வெள்ளி, 31 ஜனவரி, 2025

சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் ஐந்து மாதங்களாக கிடந்த தந்தை-மகளின் சடலங்கள்.

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், பூட்டிய வீட்டுக்குள் ஐந்து மாதங்களாக கிடந்த தந்தை-மகளின் சடலங்களை காவல் துறையினர் மீட்டுள்ளனர் என்று, தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிந்தியா (37) என்ற பெண்ணுக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சாமுவேல் எபினேசருக்கும் சமூக ஊடகம் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

சிந்தியா தனது தந்தை சாமுவேல் சங்கருக்கு (78) டயாலிசிஸ் சிகிச்சை வழங்க வேண்டும் என்று கூறியபோது தான் சிகிச்சை அளிப்பதாக கூறியுள்ளார். அதன்படி, சிந்தியாவும் சாமுவேல் சங்கரும் சென்னை திருமுல்லைவாயலில் எபினேசர் தங்கி இருந்த வீட்டுக்கு வந்துள்ளனர். இந்நிலையில், செப்டம்பர் 6ம் தேதி சாமுவேல் சங்கர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிந்தியா எபினேசருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

இதில் ஏற்பட்ட மோதலில் சிந்தியாவை கீழே தள்ளிவிட்டதில், தலையில் காயம் ஏற்பட்டு சிந்தியா இறந்துவிட்டார் என தெரியவந்ததாக அச்செய்தி கூறுகிறது. எபினேசர் பின்னர் இருவரிடன் உடல்களை ஒரு அறையில் வைத்து பூட்டியதாகவும் ஏசி இயந்திரத்தை இயக்கிவிட்டு, வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் சென்றுவிட்டதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிந்தியாவின் உறவினர்கள் சிந்தியாவிடமிருந்து ஐந்து மாதங்களாக பேச முடியாததால் சந்தேகப்பட்டு, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, எபினேசரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காதல் தம்பதியை ஆணவக் கொலை செய்ததற்காக நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து, கர்நாடகா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக, தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

கர்நாடகாவில் கதக் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் மடரா (29) மற்றும் கங்கம்மா (23) இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், கங்கம்மாவின் குடும்பத்தினர் இவர்களின் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.


கடந்த 2019ம் ஆண்டு கங்கம்மாவும் ரமேஷும் தங்கள் இரு குழந்தைகளுடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அந்த சமயத்தில் அங்கு வந்த கங்கம்மாவின் சகோதரர்கள், உறவினர்கள் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் அப்போது குழந்தைகளின் கண்முன்னே அவர்கள் இருவரையும் கல் மற்றும் உருட்டு கட்டையால் தாக்கி படுகொலை செய்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, கங்கம்மாவின் சகோதரர்கள் ரவிக் குமார் ராத்தோட், ரமேஷ் ராத்தோட், சிவப்பா ராத்தோட் மற்றும் பரசுராம் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். ஐந்து ஆண்டுகளாக இந்த வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், அவர்கள் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டு வருகிறது என, தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 8,42,412 குழந்தை பிறப்புகள் நிகழ்ந்துள்ளன. அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளின் தரவுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஒன்பது லட்சத்துக்கும் மேலான பிறப்புகள் பதிவாகியுள்ளன.

2023-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 9,02,306 பிறப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால், 2024ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 6.6% குறைந்துள்ளது என பொது சுகாதாராத்துறை இயக்குநரக தரவுகள் தெரிவிக்கின்றன. மாநிலத்தின் பிறப்பு விகிதம் 2023ம் ஆண்டு 11.7 ஆகவும், 2024-ம் ஆண்டில் 10.9 ஆகவும் இருந்தது. பொது சுகாரத்துறை இயக்குநர் டி.எஸ். செல்வவிநாயகம், "பிற வளர்ந்த, வளர்ந்து வரும் நாடுகளை போல இங்கும் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. 

எனினும், பிறப்பு விகிதம் குறைவதற்கு நிறைய நேர்மறையான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், எதிர்காலத்தில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது ஒரு சவாலாகும்" என்றார். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் பொது சுகாதார மையத்தின் தலைவர் ஜேக்கப் ஜான், "பிறப்பு விகிதம் குறைவது, உடல்நல காரணங்களால் ஏற்படவில்லை, பொருளாதார, சமூக காரணங்களால் குறைந்துள்ளது. 

பிறப்பு விகிதம் குறைவது, வேலை செய்யும் வயதில் உள்ளவர்களின் எண்ணிக்கையை குறைக்கும், வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், அதற்கேற்ற திட்டமிடல்கள் தேவை" என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கடைத் திருட்டு.

இ ங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கடைத் திருட்டு குற்றங்கள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன, இத...