திங்கள், 21 ஜூலை, 2025

கர்நாடகா பெண்கள், சிறுமிகள் உள்பட 100 பேர் கொன்று புதைப்பு.

கர்நாடகாவின் மங்களூரு நகரில் தூய்மைப் பணியாளர் ஒருவர் 1995 முதல் 2014-க்கு இடைபட்ட காலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என சுமார் 100 உடல்களை வெவ்வேறு இடங்களில் தான் புதைத்ததாக காவல்துறையிடம் தெரிவித்தார். புகார்தாரரான இவர், இந்திய பொது பாதுகாப்பு சட்டத்தின் (பிஎன்எஸ்எஸ்) 183ஆவது பிரிவின் கீழ் ஒரு நீதிபதியின் முன் தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். 

தனக்கு மேல் இருந்தவர்கள் தன்னை கொன்றுவிடுவதாக மிரட்டியதால் இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்ததாக அவர் சொல்கிறார். "குற்ற உணர்வோடு இதற்கு மேலும் தன்னால் உயிரோடு இருக்கமுடியாது" என அவர் தெரிவித்துள்ளார்.அவரது குற்றச்சாட்டு வெளியே வந்தபின்னர், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் காணாமல் போன ஒரு பெண்ணின் தாயும் முன்வந்துள்ளார். 

உடல்கள் அடையாளம் காணப்பட்டால் தாம் டிஎன்ஏ சோதனைக்கு தயாராக இருப்பதாக காவல்துறையிடம் அவர் தெரிவித்துள்ளார். 22 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த வழக்கில், விசாரணையை எப்படி முன்னெடுத்து செல்வது என்பதை காவல்துறையினர் இன்னமும் முடிவு செய்யவில்லை.

இதற்கிடையில், இந்த விசாரணை குறித்து உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் குழு ஒன்று பல முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. "உடல்கள் ஒட்டுமொத்தமாக புதைக்கப்பட்ட இடங்கள் கண்டுபிடிக்கப்படுவதை தவிர்ப்பதற்கும், இந்த குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், பெயர்கள் வெளிவரக்கூடிய நபர்களைப் பாதுகாக்கவும் ஒரு யுக்தி கடைப்பிடிக்கப்படுவதாக தெரிகிறது," என உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கேவி தனஞ்செய் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, இந்த விவகாரத்தை விசாரிக்க கர்நாடகா அரசு ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை ஞாயிறன்று அமைத்தது. இந்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு, டிஜிபி அந்தஸ்து உள்ள காவல் அதிகாரி பிரணாப் மொஹாந்தி தலைமை வகிக்கிறார். 

இந்த வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்படவேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி கோபால் கவுடா மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பலர் வலியுறுத்தியிருந்தனர். இந்த கோரிக்கைக்கு பதிலளித்த கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, " அரசு எந்த அழுத்தத்தின் மீதும் பணி செய்யாது. நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்கவேண்டும் என காவல்துறையினர் கோரினால் நாங்கள் சிறப்பு விசாரணைக் குழுவை அமைப்போம்," என தெரிவித்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த தூய்மைப் பணியாளரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. அவர் ஶ்ரீ ஷேத்ர தர்மஸ்தலா மஞ்சுநாதா ஸ்வாமி கோயிலில் பணியாற்றினார். இந்த கோயில் தர்மஸ்தலா கோயில் என்றும் அறியப்படுகிறது. இந்தக் கோயில் தென்னிந்தியாவின் முக்கியமான மதத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது, 

இது சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. இது ஒரு சைவ கோயில், ஆனால் பூசாரிகள் வைஷ்ணவ பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் கோயில் நிர்வாகம் ஜெயின் வம்சத்தினரிடம் உள்ளது. புகார்தாரர், 1995 முதல் 2014 வரை நேத்ராவதி ஆற்றங்கரையை தவறாமல் சுத்தம் செய்து வந்ததாகக் கூறினார். 

பின்னர், அவரது பணியின் தன்மை மாறியது மற்றும் "கடுமையான குற்றங்களின் ஆதாரங்களை மறைப்பது" என்ற பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அவர் பல பெண்களின் உடல்களை பார்த்ததாகவும், அவை "ஆடைகள் இல்லாமல், பாலியல் வன்முறை மற்றும் தாக்குதலின் தெளிவான அடையாளங்களுடன்" இருந்ததாகவும் கூறினார். 

 அவரது கூற்றுப்படி, இதைப் பற்றி காவல்துறையிடம் தெரிவிக்க முயன்றபோது, அவரது மேலதிகாரிகள் அனுமதிக்கவில்லை. உத்தரவுகளைப் பின்பற்ற மறுத்தபோது, அவருக்கு மிரட்டல்கள் வந்ததாக அவர் கூறுகிறார். "உன்னை துண்டு துண்டாக வெட்டுவோம்," "உன் உடலை மற்றவர்களைப் போல புதைப்போம்," "உன் குடும்பத்தையே கொன்றுவிடுவோம்" என்று மிரட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக