80 ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலகப் போரின் இறுதி வாரங்களில், மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்பாசோ ஹவுஸில், ரஷ்ய சிறுவர் சாரணர் படையினர் (Boy Scouts) அமெரிக்க தூதருக்கு கையால் செதுக்கப்பட்ட அமெரிக்காவின் பெரிய முத்திரை பதித்த மரச் சிற்பத்தை பரிசாக அளித்தனர்.
இந்த பரிசு, போரின்போது ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை குறிக்கும் வகையில் வழங்கப்பட்டது. தூதர் டபிள்யூ. அவெரல் ஹாரிமன் இதை 1952 வரை தனது இல்லத்தில் பெருமையுடன் காட்சிப்படுத்தினார்.
ஆனால், தூதருக்கும் அவரது பாதுகாப்பு குழுவினருக்கும் தெரியாமல், இந்த முத்திரையில் "தி திங்" (The Thing) என அமெரிக்க தொழில்நுட்ப பாதுகாப்பு குழுக்களால் அழைக்கப்பட்ட ஒரு ரகசிய ஒட்டு கேட்கும் கருவி இருந்தது.
இது ஏழு ஆண்டுகள் கண்டறியப்படாமல் தூதரக உரையாடல்களை உளவு பார்த்தது.
சாதாரணமான ஒரு கலைப்படைப்பைப் பயன்படுத்தி எதிரி அமைப்பை ஊடுருவி உத்திரீதியாக நன்மையைப் பெற்றதன் மூலம், சோவியத்துகள் 'ஓடிஸியஸின் ட்ரோஜன் குதிரைக்கு' பிறகு மிகவும் புத்திசாலித்தனமான தந்திரத்தை செய்திருந்தனர். இது ஏதோ கற்பனை உளவு கதை போல் தோன்றினாலும் இது உண்மையில் நடந்தது.
ஜான் லிட்டில் என்ற 79 வயதான, உளவு நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கான நிபுணர், இந்தக் கருவியால் நீண்ட காலமாக ஈர்க்கப்பட்டு அவரே அதன் நகலையும் உருவாக்கியுள்ளார்.
அவரது அற்புதமான பணி பற்றிய ஒரு ஆவணப்படம் இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. மே மாதம் அதன் முதல் நேரடி காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த பின்னர், செப்டம்பர் 27 அன்று பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள பிளெட்ச்லி பார்க்-இல் உள்ள தேசிய கணினி அருங்காட்சியகத்தில் (National Museum of Computing) திரையிடப்பட உள்ளது.
அவர் 'தி திங் -இன் தொழில்நுட்பத்தை இசை வடிவில் விவரிக்கிறார் - இது ஆர்கன் குழாய்கள் போன்ற குழல்களும், "டிரம் தோல் போல் மனித குரலுக்கு அதிரும் ஒரு புரையும் கொண்டது. ஆனால் இது ஒரு தொப்பி முள் போலத் தோன்றும் ஒரு சிறிய பொருளாக சுருக்கப்பட்டது.
இதில் "மின்னணு இல்லை, பேட்டரி இல்லை, மற்றும் இது சூடாகாது" என்பதால் எதிர்-உளவு பரிசோதனைகளில் கவனிக்கப்படாமல் இருந்தது.
இத்தகைய கருவியின் பொறியியல் மிகவும் துல்லியமாக இருந்தது - "ஒரு சுவிஸ் கடிகாரத்தையும் மைக்ரோமீட்டரையும் இணைத்து உருவாக்கப்பட்டது".
அந்தக் காலத்தில் 'தி திங்' "ஒலி கண்காணிப்பு அறிவியலை முன்னர் சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட ஒரு நிலைக்கு உயர்த்தியது" என்று வரலாற்றாசிரியர் ஹெச் கீத் மெல்டன் கூறியுள்ளார்.
அருகிலுள்ள ஒரு கட்டடத்தில் இருந்த ஒரு தொலைநிலை டிரான்ஸ்ஸீவர் இயக்கப்பட்டபோது மட்டுமே ஸ்பாசோ ஹவுஸில் 'தி திங்' செயல்படுத்தப்பட்டது.
இது ஒரு உயர்-அதிர்வெண் சமிக்ஞையை அனுப்பியது, இது கருவியின் ஆன்டெனாவிலிருந்து வரும் அனைத்து அதிர்வுகளையும் பிரதிபலித்தது.
1951ஆம் ஆண்டு மாஸ்கோவில் பணிபுரிந்த ஒரு பிரிட்டிஷ் ராணுவ வானொலி ஆபரேட்டர், 'தி திங்' பயன்படுத்திய அதே அலைவரிசையை தற்செயலாக டியூன் செய்து, தொலைவில் உள்ள ஒரு அறையிலிருந்து உரையாடல்களைக் கேட்டபோதுதான் இது கண்டறியப்பட்டது.
அடுத்த ஆண்டு, அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் தூதரக இல்லத்தை ஆய்வு செய்து, மூன்று நாட்கள் தேடுதலுக்குப் பிறகு, கையால் செதுக்கப்பட்ட மர சிற்பத்தில் இருந்த பெரிய முத்திரை, திரைக்குப் பின் நடந்த தூதரக மட்ட உரையாடல்களைக் கேட்கும் காதாக இருப்பதைக் கண்டறிந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக