வியாழன், 19 செப்டம்பர், 2024

லெபனான் வாக்கி-டாக்கி பேஜர்கள் வெடிப்பு 20 பேர் பலி4 50 பேர் காயம்!!

லெபனானில் பேஜர்கள் வெடிப்பு நடந்த அடுத்த நாளே நிகழ்ந்த வாக்கி டாக்கி வெடிப்புகளில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹெஸ்பொலா ஆயுதக் குழுவால் பயன்படுத்தப்பட்ட வாக்கி-டாக்கிகள் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள், பெக்கா பள்ளத்தாக்கு, தெற்கு லெபனான் போன்ற ஹெஸ்பொலா கோட்டைகளாகக் கருதப்படும் பகுதிகளில் வெடித்தன. கடந்த செவ்வாய்க் கிழமையன்று ஹெஸ்பொலா உறுப்பினர்களின் பேஜர்கள் வெடித்து 12 பேர் கொல்லப்பட்டனர். 

அவர்களில் சிலரின் இறுதிச் சடங்குகளிலும் சில வாக்கி டாக்கி வெடிப்புகள் நிகழ்ந்தன.இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கால்லன்ட், “போர் ஒரு புதிய கட்டத்தை நோக்கி நகர்வதாக” அறிவித்தார். அப்போது, இஸ்ரேலிய ராணுவப் பிரிவு வடக்கே நிலைநிறுத்தப்பட்டது. 

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், “இது மிகத் தீவிரமான விஷயம்” என்று எச்சரித்தார். அதோடு, “அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைபிடிக்குமாறு” அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார். “இந்தச் சாதனங்கள் அனைத்தையும் வெடிக்கச் செய்ய ஒரு பெரிய திட்டமிடப்பட்ட ராணுவ நடவடிக்கை முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்,” என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரினால் 11 மாதங்களாக எல்லை தாண்டிய சண்டைக்கு பின்னர் ஒரு முழுமையான மோதலுக்கான அச்சங்கள் ஏற்கெனவே அதிகரித்து வருகிறது. 

கடந்த புதன்கிழமை வாக்கி டாக்கி வெடிப்புகள் நடந்து சில மணிநேரத்திற்குப் பிறகு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நாட்டின் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களை “பத்திரமாக அவர்களின் வீடுகளுக்கு” திருப்பி அனுப்புவதாக உறுதியளித்தார். 

அண்மையில் காஸாவில் ஈடுபட்டிருந்த ராணுவப் பிரிவு வடக்கே மீண்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் உறுதி செய்துள்ளது. ஹமாஸுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறும் ஹெஸ்பொலா, காஸாவில் சண்டை முடியும்போதுதான் எல்லை தாண்டிய தாக்குதல்களை நிறுத்தும் எனக் கூறியுள்ளது. 

இந்த அமைப்பு, இரானால் ஆதரிக்கப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் பல மேற்கத்திய நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு, தடை செய்யப்பட்டுள்ளது. ஹெஸ்பொலாவின் சக்தி வாய்ந்த தலைவர் ஹசன் நஸ்ரல்லா வியாழன் அன்று உரை நிகழ்த்தவுள்ள நிலையில், அந்த அமைப்பு அடுத்து என்ன செய்யத் திட்டமிட்டுள்ளது என்பது அப்போது தெரிய வரலாம்.

ஹெஸ்பொலாவின் ஊடக அலுவலகம் நேற்று நடந்த இரண்டாவது வெடிப்பில் 16 வயது சிறுவன் உட்பட அமைப்பைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டதாக அறிவித்தது. ஹெஸ்பொலா, இஸ்ரேலிய படைகளை எல்லைக்கு அருகிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருக்கும் கோலன் குன்றுகளிலும் குறிவைத்து, இஸ்ரேலிய பீரங்கி நிலைகளை நோக்கி ராக்கெட்டுகளை வீசியது. 

நேற்று லெபனானில் இருந்து சுமார் 30 ராக்கெட்டுகள் கடந்து சென்றதாகவும், தீ பரவியதாகவும், ஆனால் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. தெற்கு லெபனானில் ஹெஸ்பொலா வீரர்களை இஸ்ரேலிய விமானம் தாக்கியதாக அந்த அமைப்பு கூறியது.நேற்று நடந்த கொடிய வெடிப்புகள் ஹெஸ்பொலாவுக்கு மற்றோர் அடியையும், அதன் முழு தகவல் தொடர்பு வலையமைப்பிலும் இஸ்ரேல் ஊடுருவி இருக்கலாம் என்பதற்கான சாத்தியமான அறிகுறிகளையும் பிரதிபலிக்கிறது.

செவ்வாயன்று ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதைக் கண்டு லெபனான் மக்கள் பலரும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளனர். லெபனான் சுகாதார அமைச்சரின் கூற்றுப்படி, 8 வயது சிறுமி, 11 வயது சிறுவன் உட்பட 12 பேர் இந்த வெடிப்புகளில் கொல்லப்பட்டனர். 

சுமார் 2,800 பேர் காயமடைந்தனர். புதன்கிழமையன்று தெற்கு பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதியான தஹியாவில் கொல்லப்பட்டவர்களில் நால்வரின் இறுதிச் சடங்கில் பிபிசி குழுவினர் இருந்தபோது, உள்ளூர் நேரப்படி, மாலை 5 மணியளவில் பலத்த வெடிச்சத்தம் கேட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஹிஸ்புல்லாவின் தளபதி இப்ராஹிம் அகில் பெய்ரூட் தாக்குதலில் பலி.

ஹிஸ்புல்லாவின் செயல்பாட்டுப் பிரிவின் தலைவரான இப்ராஹிம் அகில் ஐ.டி.எஃப் நீக்குகிறது. அமெரிக்கா ஏற்கனவே 2015 இல் அவரை "பயங்கரவாதி"...