புதன், 26 ஆகஸ்ட், 2026

டெல்லியில் கனமழை 26 விமானங்கள் ரத்து.

டெல்லியில் நேற்று கனமழை பெய்ததால் 397 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதுடன் 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று இடி, மின்னல், பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. 

குறிப்பாக தென்கிழக்கு, மத்திய டெல்லி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழையால் சாலைகளில் நீர் தேங்கி, நகரம் முழுவதும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதற்கிடையே, குருகிராமில் சோஹ்னா சாலையில் இஸ்லாம்பூர் கிராமத்துக்கு அருகே சுமார் இரண்டு அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியதால், கிட்டத்தட்ட 4 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. 

397 விமானங்கள் தாமதம்: கனமழை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 397 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதுடன் 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் டெல்லி வரவிருந்த 3 சர்வதேச விமானங்கள் உட்பட 15 விமானங்கள் வேறு நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

இவற்றில் 12 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், 2 விமானங்கள் சண்டிகருக்கும், ஒரு விமானம் லக்னோவுக்கும் திருப்பிவிடப்பட்டன. நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், சாலை பழுதுபார்க்கும் பணி காரணமாகவும் இன்று பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரியுமாறும், மாணவர்கள் வீட்டில் இருந்தே பாடம் கற்குமாறும் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு குருகிராம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

இந்திய வானிலை ஆய்வு மையம், டெல்லியின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும், நொய்டா, குருகிராம், பரிதாபாத் ஆகிய பகுதிகளுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கையும் விடுத்துள்ளது. 

டெல்லி – தேசிய தலைநகர் பகுதி, உத்தராகண்ட், ஒடிசா மற்றும் தெலங்கானா ஆகிய பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகலில் லேசான சாரல் மழைக்கும், நாளை நண்பகலுக்குப் பிறகு ஒருசில இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks