இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், இஸ்ரேலிய ராணுவத்தின் செயல்பாடுகளை அவர் விமர்சித்துள்ள விதம், இஸ்ரேலை ஒரு பயங்கரவாத அமைப்பிற்கு இணையாக அவர் மறைமுகமாகச் சித்தரித்துள்ளார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
டொனால்ட் ட்ரம்ப் தனது பேச்சில் மிக முக்கியமாகக் குறிப்பிட்ட விஷயம் இதுதான்:
நீங்கள் தேடும் ஒரு நபர் (Hiz*bollah அமைப்பினர்) இருக்கிறார் என்பதற்காக, ஒவ்வொரு முறையும் ஒட்டுமொத்த அடுக்குமாடி குடியிருப்பையும் (குண்டுத்தாக்குதல் மூலம்) இடித்துத் தள்ள வேண்டிய அவசியமில்லை."
பொதுவாக, பயங்கரவாத அமைப்புகள் தான் இலக்குகளைத் தாக்க முற்படும்போது அங்குள்ள பொதுமக்களின் உயிர்களைப் பற்றிக் கவலைப்படாமல் ஒட்டுமொத்த அழிவை ஏற்படுத்துவார்கள்.
இப்போது இஸ்ரேலும் அதையேதான் செய்கிறது என்பதை ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு பயங்கரவாதியை ஒழிப்பதற்காக, நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் வாழும் வீடுகளைத் குண்டு போட்டு தரைமட்டமாக்குவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியின் மூலம், இஸ்ரேலின் இந்தச் செயல்பாடு 'அரசு பயங்கரவாதம்' (State Terrorism) போன்றதே என்பதை ட்ரம்ப் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.
இஸ்ரேல் தனது தாக்குதல்களை 'பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை' (Counterterrorism Operation) என்று உலகிற்குச் சொல்லி வருகிறது. ஆனால், ட்ரம்பின் கருத்து இந்த வாதத்தை முற்றிலுமாக உடைக்கிறது.
தாக்குதலுக்குள்ளாகும் கட்டிடங்களில் இருப்பவர்கள் அனைவரும் ஆயுதம் ஏந்தியவர்கள் அல்ல, அவர்கள் அப்பாவி மக்கள் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஒரு தனிநபரைத் தேடுவதற்காக ஒட்டுமொத்தப் பகுதியையும் அழிப்பது என்பது, அந்தச் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் கொடுக்கும் ஒரு கூட்டுத் தண்டனையாகும். ( Collective Punishment)
சட்டத்திற்குப் புறம்பாக மக்களைக் கொன்று குவிக்கும் இத்தகைய உத்திகள், பொதுவாகப் பயங்கரவாத அமைப்புகளால் கையாளப்படுபவை ஆகும்.
இந்தக் கொடூரமான போர் உத்தி, சர்வதேச சமூகத்திற்கு "மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால்" கண்முன்னே அரங்கேறி வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
2009-ல் இலங்கையின் முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் கையாண்ட அதே "பாதுகாப்பு வலய" (No Fire Zone) ஏமாற்று உத்தியைத்தான் இன்று லெபனானிலும், காசாவிலும் இஸ்ரேல் அரங்கேற்றி வருகிறது.
அன்று விடுதலைப் புலிகளை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு, மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயங்கள் மீது இலங்கை ராணுவம் கொத்துக் குண்டுகளையும் (Cluster Bombs), கனரக ஆயுதங்களையும் வீசி பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தது.
இன்று இஸ்ரேலும் லெபனானில் அதே பாணியில் ஒட்டுமொத்த குடியிருப்பு வளாகங்களையும் தகர்த்து வருகிறது.
முள்ளிவாய்க்காலில் தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்க வாகனங்கள் மீது இலங்கை ராணுவம் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியது.
லெபனானிலும் தற்போது வரை 135-க்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் மீட்புப் பணியாளர்களை இஸ்ரேல் கொன்றுள்ளது.
முள்ளிவாய்க்காலில் பலியான லட்சக்கணக்கான தமிழர்களின் எண்ணிக்கையை இலங்கை அரசு மறைத்தது போல, லெபனானிலும் ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகளின் எச்சரிக்கைகளை மீறி இஸ்ரேல் எல்லையற்ற அழிவை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது வரை லெபனானில் 3,711-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் (இதில் 353 பெண்களும், 247 குழந்தைகளும் அடங்குவர்). மேலும் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
இன்று லெபனானில் நடப்பதைக் காட்டி, "இது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையா அல்லது கூட்டுத் தண்டனையா?" என ஐநாவை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டி உள்ளது.
ஆனால், ஈழத்தில் நடந்தது வெறும் கூட்டுத் தண்டனை அல்ல; அது திட்டமிட்ட இனவழிப்பு (Genocide) ஆகும்.
