கள்ளக்குறிச்சியில் இன்று நடைபெறவுள்ள விசிகவின் ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு’ வெற்றிகரமாக நடைபெற வாழ்த்தி திருமாவளவனுக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சரின் கடிதத்தில்"தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு" வெற்றிகரமாக நடைபெற எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"திராவிடமும் தமிழ்த் தேசியமும் இந்த மண்ணின் இரு கண்கள்" என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை விளக்க மாநாட்டிலேயே அறிவித்தோம்.
எங்கள் செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தில், ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை உருவாக்க "பொது வாக்கெடுப்பு" நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்த சுமார் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன.
அருங்காட்சியகத்தில் பாதுகாவலர்கள் இருந்தபோதும், பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அலார அமைப்புகளை முறியடித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பாதுகாக்கப்பட்ட கண்ணாடி பெட்டியை உடைத்து குறித்த 4 ஓவியங்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தப்பியோடும் அவசரத்தில் 2 ஓவியங்களை அங்கேயே போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.
இந்த ஓவியங்களின் திருட்டு குறித்து இத்தாலி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
யாழ் வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்களான பொதுமக்கள் இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களா முன்பாக இன்றைய தினம் 17 ஆவது வாரமாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறாமல் பூர்வீக நிலங்களை முடக்கி வைத்துள்ளதற்கு எதிராகவே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வலிகாமம் வடக்கில் உள்ள ஜே/256, ஜே/248, ஜே/251 மற்றும் ஜே/255 ஆகிய கிராம உத்தியோகத்தர் (சேவையாளர்) பிரிவுகளைச் சேர்ந்த தமிழ் மக்கள், கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் அவர்களது பூர்வீக வாழ்விடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
போர் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அப்பகுதிகள் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயமாகவே பேணப்பட்டு வருவதுடன், மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவது இராணுவத்தினரால் தடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு பல வருடங்களாகப் பல்வேறு மட்டங்களில் கோரிக்கைகள் விடுத்தும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதாக மக்கள் எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக, இன்றைய தினமும் 17 ஆவது வாரமாக இப் போராட்டம் உறுதியுடன் முன்னெடுக்கப்பட்டது.
பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்யும் திட்டத்தைச் செயல்படுத்திய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி எடுத்துச் சென்ற சூட்கேஸ் சிறைச்சாலையின் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி முன்னிலைப்படுத்தப்பட்ட றிலையில் அவர் ஒரு சூட்கேஸுடன் சென்ற காணொளிகள் சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியிருந்தது.
இந்நிலையில், மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டிய செய்தித் தொடர்பாளர் மேலும், சிறைக்கு அழைத்துச் செல்லப்படும்போது பெண்களுக்குக் கைவிலங்கு இடப்படுவதில்லை எனவும், கூறியுள்ளார்.
மேலும், அவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சட்டவிரோதமாக எதுவும் நடக்கவில்லை என்பதால் எந்த விசாரணையும் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.அவர் தற்போது அங்குனுகோலபெலெஸ்ஸ சிறையில் மற்ற சந்தேக நபர்களுடன் இருப்பதாகவும், அவருக்கு எந்தவிதமான சிறப்புச் சலுகையும் வழங்கப்படவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்று அதிகாலையில் ரஷ்யப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில், குறைந்தபட்சம் இரண்டு மாவட்டங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிகிக்கின்றன.
இந்தத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் நகரத்தின் இராணுவ நிர்வாகம் கூறியுள்ளது.
வடக்கு புறநகர்ப் பகுதியிலுள்ள குடியிருப்பு அல்லாத இடத்தில், ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் பல கார்கள் தீப்பிடித்து எரிந்ததுடன், நகர மையப் பகுதிக்கு சற்று தெற்கே உள்ள மற்றொரு இடத்திலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும், புறநகர்ப் பகுதியில் உள்ள சந்தைக் கடைகள் தீப்பற்றி எரிவதைக் காட்டும் புகைப்படங்களும் அதிகாரப்பூர்வமற்ற டெலிகிராம் பக்கங்களில் வெளியாகியுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொரட்டுவை, அங்குலானை கடற்கரையில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ஒன்று விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில், அதில் இருந்த 12 கடற்படை வீரர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அங்குலானை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வழக்கமான ரோந்துப் பணியை முடித்துவிட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கடலில் இருந்து புகை எழுவதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அங்குலானை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். விபத்துக்குள்ளான படகில் இருந்த 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, அந்தப் படகில் உள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடற்படையினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த படகில் உள்ளவர்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படையின் உதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, விபத்துக்குள்ளான படகைக் கண்காணிப்பதற்காக விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ. 17 (Mi-17) ஹெலிகொப்டர் ஒன்றும் பெல் 412 (Bell 412) விமானம் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகில் இன்றைய தினம் சனிக்கிழமை (2026 ஓகஸ்ட் 15) அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், அடுத்தடுத்துப் பல தொடர் நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.
இந்தோனேசியாவின் மத்திய தீவுப் பகுதியில் அதிகாலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ரிக்டர் அளவில் 5.9, 5.6 மற்றும் 6.1 ஆகிய அளவுகளில் மேலும் 3 சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் தீவிரத்தன்மை காரணமாக இந்தோனேசியப் பிராந்தியப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டு பின்னர் கடல் மட்டத்தில் ஆபத்தான மாற்றங்கள் ஏற்படவில்லை என அந்த எச்சரிக்கை நீக்கப்பட்டது.
“தற்போதைய தகவல்களின்படி, இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உயிரிழப்புகளும் கட்டிட இடிபாடுகளும் பதிவாகியுள்ளன.
மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இந் நிலநடுக்கத்தினால் இலங்கையின் கடலோரப் பகுதிகளுக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை எனவும், கரையோர மக்கள் அச்சமடையத் தேவையின்றி இயல்பு வாழ்க்கை பாதுகாப்பாக உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.