிய பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது.

இந்த அறிவிப்பு நேற்று (05) மாலை 06.00 மணி வரை அமுலில் இருந்த நிலையில், மழை தொடர்ந்து பெய்து வருவதால், இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. வீதியின் இருபுறமும் ஆபத்தான பகுதிகளைக் கடந்து செல்லும்போது வாகன சாரதிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

 அதேநேரம் வீதியின் இருபுறமும் வர்த்தகம் செய்பவர்கள் ஆபத்தான பகுதிகளில் வர்த்தகம் செய்தால், அந்த இடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் அந்த நிறுவனம், பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

மண்சரிவுக்கான அறிகுறிகள் காணப்பட்டால், அப்பகுதியின் கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளருக்கு அறிவிக்குமாறும், அதன்படி மாவட்டத்தில் உள்ள தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலகத்திற்குத் தெரிவித்து, தேவையான அறிவுறுத்தல்களைப் பெற்று, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks