அவரது பணியால், கிரீன்லாந்தை டென்மார்க் கட்டுப்படுத்தும் முறை எளிதானது. அதனைத் தொடர்ந்து, கிரீன்லாந்து டென்மார்க்கின் முக்கிய காலனி ஆனது.
வரலாற்றில் ஹான்ஸ் எகெடேவின் பங்கை, அவரது சிலை இன்றும் மக்களுக்கு நினைவூட்டுகிறது.
ஆனால் அவரது பாரம்பரியம் விவாதத்திற்கு உரிய பொருளாக உள்ளது. சிலர் அவரை ஒரு நல்ல தலைவராக பார்க்கிறார்கள்.
ஆனால், கிரீன்லாந்தில் டென்மார்க்கின் காலனித்துவ ஆட்சி நடைபெற ஹான்ஸ் எகெடே உதவினார் என மற்றவர்கள் நினைக்கிறார்கள்.
1970களின் பிற்பகுதியில் ஒரு நாள், அவரது வெண்கல சிலை திடீரென்று சிவப்பு வண்ணம் பூசப்பட்டு காணப்பட்டது.
நான் பள்ளிக்குச் செல்லும் வழியில், அந்தச் சிலையை தினமும் கடந்து சென்றதால் அந்த நாள் எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது.
என் தந்தை நூக் நகரத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நிலவியல் கற்பித்து வந்த போது, நான் இரண்டு ஆண்டுகள் கிரீன்லாந்தில் வாழ்ந்தேன்.
அப்போது, வட அமெரிக்காவின் ஆர்க்டிக் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட பல பூர்வகுடி மக்கள், 250 ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்தில் எகேட் செய்த மாற்றங்களால் மகிழ்ச்சியடையவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது .
பெரும்பாலும், டென்மார்க் மக்களை விட மிகச் சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வந்த பூர்வகுடி மக்கள், அவர்களது வீட்டிற்கு பிளாஸ்டிக் பைகளை எடுத்துச் செல்வர்.
அதிலிருந்து கேட்கும் பீர் பாட்டில்களின் சத்தம், அங்கு இருந்த பரவலான குடிப்பழக்கத்தின் சான்றாக இருந்தது.
டென்மார்க் கிரீன்லாந்திற்கு கொண்டு வந்த தீங்கு விளைவிக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று.
ஆனால் அதே சமயம், நவீன சுகாதாரம் மற்றும் நல்ல கல்வி போன்ற மறுக்க முடியாத பல நல்ல விஷயங்களையும் டென்மார்க் கிரீன்லாந்து மக்களுக்கு அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிலை மீது சிவப்பு வண்ணம் பூசப்பட்டது எதிர்ப்பின் அடையாளத்தைக் குறித்தது.
ஆனால் கிரீன்லாந்தின் சுதந்திர இயக்கம், அப்போது ஆரம்ப கட்டத்தில்தான் இருந்தது.என் பள்ளிக்கு அடுத்ததாக இருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில், கிரீன்லாந்தில் தீவிர மாணவர் இயக்கம் ஒன்று வளர்ந்து வருவதைக் கண்டேன்.
சில இளம் மாணவர்கள் டேனிஷ் மொழிக்குப் பதிலாக தங்கள் சொந்த மொழியான கிரீன்லாண்டிக்கில் கற்பிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதனையடுத்து, இரண்டு நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த அதிகாரப்பூர்வ பெயரான கோதாப்பைக் கைவிட்டு, 1970 களின் பிற்பகுதியில், கிரீன்லாந்தின் தலைநகரின் பெயர் நூக் என மாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற டொனால்ட் டிரம்ப் ஆர்வம் காட்டுவதால், தற்போது மீண்டும் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் கிரீன்லாந்து (டென்மார்க் தன்னாட்சிப் பகுதி) அல்லது பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டைப் பெற ராணுவ அல்லது பொருளாதார சக்தியைப் பயன்படுத்துவீர்களா என்ற கேள்விக்கு,
"இல்லை, இரண்டு விஷயங்களைப் பற்றியும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது.
ஆனால் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு அவை தேவை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்" என டிரம்ப் பதிலளித்தார்.
பின்னர், ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் அளித்த பேட்டியில், "நாங்கள் அதைப் (கிரீன்லாந்தை) பெறப் போகிறோம் என்று நினைக்கிறேன்," என செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்தார்.
கிரீன்லாந்து தீவின் 57,000 குடியிருப்பாளர்கள் "எங்களுடன் இருக்க விரும்புகிறார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
கேள்வி என்னவென்றால், அந்த மக்கள் விரும்புகிறார்களா? என்பது தான்.
இதற்கிடையில், டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன், கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்ற கருத்தை வலியுறுத்தினார்.
"கிரீன்லாந்து மக்களுக்கு சொந்தமானது தான் கிரீன்லாந்து" என்றும் அவர் குறிப்பிட்டார்.
அது மட்டுமின்றி, "கிரீன்லாந்து மக்களே தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும்"என்றும் மெட்டே பிரெடெரிக்சன் கூறினார்.
கிரீன்லாந்து மக்களின் கருத்துக் கணிப்பில், 6 சதவீத மக்கள் மட்டுமே தங்கள் நாடு அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், 9 சதவீத மக்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், 85 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.
ஆனாலும், கிரீன்லாந்து மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது ஒரு நுட்பமான கேள்வி என்பதை ஃபிரடெரிக்சன் அறிவார்.
1720 களில் கிரீன்லாந்தில் தனது காலனித்துவத்தைத் தொடங்கியதிலிருந்து, டென்மார்க் தன்னை உலகின் கருணை மிகுந்த ஏகாதிபத்தியவாதியாக பல காலமாக வெளிக்காட்டி வருகின்றது.
இருப்பினும், கடந்த காலங்களில் கிரீன்லாந்து மக்களிடம் சர்வாதிகார முறையில் அவர்கள் நடந்துகொண்ட விதம் வெளிப்பட்டதால், இந்த பிம்பம் சமீபத்திய ஆண்டுகளில் பலவீனமடைந்துள்ளது.
குறிப்பாக, கிரீன்லாந்து மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கடுமையான அநீதிகள் வெளிவந்துள்ளன.
இந்த அநீதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்தவை அல்ல, தற்போதும் உயிருடன் உள்ள மக்களின் காலத்தில் நடந்தவை தான். பெரிய அளவில் நடந்த, சர்ச்சைக்குரிய கருத்தடை நடவடிக்கையும் இவற்றுள் அடங்கும்.
கிரீன்லாந்தைச் சேர்ந்த பெண்களின் ஒப்புதல் இல்லாமல் அல்லது அவர்களுக்குத் தெரியாமல் அவர்களின் உடலில் IUD கள் (ஒரு வகையான குழந்தை பிறப்பு கட்டுப்பாட்டுக் கருவி) வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அதிகாரிகள் இணைந்து விசாரித்து வருகின்றனர்.
1966 மற்றும் 1970க்கு இடையில், கிரீன்லாந்தில் உள்ள பருவமடைந்த பெண்களில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு அவர்களின் அனுமதியின்றி குழந்தை பிறப்பு கட்டுப்பாடுக் கருவிகள் ( IUD ) வைக்கப்பட்டதாக ஆதாரங்கள் கூறுகின்றன.
கடந்த டிசம்பரில், கிரீன்லாந்து பிரதமர் முட் எகெட் இதனை "கிரீன்லாந்து மக்களுக்கு எதிராக டென்மார்க் அரசால் நடத்தப்பட்ட நேரடி இனப்படுகொலை" என்று விவரித்தார்.
கிரீன்லாந்துக்கும் டென்மார்க்கிற்கும் இடையிலான உறவுகளைப் பற்றி பொதுவாக விவாதித்த டென்மார்க் தொலைக்காட்சி நிறுவனத்திடம் பேசிய போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
கூடுதலாக, 1960கள் மற்றும் 1970களில், கிரீன்லாந்து நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குழந்தைகள், அவர்களின் சொந்த தாய்மார்களிடமிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதாவது வளர்ப்பு பெற்றோரால் டென்மார்க்கில் வளர்க்கப்படுவதற்காக கொண்டுசெல்லப்படுகிறார்கள் என்பது போன்ற சந்தேகம் எழுந்தது.
ஒருபுறம், சில குழந்தைகளுடைய சொந்த தாய்மார்களின் சம்மதமின்றி இவ்வாறு நடந்துள்ளது.
மறுபுறம், இத்துடன் தங்கள் குழந்தைகளுடனான அனைத்து தொடர்புகளையும் நிரந்தரமாக இழக்க நேரிடும் என்று மற்ற தாய்மார்களிடம் கூறப்படவில்லை.
இதுபோன்ற நடவடிக்கைகள், பல ஆண்டுகள் கழித்தும் ஆறாத ஒரு ஆழமான காயத்தை விட்டுச் சென்றுள்ளது.
தத்தெடுக்கப்பட்ட கிரீன்லாந்து குழந்தைகள் சிலரால் பின்னாளில் தங்களது சொந்த பெற்றோரைக் கண்டுபிடிக்க முடிந்தது.
ஆனால் இன்னும் பலரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது தொடர்பாக, ஒரு சிறிய குழு 2024 ஆம் ஆண்டில் டென்மார்க் அரசிடமிருந்து இழப்பீடு கோரியுள்ளது.
இது வெற்றி பெற்றால், தத்தெடுக்கப்பட்டவர்கள் பலராலும் இதேபோன்று ஏராளமான கோரிக்கைகளை முன் வைக்கமுடியும்.
கிரீன்லாந்தில் வளர்ந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியர் இபென் மாண்ட்ரூப், இந்த சமீபத்திய நிகழ்வுகளை டென்மார்க் மக்களுக்கான கடுமையான எச்சரிக்கை மணியாகக் கருதுகிறார்.
அவர்கள் நீண்ட காலமாக கிரீன்லாந்தில் நேர்மறையான மற்றும் நல்ல செல்வாக்கைக் கொண்டவர்களென தங்களைப் பார்க்க பழகிவிட்டனர்.
"டென்மார்க் எதையும் திரும்பப் பெறாமல் கிரீன்லாந்திற்கு உதவி செய்து கொண்டிருந்தது என்ற கதையை அடிப்படையாகக் கொண்டு முழு உறவும் கட்டப்பட்டது" என்று அவர் கூறுகிறார்.
"கிரீன்லாந்தை பாதுகாத்து, அதன் சொந்தக் காலில் நிற்கக் கற்றுக் கொடுத்த தாய்நாடாக நாங்கள் டென்மார்க்கை விவரித்துள்ளோம்.
டென்மார்க் ஒரு ஆசிரியர் அல்லது பெற்றோர் என்றும், கிரீன்லாந்தை ஒரு மாணவர் அல்லது குழந்தை என்றும், கிரீன்லாந்துடனான டென்மார்க்கின் உறவை மக்கள் அடிக்கடி குறிப்பிடுகிறார்கள்" எனக் கூறி தொடர்ந்து பேசிய இபென், "டென்மார்க் எந்த நன்மையும் எதிர்பார்க்காமல் கிரீன்லாந்திற்கு உதவுகிறது என்று இந்த உறவு எப்போதும் விவரிக்கப்படுகிறது" என்றும் கூறுகிறார்.
மேலும், "ஏதோ கிரீன்லாந்து எங்களுக்கு கடன்பட்டிருப்பது போல , கிரீன்லாந்து எங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று டென்மார்க் மக்களாகிய நாங்கள் அடிக்கடி நம்புகிறோம்." எனவும் அவர் விவரிக்கிறார்.
BBc Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக