திங்கள், 29 ஜூன், 2026

யாழ். போதனா வைத்தியசாலையில் 300 மில்லியன் ரூபாயில் அதிநவீன “கத் லாப்!!

யாழ். போதனா மருத்துவமனையில் நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன இதய ஆய்வகம் (Cath Lab )சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.. யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த அதிநவீன வசதியை வடமாகாண மக்களின் பயன்பாட்டிற்காக நாடா வெட்டி திறந்து வைத்தார். இதய நோய்களை மிகத்துல்லியமாகக் கண்டறியவும், சிக்கலான அறுவை சிகிச்சைகள் ஏதுமின்றி நவீன முறையில் இதய நோய்களைக் குணப்படுத்தவும் இந்த “கத் லாப்” பரிசோதனைக்கூடம் பெரிதும் உதவவுள்ளது.தனியார் வைத்தியசாலைகளில் பெருமளவிலான பணத்தைச் செலவழித்து மேற்கொள்ளப்படும் இத்தகைய சிகிச்சைகளை, இனிவரும் காலங்களில் வடமாகாண மக்கள் தமது பிரதேசத்திலேயே இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் மிக முக்கிய வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது. இந்த உயர்மட்ட நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ச. சிறிபவனந்தராசா, க. இளங்குமரன், ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி மற்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

புலம்பெயர் இலங்கையர்களுக்கான வாக்குரிமை!

வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் இலங்கையர்கள் வாக்களிப்பதற்கு வழிவகை செய்யும் பல்வேறு முன்மொழிவுகளை அமைச்சரவை பரிசீலித்து வருகிறது. அத்தகைய ஒரு பரிந்துரையானது, இலங்கை குடிமக்கள் இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச் சென்று வாக்குப்பதிவு நாளன்று நேரில் வாக்களிப்பதாகும், 


அதேசமயம் மற்றொரு பரிந்துரையானது எண்ணிம வாக்குப்பதிவைப் பரிந்துரைக்கிறது என்று அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 வெளிநாடுகளில் உள்ள இலங்கை குடிமக்கள் எவ்வாறு வாக்களிக்கலாம் என்பதை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவிடமிருந்து இந்த முன்மொழிவுகள் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.அந்த துணைக்குழு, தேசிய தேர்தல் ஆணைக்குழு மற்றும் பிற தரப்பினரிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தச் செயல்முறையில் யாரும் விடுபடாத வகையில் இது செய்யப்பட வேண்டும், என்று, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கான தேர்தல் முறையைத் தேர்ந்தெடுப்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் தலைவரான விஜித ஹேரத் கூறியுள்ளார். 

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிப்பதற்கு வழிவகை செய்யும் பல்வேறு முறைகளை அடுத்தடுத்த அரசாங்கங்கள் ஆராய்ந்து வருகின்றன, ஆனால் இதுவரை அனைவரையும் உள்ளடக்கிய ஒரு முறைமை கண்டறியப்படவில்லை. 

இதற்கிடையில், நாடாளுமன்றக் குழுத் தேர்தல்கள் தொடர்பான அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்வரும் ஜூலை 10 அன்று மீண்டும் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இருப்பினும், நாடாளுமன்றக் குழுக்களை நடத்துவது தொடர்பான முட்டுக்கட்டைக்கு விரைவான தீர்வு காணப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும், அரசாங்கம் தனது முடிவை எடுப்பதற்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் கோரியுள்ளதால், இந்தச் செயல்முறை தாமதப்படுத்தப்படுவதாக பிரதான எதிர்க்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தென்னிலங்கை பத்திரிகை ஒன்றின் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு தொடங்கியது.

சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் IAS, IPS அதிகாரிகள் மாநாடு நடக்கிறது. 

28 துறைகளின் செயல்திட்டங்கள், வெற்றி தமிழகம் திட்டம் குறித்தும் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்துகிறார். IAS, IPS அதிகாரிகள் மாநாடு இன்றும் நாளையும் முதலமைச்சர் விஜய் தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறுகிறது. ஆட்சியர்கள், காவல்துறை உயரதிகாரிகளுடனான மாநாடு 3 அமர்வுகளாக நடைபெற உள்ளது. 

மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் இணைந்து கலந்து கொள்கின்றனர்.

இந்த அமர்வில் முதலில் சட்டம் ஒழுங்கு தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆய்வு, குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடக்கும் நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள், போலீஸ் நிர்வாகத்தின் பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆய்வு செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் 7 தொகுதிகளில் இடைத்தேர்தல்.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவது தொடர்ந்து வருகிறது.

