யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறாமல் பூர்வீக நிலங்களை முடக்கி வைத்துள்ளதற்கு எதிராகவே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வலிகாமம் வடக்கில் உள்ள ஜே/256, ஜே/248, ஜே/251 மற்றும் ஜே/255 ஆகிய கிராம உத்தியோகத்தர் (சேவையாளர்) பிரிவுகளைச் சேர்ந்த தமிழ் மக்கள், கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் அவர்களது பூர்வீக வாழ்விடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
போர் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அப்பகுதிகள் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயமாகவே பேணப்பட்டு வருவதுடன், மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவது இராணுவத்தினரால் தடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு பல வருடங்களாகப் பல்வேறு மட்டங்களில் கோரிக்கைகள் விடுத்தும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதாக மக்கள் எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக, இன்றைய தினமும் 17 ஆவது வாரமாக இப் போராட்டம் உறுதியுடன் முன்னெடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக