திங்கள், 13 ஜனவரி, 2025

கண்டி - தவுலகல பகுதியில் சிறுமியை கடத்திய உண்மையான காரணத்தை கூறிய சந்தேகநபர்.

பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞன் மாணவியை கடத்தியமைக்கான காரணத்தை வௌிப்படுத்தியுள்ளார். குறித்த சந்தேக நபர் தனது மாமாவின் மகளையே இவ்வாறு கடத்திச் சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர், ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்ததாகவும், அங்கு சம்பாதித்த பணத்தை தனது மாமாவிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். 

பணம் தனக்குத் திருப்பித் தரப்படாததால், இதுபோன்ற செயலைச் செய்யத் தூண்டப்பட்டதாகவும் சந்தேக நபர் கூறியுள்ளார். தவுலகல பகுதியில் தொழிலதிபர் ஒருவரின் 18 வயது மகள் கடத்தப்பட்ட நிலையில், கடத்தப்பட்ட மாணவி மற்றும் சந்தேக நபரை கைது செய்ய 5 பொலிஸ் குழுக்களை பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி, கடத்தலை மேற்கொண்ட சந்தேக நபரின் கைப்பேசி தரவுகளை பகுப்பாய்வு செய்ததில், சந்தேக நபர் அம்பாறை பொலிஸ் பிரிவில் இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபரும் சிறுமியும் இன்று காலை அம்பாறை பேருந்து நிலையத்திலிருந்து கண்டிக்கு புறப்படும் சொகுசு பேருந்தில் இருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 

 சந்தேக நபர் பொலிஸ் காவலில் இருப்பதாகவும், சிறுமியை வைத்தியவரிடம் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக