புதன், 26 ஆகஸ்ட், 2026

யாழில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சடலமானது இனங்காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்படுகிறது. 

இன்று காலை கடற்தொழிலுக்கு சென்றவர்கள் குறித்த சடலத்தை கண்டுள்ளனர்.அதன்பின்னர் ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கினர்.

குறித்த சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லியில் கனமழை 26 விமானங்கள் ரத்து.

டெல்லியில் நேற்று கனமழை பெய்ததால் 397 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதுடன் 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று இடி, மின்னல், பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. 

குறிப்பாக தென்கிழக்கு, மத்திய டெல்லி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழையால் சாலைகளில் நீர் தேங்கி, நகரம் முழுவதும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதற்கிடையே, குருகிராமில் சோஹ்னா சாலையில் இஸ்லாம்பூர் கிராமத்துக்கு அருகே சுமார் இரண்டு அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியதால், கிட்டத்தட்ட 4 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. 

397 விமானங்கள் தாமதம்: கனமழை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 397 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதுடன் 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் டெல்லி வரவிருந்த 3 சர்வதேச விமானங்கள் உட்பட 15 விமானங்கள் வேறு நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

இவற்றில் 12 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், 2 விமானங்கள் சண்டிகருக்கும், ஒரு விமானம் லக்னோவுக்கும் திருப்பிவிடப்பட்டன. நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், சாலை பழுதுபார்க்கும் பணி காரணமாகவும் இன்று பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரியுமாறும், மாணவர்கள் வீட்டில் இருந்தே பாடம் கற்குமாறும் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு குருகிராம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

இந்திய வானிலை ஆய்வு மையம், டெல்லியின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும், நொய்டா, குருகிராம், பரிதாபாத் ஆகிய பகுதிகளுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கையும் விடுத்துள்ளது. 

டெல்லி – தேசிய தலைநகர் பகுதி, உத்தராகண்ட், ஒடிசா மற்றும் தெலங்கானா ஆகிய பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகலில் லேசான சாரல் மழைக்கும், நாளை நண்பகலுக்குப் பிறகு ஒருசில இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

யுத்தத்தின் சுவடுகள் மீண்டும் வரக்கூடாது-கலாநிதி ஹரிணி

மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் தடைகளையும் தாண்டி, துணிச்சலுடனும் விடாமுயற்சியுடனும் கல்வியில் முன்னேறி வருவது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

 யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் (22) நடைபெற்ற, பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கும் நிகழ்வில் விசேட உரையாற்றிய பிரதமர் இதனை தெரிவித்தார்.

 "இன்று எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும். சவால்கள், இடையூறுகள் மற்றும் நிராகரிப்புகளைத் தாண்டி, துணிச்சல், தன்னம்பிக்கை, திறமை மற்றும் விடாமுயற்சியால் இந்நிலையை அடைந்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களின் சாதனை பாராட்டுக்குரியது" எனப் பிரதமர் தெரிவித்தார். 

 ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக இன்று வழங்கப்படும் உதவிகள், அவர்களின் துணிச்சலான பயணத்திற்கு மேலும் வலுசேர்ப்பதற்காகவே வழங்கப்படுகின்றன எனத் தெரிவித்த பிரதமர், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தமக்குப் பின்னால் வரும் மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதே இந்த உதவித் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் எனவும் குறிப்பிட்டார். 

 மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொண்ட கஷ்டங்கள், வேதனைகள் மற்றும் நிராகரிப்புகளைத் தாண்டி சாதித்திருப்பது பாராட்டுக்குரியது எனப் பிரதமர் தெரிவித்தார். அவர்களின் துணிச்சல், விடாமுயற்சி மற்றும் சாதனை, பின்னர் வரும் மாணவர்களுக்கு நம்பிக்கையையும் முன்மாதிரியையும் ஏற்படுத்த வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் சமூகத்திற்கு மதிப்புமிக்கவர்கள் எனவும் பிரதமர் குறிப்பிட்டார். 

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிகளவான மாற்றுத்திறனாளிகள் காணப்படுவது கடந்த காலத்தில் இடம்பெற்ற கவலைக்குரிய யுத்தத்தின் மிகப் பெரும் பாதிப்புகளில் ஒன்றாகும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார். 


மீண்டும் ஒருபோதும் அவ்வாறான ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் செயற்படுவதும், அவ்வாறான நிலைமைகள் உருவாகுவதற்கான காரணிகளை இல்லாதொழிப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதேவேளை, கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றும் பிரதமர் தெரிவித்தார். 

மாற்றுத்திறனாளி மாணவர்கள் இன்று அடைந்துள்ள நிலைக்கு அவர்களது பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழங்கிய பங்களிப்பையும் பிரதமர் பாராட்டினார். 

ஜனாதிபதி நிதியம் கடந்த காலங்களில் சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் அனுபவித்தவர்களுக்கு மாத்திரம் உதவும் நிறுவனமாக இருந்த நிலைமையை மாற்றி, உண்மையில் உதவி தேவைப்படும் மக்களை அடையாளம் கண்டு, அவர்களது தேவைகளுக்கு ஏற்ப உதவிகளை வழங்கும் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கு மிகவும் நெருக்கமான நிறுவனமாக மாற்றி, உண்மையில் உதவி தேவைப்படும் மக்களுக்கு நேரடியாக உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

 கல்வித்துறைக்கு அரசாங்கம் மிகுந்த முக்கியத்துவம் வழங்கி வருவதாகத் தெரிவித்த பிரதமர், முன்பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான மாணவர்களின் கல்விப் பயணத்திற்குத் தேவையான பல்வேறு உதவித் திட்டங்களை ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுத்து வருவதாகவும் கூறினார். 

 இன்று பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கல்வியில் முன்னேறி வரும் மாணவர்களின் இளைய சகோதர, சகோதரிகள் மற்றும் அவர்களுக்குப் பின்னால் வரும் மாணவர்களுக்குக் கல்வியைத் தொடர்வதற்கான பாதையை மேலும் இலகுவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பிரதமர் தெரிவித்தார். 

 மேலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு மேலும் இலகுவாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற முடியும் என்பது தொடர்பான முன்னோடித் திட்டங்களும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். 

 "மாற்றுத்திறனாளிகளுக்கும் சமூகத்தின் ஏனையோருக்கு நிகரான சம வாய்ப்புகளும் சம உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். அவர்களைப் பற்றிய சமூகத்தின் பார்வையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். 

ஒவ்வொரு மாற்றுத்திறனாளி மாணவரின் துணிச்சல், போராட்டம் மற்றும் வெற்றிக் கதைகள் மற்றவர்களுக்கு நம்பிக்கையையும் முன்மாதிரியையும் வழங்கும் வகையில் உலகிற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்" எனப் பிரதமர் தெரிவித்தார். 

 இறுதியாக, மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு ஆதரவளித்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி நிதியத்தின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

சனி, 22 ஆகஸ்ட், 2026

மத்திய சுவீடனின் ஃபேகர்ஸ்டா பாடசாலையில் வாள்வீச்சுத் தாக்குதல்!!

மத்திய சுவீடனின் ஃபேகர்ஸ்டா (Fagersta) நகரில் உள்ள பிரினெல் மேல்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற வாள்வீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (21.08.2026) மதியம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


18 வயதுடைய இளைஞர் ஒருவர் வாளுடன் பாடசாலைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் 12 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இளைஞரை அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கைது செய்துள்ளனர். கிட்டதட்ட 450 மாணவர்கள் கல்வி கற்கும் இந்தப் பாடசாலையில், கோடைக்கால விடுமுறைக்குப் பின்னர் பாடசாலை மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சந்தேகநபர் குறித்த பாடசாலையின் முன்னாள் மாணவர் எனவும், அவர் தலைக்கவசம் அணிந்து வாளுடன் பாடசாலைக்குள் நுழைந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், அவருக்கு எதிராக ஏற்கனவே தாக்குதல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

 இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை உறுதியாக வெளியாகவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பாக சுவீடன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சனி, 15 ஆகஸ்ட், 2026

இந்தோனேசியா 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகில் இன்றைய தினம் சனிக்கிழமை (2026 ஓகஸ்ட் 15) அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், அடுத்தடுத்துப் பல தொடர் நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளன. 

