ஞாயிறு, 16 மார்ச், 2025

சர்வதேச விண்வெளி நிலையத்தில் புதிய குழுவினருக்கு வரவேற்பு.

விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தின் மூலம் புதிய குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ளனர். க்ரூ-10 திட்டத்தின் கீழ், ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு சர்வதேச விண்வெளி மையத்துடன் வெற்றிகரமாக இணைந்ததாக நாசா கூறியுள்ளது. இந்த விண்கலத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்ற ஆன்னே, நிக்கோல், டாக்குயா மற்றும் கிரில் ஆகியோரை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை உள்ளடக்கிய அங்கிருந்த குழுவினர் வரவேற்றனர்.

சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 8 நாட்கள் மட்டுமே தங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் சென்ற விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, அவர்கள் 9 மாதங்களுக்கும் மேலாக தங்க நேரிட்டது. "புட்ச் மற்றும் சுனிதா ஆகிய இருவரும் ஒரு சிறந்த வேலையைச் செய்துள்ளனர்.

 அவர்களை மீண்டும் அழைத்து வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று நாசாவின் வணிகக் குழு திட்டத்தின் மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச் கூறினார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புதிய குழுவினர் சென்ற 2 நாட்களில் சுனிதா மற்றும் புட்ச் பூமிக்கு தங்களது பயணத்தை தொடங்குவார்கள். சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக பணியாளர்களான நாசாவின் நிக் ஹேக், ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ், விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் சேர்ந்து இவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர்.

 அவர்களுக்குப் பதிலாக, தற்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ-10 விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ள ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்களும் அங்கு பணிகளைத் தொடர்வார்கள்.இவ்விரு குழுக்களுக்கான பணிப்பரிமாற்றம் 2 நாட்கள் நீடிக்கும். அதன் பிறகு பழைய குழுவினர் பூமிக்குத் திரும்பும் பயணத்தை மேற்கொள்வார்கள். ஆனால், பூமியில் பாதுகாப்பான மறு நுழைவுக்கான சூழ்நிலைக்காகக் காத்திருக்க நேரிட்டால், ​​இன்னும் சிறிது தாமதம் ஏற்படலாம் என்று சர்வதேச விண்வெளி நிலையத் திட்டத்தின் மேலாளர் டானா வெய்கல் கூறினார்.

 "வானிலை ஒத்துழைக்க வேண்டும், அது சாதகமாக இல்லாவிட்டால், அந்த நேரம் வரும் வரையில் நாங்கள் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்வோம்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். கடந்த வாரமே விண்வெளி வீரர்கள் தங்களின் பணிகளை கைமாற்றத் தொடங்கிவிட்டதாக வெய்கல் விளக்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

வட மாகாண தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ்களுக்குரிய மீள் கொடுப்பனவு !!

தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ்களுக்குரிய மீள் கொடுப்பனவு வழங்குதல் தொடர்பாக! 2022, 2023 மற்றும் 2024 காலப்பகுதியில், தங்கள் பிரதேச செயலத்திற்க...