யுக்ரேனின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஏடிஏசிஎம்எஸ் (ATACMS) எனப்படும் ஏவுகணைகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்று பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறார். இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் யுக்ரேன், தனது நாட்டின் எல்லைக்கு அப்பாலும் அதனை பயன்படுத்தி தாக்குதல் நடத்த முடியும்.
ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியான இந்த செய்திகளுக்கு பதிலளித்த ஜெலென்ஸ்கி, “ஏவுகணைகளின் மொழி என்பது வேறு. இது குறித்த விஷயங்கள் அறிவிக்கப்படவில்லை" என்று கூறினார்.
இந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மேற்கத்திய நாடுகளுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தார். கட்டுப்பாடுகளை நீக்குவது, யுக்ரேன் போரில் நேட்டோ ராணுவ கூட்டணியின் ‘நேரடி பங்கேற்பை’ பிரதிநிதித்துவப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிக்கைகள் குறித்து புதின் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும் மற்ற மூத்த ரஷ்ய அரசியல்வாதிகள், இந்த அறிக்கைகள் பதற்றத்தை அதிகரித்துள்ளன என்று விவரிக்கிறார்கள்.
ஏடிஏசிஎம்எஸ் தொடர்பான அமெரிக்காவின் முடிவு என்பது, ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்திற்குள் யுக்ரேனிய படைகளின் பாதுகாப்புடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
அங்கு கடந்த ஆகஸ்டில், யுக்ரேன் திடீரென தாக்குதலைத் தொடங்கியது.
அதாவது, இப்போது தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ரஷ்ய நிலப்பரப்பின் சிறு பகுதியை தக்க வைத்துக் கொள்ளும் யுக்ரேனின் முயற்சிகளுக்கு உதவுவோம் என பைடனின் நிர்வாகம் உறுதியளிக்கிறது. வருங்கால பேச்சுவார்த்தைகளில் இந்த நிலப்பரப்பை ஒரு பேரம் பேசும் கருவியாக பயன்படுத்தலாம் என யுக்ரேன் நினைக்கிறது.யுக்ரேன் தலைநகர் கீவை தளமாகக் கொண்ட யுக்ரேனிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு மையத்தின் தலைவர் செர்ஹி குசான், ஜோ பைடனின் முடிவு தனது நாட்டிற்கு ‘மிகவும் முக்கியமானது’ என்று பிபிசியிடம் கூறினார்.
"இது போரின் போக்கை மாற்றும் ஒன்று அல்ல, ஆனால் அது எங்கள் படைகளை மேலும் வலிமை கொண்டதாக மாற்றும் என்று நான் நினைக்கிறேன்." என்றார்.
ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணைகள் 300கிமீ (186 மைல்கள்) வரை தாக்குதல் நடத்தக் கூடியவை. பெயர் கூற விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட்டிடம் பேசுகையில், ‘யுக்ரேன், ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணையைப் பயன்படுத்தலாம் என்ற பைடனின் அனுமதி, வட கொரிய வீரர்களை யுக்ரேனில் சண்டையிட அனுமதிக்கும் ரஷ்யாவின் முடிவிற்கு பதிலடியாக வந்தது’ என்று கூறியுள்ளனர்.
ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் இருந்து யுக்ரேனியப் படைகளை வெளியேற்றுவதற்காக திட்டமிடப்பட்ட ரஷ்ய மற்றும் கொரிய துருப்புகளின் தாக்குதலுக்கு முன்னதாகவே, ஏடிஏசிஎம்எஸ் குறித்து முடிவு வந்துள்ளதாக குசான் கூறினார். ரஷ்ய-வடகொரிய வீரர்களின் கூட்டுத் தாக்குதல் சில நாட்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குர்ஸ்க் பகுதியில் 11,000 வட கொரிய வீரர்கள் இருப்பதாக யுக்ரேன் முன்னதாக மதிப்பிட்டிருந்தது.
அமெரிக்க அதிபர் பைடனின் முடிவால், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள், ரஷ்யாவிற்குள் நீண்ட தூர ‘ஸ்டார்ம் ஷேடோ’ (Storm shadow) ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த யுக்ரேனுக்கு அனுமதி அளிக்கக்கூடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக