புதன், 26 மார்ச், 2025

கோவிட்-19 பரவிய 5 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களின் வாழ்க்கை .

2020 ஆம் ஆண்டுக்கு முன்பு உங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது என்று யோசித்துப் பாருங்கள். மாஸ்க், சானிடைசர், குவாரன்டைன், பொது முடக்கம் (லாக்டவுன்) ஆகிய வார்த்தைகள் உங்களுக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லாதவையாக இருந்திருக்கும். ஒருவருடன் கைகுலுக்க அல்லது அருகில் நின்று பேச தயக்கம் காட்டியிருந்திருக்க மாட்டீர்கள். 

வகுப்புகள் அல்லது வேலைகளை ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே செய்திருக்க மாட்டீர்கள். ஆனால் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு அமலான பிறகு மக்களின் அன்றாட வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது. உலகையே முடக்கிப் போட்ட கோவிட் 19 தோற்றால் இந்தியாவில் மட்டும் 4.7 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிடுகிறது. 

இது இந்திய அரசின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம் (இந்திய அரசாங்கம் இந்த எண்ணிக்கையை ஏற்க மறுக்கிறது).54 வயதாகும் கோவையை சேர்ந்த தவமணி என்பவர், கொரோனா ஊரடங்கிற்கு முன்பு சொந்தமாக ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். ஒரே வருடத்திற்குள் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையே தலைகீழாக மாறியது.

 "நான் 15-20 பணியாளர்களை வைத்து சுமார் ரூ.1 கோடி மதிப்பில் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்தேன். 2020 ஆம் ஆண்டுக்கு முன்பு எனது வாழ்க்கை மிகவும் சிறப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.தொடர்ந்து பேசிய அவர், "ஆரம்பத்தில், ஊரடங்கு அமலான போது வாடிக்கையாளர்கள் குறையத் தொடங்கினர். அப்போதே எனது நிறுவனம் சரிவை சந்திக்க தொடங்கியது. 

2021 ஆம் ஆண்டிற்குள் எனது நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்ததால், நான் அதனை மூடிவிட்டேன்", என்றார். கடன் வாங்கி வணிகத்தைத் தொடர அவர் முயற்சி செய்தாலும், தவமணியால் நீண்ட காலத்திற்கு அதனை செய்ய முடியவில்லை. "எனது நம்பிக்கை போய்விட்டது. 

ஏற்கனவே இருந்த எனது சொத்துகளை விற்று, வாங்கிய கடனை அடைத்தேன். என்னுடைய குடும்பத்தை நடத்தக் கூட என்னிடம் போதிய பணம் இல்லை", என்று கூறிய தவமணி தற்போது கோவையில் ஸ்விக்கி உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு நபர்களுக்கு வேலை கொடுத்த நான், இப்போது மாதம் 15 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையிலான சம்பளத்துக்கு, ஒரு நாளைக்கு சுமார் 150 கிலோமீட்டருக்கும் மேல் வண்டி ஒட்டுகிறேன் என்று நினைத்துப்பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருப்பதாக அவர் தெரிவித்தார். 

 "என்னுடைய வருமானத்தை எல்லாம் மொத்தமாக நிறுவனத்தில் முதலீடு செய்து ஒரு குழந்தையை போல அதனை கவனித்து வந்தேன். ஆனால் கோவிட் அனைத்தையும் மாற்றிவிட்டது.", என்றார் தவமணி. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, பல்வேறு நிறுவனங்கள் இழப்பை சந்தித்ததால் மூடப்பட்டன. "2020-21 ஆம் ஆண்டில் (ஏப்ரல் 2020 முதல் பிப்ரவரி 2021 வரை) மொத்தம் 10,113 நிறுவனங்கள் சட்டத்தின் பிரிவு 248(2) இன் கீழிலிருந்து நீக்கப்பட்டன. மத்திய அமைச்சக தரவுகளின்படி தமிழ்நாட்டில் மட்டும் 1,322 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன", என்று அப்போது கார்பரேட் விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சராக இருந்த அனுராக் சிங் தாக்கூர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார். 

நிறுவனங்கள் சட்டத்தின் பிரிவு 248(2) என்பது, நிறுவனங்கள் எந்தவொரு தண்டனை நடவடிக்கையின் காரணமாக அல்லாமல், தாமாக முன்வந்து தங்கள் வணிகங்களை நிறுத்தியுள்ளன என்பதைக் குறிக்கும் சட்டமாகும்.

பண இழப்பையும் தாண்டி பலர் தங்களது அன்புக்குரியவர்களை இந்த நோய் தொற்றின் காரணமாக இழந்துள்ளனர். 24 வயதாகும் கயல்விழி, தனது பெற்றோர் மற்றும் அண்ணனுடன் மகிழ்ச்சிகரமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். ஆனால் ஒரே வாரத்தில் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறியது. "எனது தந்தை ஒரு காவலாளி (security guard) பணியாற்றினார்.

ஊரடங்கு அமலில் இருந்தாலும் அவர் வேலைக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. கோவிட் தொற்றின் இரண்டாம் அலையின்போது, ஒரு நாள் அவர் லேசான காய்ச்சலுடன் வீட்டிற்கு திரும்பினார். வீட்டிற்குள்ளே ஒரு அறையில் அவர் தன்னை தனிமைபடுத்திக் கொண்டார். 

இரண்டு நாட்களில் அவரது நிலை மோசமானது", என்று நினைவு கூர்கிறார் கயல்விழி.அவரது தந்தை சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். "மருத்துவமனையில் அனுமதி பெறவே கடினமாக இருந்தது. படுக்கை பெற பற்றாக்குறை இருந்தது. 

என்னதான் எனது தந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும், அவரது உடல்நிலை மிகவும் நலிவடைந்து. அவர் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டார், ஆனால் அவர் மீண்டுவரவில்லை", என்று கண்ணீர் மல்க கூறினார் கயல்விழி. குடும்பத்தில் இருந்த ஒரே வருமானம் ஈட்டுபவரும் இறந்துபோனதால், காயல்விழியின் குடும்பமே திகைத்து நின்றது. அவரது தாய், பூ விற்பது, தோசை மாவு விற்பது போன்ற சிறு தொழில்கள் செய்தாலும் அது போதுமானதாக இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

2009 இறுதி யுத்தத்தின் மறைக்கப்பட்ட பக்கம் .

இந்தியா தமிழீழத்தை எப்போதும் தனது துருப்பு சீட்டாகவே பயன்படுத்தி வந்தது. அந்தவகையில் தான் ஆரம்பத்தில் இந்திரா காந்தி காலத்தில் தனது நலன் சார...