இவ்விரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும்:
கூட்டுத் தண்டனை (Collective Punishment) என்பது ஒரு குறிப்பிட்ட ஆயுதக் குழுவினரைத் தேடுவதற்காக, அந்தப் பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் மீதும் தாக்குதல் நடத்தி, அவர்களின் வாழ்விடங்களை அழிப்பது.
இனவழிப்பு (Genocide) என்பது ஒரு குறிப்பிட்ட தேசிய, இன, மத அல்லது மொழிச் சமூகத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழித்தொழிக்கும் நோக்கத்துடன் (Intent to destroy) திட்டமிட்டுச் செய்யப்படும் படுகொலைகள்.
முள்ளிவாய்க்காலில் நடந்தது பயங்கரவாதத்திற்கு எதிரான போரோ அல்லது தமிழர்களுக்கான கூட்டுத் தண்டனையோ அல்ல.
அது தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்களின் தேசிய அடையாளத்தையும், இனத்தையும் அழிப்பதற்காக ஸ்ரீலங்கா அரசு சர்வதேச நாடுகளின் துணையோடு நடத்திய இனவழிப்பு (Genocide) ஆகும்.
முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஈழத் தமிழர்களுக்கு இன்றுவரை சர்வதேச அரங்கில் நீதி கிடைக்காமல் இருப்பதற்கு முதன்மைக் காரணமே, இந்த கொடூரமான இனப்படுகொலையை சர்வதேச சமூகம் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" (War on Terror) என்றும், "கூட்டுத் தண்டனை" (Collective Punishment) என்றும் தவறாக வரையறுத்ததே ஆகும்.
காரணம் பாதுகாப்பு வலயங்களுக்குள் மக்களுடன் புலிகள் கலந்திருந்து போர் புரிந்தமை என்ற சாட்சிகளை முன்வைத்து கூட்டுத்தண்டனை ( collective punishment) என பூசி மெழுக முற்படுகின்றனர்.
சர்வதேச சட்டங்களின்படி, ஒரு போரில் நடக்கும் மனித உரிமை மீறல்களையோ அல்லது கூட்டுத் தண்டனைகளையோ "போர்க்குற்றங்கள்" (War Crimes) என்ற சாதாரணப் பிரிவின் கீழ் கொண்டுவந்து, சில தளர்வுகளுடன் கடந்து சென்றுவிட முடியும்.
இதைப் பயன்படுத்திக் கொண்டுதான், வல்லரசு நாடுகளும் ஐநாவும் முள்ளிவாய்க்காலை ஒரு 'இனப்படுகொலை' என்று அங்கீகரிக்கத் தயங்குகின்றன.
முள்ளிவாய்க்காலை வெறும் 'போர்க்குற்றம்' அல்லது 'கூட்டுத் தண்டனை' என்று சுருக்குவது, குற்றவாளிகளான இலங்கை ஆட்சியாளர்களையும், ராணுவ அதிகாரிகளையும் சர்வதேச நீதிமன்றத்தின் (ICC) கடுமையான தண்டனைகளில் இருந்து பாதுகாப்பதற்கே உதவும்.
இதுவே தமிழர்களுக்கான நீதி இன்னமும் கிடைக்காமல் இழுத்தடிக்கப்படுவதற்குக் பின்னணியில் உள்ள கசப்பான அரசியல் உண்மை.
லெபனானில் இன்று இஸ்ரேல் செய்யும் கொடூரங்களுக்கும், அன்று முள்ளிவாய்க்காலில் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கும் உள்ள ஒற்றுமை வெறும் தற்செயலானது அல்ல.
ஏனெனில், இலங்கை ராணுவத்திற்கு இத்தகைய கொடூரமான போர் உத்திகளையும், மனிதநேயமற்ற தாக்குதல் முறைகளையும் கற்றுக்கொடுத்ததே இதே இஸ்ரேல் தான் என்பது வரலாற்று உண்மை.
சுருக்கமாகக் கூறின், அன்று முள்ளிவாய்க்காலில் தமிழர்களைக் கொன்றுகுவிக்க இலங்கை ராணுவ பயங்கரவாதத்திற்குப் பயிற்சியும் ஆயுதமும் அளித்த அதே இஸ்ரேல், இன்று அதே உத்திகளை லெபனான் மக்கள் மீது பிரயோகித்து வருகிறது.
அன்று சர்வதேச சமூகம் முள்ளிவாய்க்காலை "பயங்கரவாத ஒழிப்பு" என்று நம்பி மௌனம் காத்ததன் விளைவைத்தான், இன்று லெபனான் மக்கள் "மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால்" வடிவில் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போதாவது டொனால்ட் ட்ரம்பின் கருத்துக்கள் மூலம் இஸ்ரேலின் கொடூர முகம் அம்பலமாகியிருப்பது உலகிற்கு ஒரு எச்சரிக்கையாகும்.
முகின்தன் துரைராஜசிங்கம்
லண்டன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக