வெள்ளி, 20 செப்டம்பர், 2024

லெபனான் எல்லைக்குள் இஸ்ரேல் போர் விமானங்கள்.

இஸ்ரேல் தனது போர் விமானங்கள் மூலம் 100க்கும் மேற்பட்ட ஹெஸ்பொலா ராக்கெட் ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு லெபனானில் உள்ள ஆயுதங்கள் சேமிப்பு வசதி உட்பட பிற “பயங்கரவாத தளங்களை” தாக்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக ஏவுவதற்காக அந்த ராக்கெட் ஏவுதளங்கள் தயாராக இருந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. லெபனானின் அரசு செய்தி நிறுவனம், வியாழனன்று மாலை வேளையில் தெற்கில் குறைந்தபட்சம் 52 தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியதாகவும், வடக்கு இஸ்ரேலில் உள்ள ராணுவ தளங்களில் லெபனானும் தாக்குதல்களை நடத்தியதாகவும் கூறியுள்ளது. முன்னதாக ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, பேஜர், வாக்கி டாக்கி வெடிப்புகள் குறித்துப் பேசியிருந்தார். அப்போது, இஸ்ரேல் அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டதாகவும் போருக்கான அறிவிப்பை அது விடுத்திருப்பதாகவும் அவர் கூறினார். 

கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடந்த பேஜர், வாக்கி-டாக்கி வெடிப்புகளுக்கு இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலென்ட், “போரின் புதிய கட்டத்தை” தொடங்குவதாகவும், இஸ்ரேல் வடக்குப் பகுதியில் அதிக கவனம் செலுத்துவதாகவும் வெடிப்புகள் நிகழ்வதற்கு முன்னதாகக் கூறியிருந்தார்.இஸ்ரேல் அனைத்து விதிமுறைகளையும் சட்டங்களையும் மீறிவிட்டது என்று பேஜர், வாக்கி-டாக்கி வெடிப்பு தாக்குதல் குறித்து ஹெஸ்பொலா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார்.

அதோடு, இது இஸ்ரேலின் போருக்கான பிரகடனம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த செப்டம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் லெபனானின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பயன்படுத்திய வாக்கி டாக்கி மற்றும் பேஜர்களை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இதில் சிக்கி 2 குழந்தைகள் உட்பட 37 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 3000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இது மத்தியக் கிழக்கு நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே அயற்சி அடைந்துள்ள மக்கள் மீது சோனிக் கதிர்களை வைத்து இஸ்ரேலின் போர் விமானங்கள் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹசன் குற்றம் சாட்டியுள்ளார். 

இஸ்ரேல் தரப்பு இதுகுறித்துப் பேசும்போது, ஹெஸ்பொலாவின் தீவிரவாத திறன் மற்றும் உள்கட்டமைப்புகளை வலுவிழக்கச் செய்யவும், வடக்கு இஸ்ரேலை பாதுகாக்கவும் தன்னுடைய ராணுவம் செயல்படுவதாகக் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டவருக்குப் பதவி உயர்வு.

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்கு 06.09.2024 அன்று வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.  இதில் தூத்து...