புதன், 22 ஜூலை, 2026

கனடாவில் இலங்கை வைத்தியர் பாரிய குற்றச்சாட்டுகளில் கைது!

கனடாவின் டொராண்டோவில் உள்ள சிக் கிட்ஸ் வைத்தியசாலையில் (SickKids) பணிபுரியும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர்கள் பாலியல் சுரண்டல் தொடர்பான பொருட்களை வைத்திருந்ததாகவும், அவற்றை உபயோகிக்க முற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. டொராண்டோவைச் சேர்ந்த 44 வயதான வைத்தியர் திலான் திசாநாயக்க என்பவரே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

மின்னணு சாதனம் ஒன்றைப் பயன்படுத்தி சிறுவர் பாலியல் சுரண்டல் பொருட்களை அணுகி பதிவிறக்கம் செய்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்நாட்டு காவல்துறையின் இணையவழி சிறுவர்கள் சுரண்டல் தடுப்புப் பிரிவு இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.இதன் தொடர்ச்சியாக, 2026 பெப்ரவரி மாதத்தில் வைத்தியசாலையிலும் அவரது தனிப்பட்ட இல்லத்திலும் சோதனைகளை மேற்கொண்ட காவல்துறையினர், அவரது அலுவலக கணினி உட்பட பல மின்னணு சாதனங்களைக் கைப்பற்றியுள்ளனர். 

இருப்பினும், கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அவர் ஆற்றிய மருத்துவப் பணியுடன் தொடர்புடையவை என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், திசாநாயக்க செவ்வாய்க்கிழமை டொராண்டோ நீதிமன்றத்தில் முற்படுத்தபடவிருந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஈரானுக்கு ஆதரவாக செங்கடல் நீர்வழியை மூடிய ஹவுதி அமைப்பு !!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சவூதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் செங்கடல் நீர்வழியை மூடிவிட்டதாக ஏமனின் ஹவுதி அமைப்பினர் அறிவித்திருப்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 இடையில் கொஞ்ச நாள் ஓய்ந்திருந்த போர் சூழல் கடந்த 10 நாட்களாக அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து ஈரான் மீது தொடர்ச்சியாக அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த அதிரடி தாக்குதல் நடவடிக்கையானது வான் பாதுகாப்பு அமைப்புகள், ஆயுத கிடங்குகள் மற்றும் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளை குறி வைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்க படைகளுக்கு அடைக்கலம் தரும் அண்டை நாடுகளான குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான், ட்ரோன் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அதே போல் அமெரிக்காவிற்கு, சவூதி அரேபியா உதவி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்கான செங்கடல் பகுதியில், உலகின் மிக முக்கிய வர்த்தக பாதையான bab el mandeb நீரிணையை மூடுவதாக ஹவுதி அமைப்பு அறிவித்துள்ளது. 

இதனால் சர்வ்தேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் பாப் அல்-மந்தேப் ஆகிய இரண்டு முக்கிய உலகளாவிய கடல் பாதைகளும் முடக்கப்பட்டால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு, உலகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு-அறிவிப்பு!

மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான கட்டணத்தைத் தீர்மானிப்பதற்காகப் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (22) நிறைவடைவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 அந்தக் கருத்துக்களின் அடிப்படையில் எதிர்வரும் 6 மாதங்களுக்கான புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டணங்கள் தீர்மானிக்கப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார். 

 இலங்கை மின்சாரச் சீர்திருத்தச் சட்டத்தின்படி, புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இலங்கை மின்சார சபையின் தொடர்ச்சி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யும்போது, அதற்குரிய விலை மற்றும் விலை சூத்திரத்தைத் தீர்மானிக்கும் மற்றும் அங்கீகரிக்கும் அதிகாரம் இலங்கை பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. 

 அதற்கமைய, சூரிய, காற்று மற்றும் பயோமாஸ் (Biomass) போன்ற புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான பொருத்தமான விலை சூத்திரங்கள் தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஜயநாத் ஹேரத் குறிப்பிட்டார்.

அந்த விலை சூத்திரங்களின் அடிப்படையில் மின்சாரக் கட்டணங்களைத் தீர்மானிப்பது தொடர்பில் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பொதுமக்கள் ஆலோசனைச் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

செவ்வாய், 21 ஜூலை, 2026

ஹார்முஸ் நீரிணையில் பற்றி எரியும் கப்பல்கள் !!

அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பத்தாவது நாளாக ஈரானிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளன.

 சிரிக் அருகேயும், பந்தர் அப்பாஸ், கெஷ்ம் தீவு, சபாஹர் மற்றும் கொனாரக் ஆகிய பகுதிகளிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க வீரர்களின் மரணங்களுக்காக ஈரான் "பல மடங்கு" விலை கொடுக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரான் தனது பதிலடித் தாக்குதல்களைத் தொடர்வதுடன் கடந்த சில மணிநேரங்களில் பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க நிலைகளை தாக்கியதாக வைத்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.ஹார்முஸ் நீரிணை வழியாக சென்ற 2 எண்ணெய் கப்பல்கள் கண்ணி வெடிகளில் வெடித்து சிதறியுள்ளதாகவும் கப்பல்களில் "பாரிய தீ" ஏற்பட்டுள்ளதாகவும் ஐ.ஆர்.ஜி.சி குறிப்பிட்டுள்ளது. 

அரச செய்தி நிறுவனமான ஐஆர்ஐபி வெளியிட்ட ஓர் அறிக்கையில், இரண்டு கப்பல்களின் மாலுமிகளை மீட்புக் குழுவினர் வெளியேற்றி வருவதாகதெரிவித்துள்ளது. ஈரானின் ஆதரவு பெற்ற யேமனில் உள்ள ஹூதிகள், சவூதி அரேபியாவுக்கு எதிராக கடல்வழி முற்றுகையை அறிவித்துள்ளதால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மேலும் சீர்குலைக்கப்படும் என அச்சம் எழுந்துள்ளது.

திடீரென இரத்து செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத்துக்கான தனது விமானச் சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை (CAASL) விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

அதன்படி, குவைத்துக்கான விமானச் சேவைகள் நேற்று (20) முதல் ஜூலை 26, 2026 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.அல்லது பயணிகள் பயண முகவரைத் தொடர்புகொள்ளுமாறு அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று (20) நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 38 ஆவது நாளான இன்று புதிதாக சிறுவர்கள் இருவருடைய என்புக்கூடுகள் உட்பட 08 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

 அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. நேற்று (19) அமர்ந்த நிலையில் காணப்பட்ட என்புக்கூட்டினை சுத்தம் செய்யும் பணிகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

 அதேவேளை பெரிய என்புக்கூட்டிற்கு அருகில் சிறிய என்புக்கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில், அதன் கீழிருந்து மேலும் ஒரு சிசுவின் என்புக்கூடும் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 92 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 454 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 440 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன .

எதிர்வரும் 22 ஆம் திகதி செம்மணியை பார்வையிடுவதற்கு ஜரோப்பிய ஒன்றியத்தின் மேல்மட்ட குழுவினர் வருகை தரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஹோமாகம கட்டுவான கைத்தொழில் வலய தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ.

ஹோமாகம கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று (21) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தீயணைப்புப் பணிக்காக கோட்டே மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Thank You Google

Thank You Google
Thanks