 இந்தோனேசியாவின் மத்திய தீவுப் பகுதியில் அதிகாலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ரிக்டர் அளவில் 5.9, 5.6 மற்றும் 6.1 ஆகிய அளவுகளில் மேலும் 3 சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கத்தின் தீவிரத்தன்மை காரணமாக இந்தோனேசியப் பிராந்தியப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டு பின்னர் கடல் மட்டத்தில் ஆபத்தான மாற்றங்கள் ஏற்படவில்லை என அந்த எச்சரிக்கை நீக்கப்பட்டது. “தற்போதைய தகவல்களின்படி, இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உயிரிழப்புகளும் கட்டிட இடிபாடுகளும் பதிவாகியுள்ளன.

மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இந் நிலநடுக்கத்தினால் இலங்கையின் கடலோரப் பகுதிகளுக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை எனவும், கரையோர மக்கள் அச்சமடையத் தேவையின்றி இயல்பு வாழ்க்கை பாதுகாப்பாக உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

ஊழல் லஞ்சத்தில் இருந்து தமிழகம் விடுதலை-விஜய்

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்த முதல்வர் விஜய், “ஊழலில் இருந்து தமிழகத்தை காப்பாற்றுவதும் விடுதலைதான்.. பொதுவாழ்வில் சமரசம் கூடாது” என பேசினார். “தவெக ஆட்சி அமைந்த 3 மாதங்களில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், படைக்கப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டார். 

அனைத்து துறையிலும் லஞ்சத்தை ஒழிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வருவாய்த் துறையில் அனைத்து சான்றிதழ்களும் 15 நாட்களில் வழங்கப்படுகிறது என்றும் கூறினார். 

சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்த முதல்வர் விஜய் மக்களுக்கு உரையாற்றினார்.கோட்டை கொத்தளத்தில் என்னை தேசியக்கொடி ஏற்றி வைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு முந்தைய அரசின் நல்ல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து துறையிலும் லஞ்சத்தை ஒழிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வருவாய்த்துறையில் அனைத்து சான்றிதழ்களும் 15 நாட்களில் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டு பொருளாதாரத்தை 2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்திட உறுதியேற்போம். உங்க அண்ணை, உங்க தம்பியை, உங்க பிள்ளையை ஜெயிக்க வச்சி முதல்வர் ஆக்கிட்டீங்க.. 

அதனால் உங்கள் கடமை முடிந்துவிட்டது என்று ஒதுங்கி போய்விடாதீர்கள். இனிமேல்தான் நீங்கள் என் கூடவே இருக்கனும். உறுதியாக நம்ம அரசோட கூட இருக்கனும். அப்போதுதான் நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும்.

சீனாவின் ‘பறக்கும் ரயில் 5 விநாடிகளில் 800 கி.மீ. வேகம்!!

சீனா புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. இந்தச் சாதனையால் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எதிர்காலத்தில் பயண நேரங்கள் வெகுவாகக் குறையக்கூடும். பொதுவாக, விமானங்கள்தான் அதிவேகப் போக்குவரத்து சாதனங்களாக உள்ளன. 

இதனால் அவசரமாக வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகள், அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருந்தாலும் விமானப் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். ஆனால், விமானப் பயணக் கட்டணங்கள் அதிகமாக இருப்பதால், நடுத்தர வர்க்கத்தினருக்கு அவை எப்போதும் சாத்தியமாக இருப்பதில்லை.

இந்நிலையில், விமானத்தின் வேகத்தையே மிஞ்சும் அளவுக்கு ரயிலில் பயணிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். அதனைச் சாத்தியமாக்கும் முயற்சியில் சீனா முக்கியமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள டோங்ஃபு சோதனை மையத்தில் ‘மேக்லெவ்’ அதிவேக ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்தச் சோதனையின் முடிவில், சுமார் 1.1 மெட்ரிக் டன் எடை கொண்ட சோதனை வாகனம் வெறும் 5 விநாடிகளுக்குள் மணிக்கு 800 கி.மீ. வேகத்தை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிவேக ரயில் தொழில்நுட்பத்தில் முக்கியமான சோதனைச் சாதனையாக பார்க்கப்படுகிறது.

Thank You Google

Thank You Google
Thanks