கன்னியாகுமரி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையின் அருகாமையில் அமைந்துள்ள இத்திட்டப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் அனைத்தும் 400 சதுர அடி பரப்பளவில் ஒரு வரவேற்பறை, ஒரு படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை மற்றும் குடிநீர் இணைப்பு மின் இணைப்பு போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டப்பகுதியில் தார் சாலை, தெரு விளக்கு, கழிவு நீரகற்று வசதி, மழைநீர் வடிகால், மழைநீர் சேமிப்பு முறைகள் மற்றும் நிழல் தரும் மரங்கள் போன்ற அடிப்படை மேம்பாட்டு வசதிகள் அமைக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் அக்டோபர் 29ம் தேதி அன்று திறந்து வைக்கப்பட்டது.
இத்திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள ஒரு குடியிருப்புக்கான மதிப்பீட்டு தொகை 10.61 லட்சங்கள் ஆகும். இதில் ஒன்றிய அரசின் பங்களிப்பாக 1.50 லட்சமும், மாநில அரசின் பங்களிப்பாக 7 லட்சமும் மானியமாக வழங்கப்படுகிறது.
மீதமுள்ள 2.11 லட்சம் பயனாளிகளிடமிருந்து பங்களிப்பு தொகையாக பெறப்படுகிறது. இந்நிலையில் சொந்த வீடற்ற தூய்மை பணியாளர்களுக்கு சொந்தமாக வீடு வழங்கும் நோக்கத்தில் பயனாளிகள் பங்களிப்பு தொகையில் 90 சதவீதம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியம் மூலம் மானியமாக வழங்கப்பட்டு மீதமுள்ள 10 சதவீதம் பங்களிப்பு தொகை பயனாளிகள் செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தாட்கோ மூலம் தூய்மை பணியாளர்கள் நலவாரிய அட்டை பெற்றுள்ள 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தூய்மை பணி செய்பவர்கள் விண்ணப்பிக்கலாம் பணியாளர்கள் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ சொந்தமாக விடோ நிலமோ இருத்தல் கூடாது.
மேலும் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும்.மேற்கண்ட தகுதியுள்ள பயனாளிகள் தூய்மை பணியாளர் நலவாரிய அட்டை நகல், குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களது ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் வருமானச் சான்று, பணிபுரியும் சான்று மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல் போன்ற ஆவணங்களுடன் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம், நாகர்கோவிலில் நவம்பர் மாதம் 20, 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நேரில் வந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக