செவ்வாய், 7 ஜனவரி, 2025

ஆளுநர் – தமிழ்நாட்டை விட்டு வெளியேற கோரிக்கை!!

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து 4 ஆவது ஆண்டின் முதல்கூட்டம் நேற்று நடந்தது. ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாடு ஆளுநர் உரையுடன் 2025ம் ஆண்டு சட்டப்பேரவையின் கூட்டம் தொடங்கும் என்று பேரவைத்தலைவர் அப்பாவு இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

இதற்காக பேரவைத்தலைவர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து சட்டப்பேரவையில் உரை நிகழ்த்த அழைப்பு விடுத்தார்.அந்த அழைப்பை ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று காலை 9.30 மணிக்குக் கூடியது. முன்னதாக காலை 9 மணி முதலே அமைச்சர்கள், சமஉக்கள், சட்டப்பேரவை வளாகத்துக்கு வரத் தொடங்கினர். 

காலை 9.27 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்குள் வந்தார். சட்டப்பேரவையில் உரையாற்றுவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி 9.24 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்துக்குள் வந்தார். அவருக்கு காவல்துறை பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

 தொடர்ந்து, காவல்துறை அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட ஆளுநரை பேரவைத்தலைவர் அப்பாவு மற்றும் சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து சிவப்புக் கம்பள வரவேற்புடன் பேரவைக்கு ஆளுநர் அழைத்து வரப்பட்டார்.காலை 9.29 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைக்குள் வந்தார். 

இதைத் தொடர்ந்து, பேரவை கூட்டம் தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. சரியாக காலை 9.30 மணிக்கு ஆளுநர் உரையை ஆர்.என்.ரவி படிக்க எழுந்தார். அவர் முதலில் அனைவருக்கும் ‘வணக்கம்’ என்று தமிழில் கூறினார். அப்போது அதிமுக உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று, அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். மேலும் அவர்கள் சட்டையில் ‘யார் அந்த சார்?’ என்று பேட்ஜ் குத்தி இருந்தனர். 

அதோடு அவர்கள் மறைத்து வைத்திருந்த பதாகையைத் தூக்கிப் பிடித்தபடி அவைக்குள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். இந்த முழக்கத்துக்கு நடுவே ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் உரையில் இல்லாத வார்த்தையைப் படித்தார். ஆனால், சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது தெளிவாகக் கேட்கவில்லை. 

 அதேநேரம், காங்கிரசு உறுப்பினர்களும் சட்டமன்ற காங்கிரசுத் தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் பேரவையில் கூச்சல், குழப்பம், அமளி ஏற்பட்டது. அதிமுக மற்றும் காங்கிரசு உறுப்பினர்கள் அவையின் முன்பகுதிக்கு வந்து ஆளுநர் இருக்கைக்கு எதிரே நின்று முழக்கங்களை மாற்றி மாற்றி எழுப்பி கொண்டிருந்தனர். 

காங்கிரசு உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். இவர்கள் முழக்கத்துக்கு மத்தியில், ஆளுநர் ஆர்.என்.ரவியும் சத்தமாகப் பேசிக் கொண்டிந்தார். அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென சட்டப்பேரவையில் இருந்து ஆர்.என்.ரவி வேகமாக அவையில் இருந்து வெளியேறினார். ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் சுமார் 3 நிமிடம் மட்டுமே இருந்தார்.

தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் இருந்து ஒரு வரிகூட படிக்காமல் சென்றார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின்,ஆளுநர் உரையை பேரவைத்தலைவர் அப்பாவு தமிழில் படிக்கத் தொடங்கினார். 

அப்போது பாஜக உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன் தலைமையில் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.தொடர்ந்து அவை முன்னவர் துரைமுருகன் பேசும்போது, ‘சட்டமன்ற மரபுப்படி இறுதியில் நாட்டுப் பண் பாடப்படப்படும் என்று விளக்கம் அளித்தார். அதேபோல சட்டப்பேரவையின் நேற்றைய கூட்டம் முடியும்போது தேசியக்கீதம் பாடப்பட்டு, காலை 10.44 மணிக்கு கூட்டம் முடிவடைந்தது. 

ஆளுநர் உரையாற்றாமல் சென்றது சட்டமன்ற மாண்பை மதிக்காத, சிறுபிள்ளைத்தனமான செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அவருடைய சமூக வலைதளப் பதிவில்…. கடந்த ஆண்டுகளில் அரசின் உரையில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர், இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது.

தமிழ்நாட்டு மக்களையும், அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. “தனது அரசியல் சட்டக்கடமைகளை செய்யவே மனமில்லாதவர் அந்த பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?”

என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஆளுநருக்குக் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அரசியல் சட்டக் கடமையை நிறைவேற்றாத ஆளுநர் தமிழ்நாட்டை விட்டே வெளியேறவேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு!!

கிளிநொச்சியின் மாங்குளம் கனகராயன்குளம் ஆகிய பிரதேசங்களில் பெய்து வருகிற கனமழை காரணமாக அதிகளவான நீர் இரணைமடு குளத்துக்கு வந்து கொண்டிருக்கிறம...