 ஏற்கனவே அதிமுகவில் இருந்து 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர்.மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் ராஜிநாமா செய்திருந்தனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருடன் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார். அப்போது; சபாநாயகரிடம் இன்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். 

எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜிநாமாவை சபாநாயகர் ஏற்றார். ராஜினாமா செய்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமாவை அடுத்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா 6 ஆக உயர்ந்தது.

 எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரும் வியாழக்கிழமை தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

தவெக பொது செயலாளர் ஆனந்த் முன்னிலையில் நடைபெறவுள்ள இணைப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் சேர்ந்து கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தொண்டர்களும் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. 

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு உள்பட பல்வேறு வழக்குகள் மீது நிலுவையில் உள்ளன.திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் உள்ளிட்ட 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது

ஞாயிறு, 28 ஜூன், 2026

தலைக்கூத்தல்: முதியவர்களை கொலை செய்யும் பழக்கம் வெளிச்சத்திற்கு வந்த கதை.

தலைக்கூத்தல் என்ற பெயரில் தமிழில் ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது. 13ஆண்டுகளுக்கு முன் முதல்முறையாக தலைக்கூத்தல் என்ற சொல்லை நான் எதிர்கொண்டபோது, எனக்கு அது அதிர்ச்சியைத் தந்தது. விருதுநகர் மாவட்டத்தில், நோய்வாய்ப்பட்ட முதியவர்களை அவர்களின் பிள்ளைகளே எண்ணெய் குளியல் மூலமாக கொலை செய்யும் வழக்கத்திற்குப் பெயர்தான் தலைக்கூத்தல். 

இந்த கொலை பழக்கத்தை 2010ல் முதன்முதலில் செய்தியாக வெளியிட்டபின்னர், பல முதியவர்கள் தங்களது குடும்பத்தினர் விரித்த கொலை வலையில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்குக் கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லும் பழக்கம் தமிழ்நாட்டில் 1990களில் பரவலாக இருந்தது. 

அதுபோலவே 2010ல் விருதுநகர் மாவட்டத்தில் பல கிராமங்களில் தலைக்கூத்தல் என்ற முதியவர்களை கொலைசெய்யும் பழக்கம் இருந்தது. இது பற்றி தெரிய வந்ததும் முதியவர்களுக்குக் கொடுக்கப்படும் ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளதாகக் கூறி, கிராமங்களில் உள்ள முதியவர்கள் பலரிடம் பேசி தகவலைச் சேகரித்தேன். 

பல வீடுகளுக்கு ஏறி, இறங்கினேன். தலைக்கூத்தல் பற்றி கேட்டபோது, அது ஒரு சமூகப்பழக்கம், முடியாத நேரத்தில் தலைக்கூத்தல் செய்து முதியவரை 'அனுப்பி' வைப்பதில் தவறில்லை என்று பலரும் சொன்னார்கள். அதை கருணைக் கொலை என்றும் சொன்னார்கள். 

சில முதியவர்கள் தங்களது பெற்றோருக்கு தலைக்கூத்தல் செய்ததையும், தங்களது பிள்ளைகள் தங்களுக்கு செய்தாலும், அதில் தவறில்லை என்றும் சொன்னார்கள். இந்த செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பல நாட்களில் எனக்கு என் தாத்தாவின் பிம்பம் என் கண் முன் வந்துவந்து போனது. 

வேலை காரணமாக சென்னையில் குடியேறியிருந்தாலும், அவரிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசுவது, அவரை நலம் விசாரிப்பது என்ற புதிய பழக்கம் எனக்குள் வந்தது. மூன்று மாதங்களில் நான் விருதுநகரில் சந்தித்த பல முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரிடம் பேசியபோது, தலைக்கூத்தல் என்ற பழக்கம் இருப்பதை உறுதிப்படுத்த பல சான்றுகள் கிடைத்தன. ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரிடம் பேசியபோது, தனது நண்பர் ஒருவர் தனது மகன்கள் தலைக்கூத்தல் செய்யவுள்ளதைத் தெரிந்துகொண்டு தன்னிடம் அழுத கதையைச் சொன்னார். ''இரண்டு நாட்கள் கழித்து என் நண்பர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. 

அவர் தனது பிள்ளைகளால் கொல்லப்பட்டிருந்தார் என்று ஊரில் பலருக்கும் தெரியும். ஆனால் யாரும் புகார் கொடுக்கமாட்டார்கள். அப்படி புகார் கொடுத்தால் எங்கள் கிராமத்தில் பாதிப் பேர் இந்த பிரச்னையில் மாட்டிக்கொள்வார்கள்,'' என்றார். 

தனது இரண்டு மகன்கள் தனக்கு தலைக்கூத்தல் நடத்தப்போவதை உணர்ந்த பெருமாள் என்ற முதியவர் விருதுநகரில் இருந்து வெளியேறி பரமக்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாக சொன்னார். ''என் மகன்கள் எனக்கு தலைக்கூத்தல் நடத்த முடிவு செய்திருந்தார்கள். கொஞ்சம் நடமாடும் நிலையில் இருப்பதால், நான் ஊரில் இருந்து உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டேன். என்னை போல வாய்ப்பு கிடைக்காத பல முதியவர்கள் கொல்லப்படுவார்கள்,''என்றார். 

முதியவர் பெருமாளின் உரையாடல் என்னை உறையவைத்தது. அடுத்ததாக நான் சந்தித்த ஒரு நபர், தீபாவளி பண்டிகையின்போது தனது தந்தையை 'அனுப்பி'வைத்ததாகவும், பொங்கல் வந்தால் அம்மாவை 'அனுப்பி'வைக்கலாம் என்று முடிவுசெய்திருப்பதாகச் சொன்னார். ''எத்தனை காலத்திற்குதான் போகும் உயிரை பார்த்துக்கொண்டு இருப்பது...பண்டிகை தினங்களில் உறவினர்கள் பலர் இறப்புக்கு வரமாட்டார்கள், செலவு குறையும்,'' என்றார். 

இந்த பயணத்தில் பெற்றோரை கொலை செய்த பலரை நான் சந்தித்தேன். அவர்கள் அதிர்ச்சியை இரட்டிப்பாக்கினார்கள். எண்ணெய் குளியல் மட்டுமே அல்ல பலவிதங்களிலும் முதியவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன். 

ஒரு சிலர் போலி மருத்துவர்களைக் கொண்டு ஊசி செலுத்துவதும் உண்டு. அதுபோன்ற ஊசி போடும் பெண் ஒருவரையும் சந்தித்தேன். என்னுடன் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பூங்கோதை என்ற தன்னார்வலர் என் அம்மாவாக நடிக்க ஒப்புக்கொண்டார். 

எனக்கு டெல்லியில் வேலை கிடைத்துவிட்டது என்பதால், நானும், அம்மாவும் செல்கிறோம், ஊரில் தாத்தாவை விட்டுச் செல்லமுடியாது, ஊசி போடமுடியுமா என்று கேட்டேன். அவரும் ஒத்துக்கொண்டார். ''தாத்தாவை 'அனுப்பி'வைக்க நல்ல நேரம் பார்த்துவிட்டு வா, உன் தாத்தா எப்படி இருக்கிறார் என்று பார்த்துவிட்டு, எவ்வளவு செலவு ஆகும் என்று சொல்கிறேன். 

நான்கு நாட்களுக்கு முந்திதான் ஒரு தாத்தாவுக்கு ஊசிபோட்டேன்,'' என்றார் அந்த பெண். இவற்றை ஆடியோ பதிவு செய்துகொண்டேன். விருதுநகர் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான அசோகன் தனது உறவினர் குடும்பத்தில் நடந்த கொலையைப் பற்றி என்னிடம் வலியுடன் பகிர்ந்துகொண்டார். 

அவரின் உதவியால் கிராமங்களில் பல போலி மருத்துவர்கள் இருப்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது. அவரது உறவினர் 76 வயதான முதியவர் ஒருவரை அவரது குடும்பத்தினர் போலி மருத்துவரின் உதவியால் கொலை செய்திருந்ததை என்னிடம் தெரிவித்தார்.

பல சம்பவங்களை ஆதாரமாகக் கொண்டு, கிராமங்களில் முதியவர்களை அவர்களின் குடும்பத்தினர் கொலை செய்வதைச் செய்தியாக வெளியிட்டவுடன், விருதுநகர் மாவட்ட அதிகாரிகள் ஊசி போடும் போலி மருத்துவர்களை முதலில் கைது செய்தார்கள். கிராமங்களில் தலைக்கூத்தல் பழக்கத்தைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். முதியவர்களின் இறப்பை கிராம நிர்வாக அதிகாரிகள் கண்காணித்தனர். செய்தி வெளியிட்ட பிறகு எனக்கு சொந்தங்கள் பெருகின.

 பல முதியவர்கள் எனக்கு தொலைபேசியில் அழைத்து பேசினார்கள். அவர்கள் குடும்பங்களில் நடந்த கொலைகளைப் பற்றி விவரித்தார்கள். விருதுநகரில் இருந்து பல அழைப்புகள். அதில் ஒரு அழைப்பை இன்றும் என்னால் மறக்கமுடியாது. மும்பையில் வசிக்கும் ஒரு மகன், வயதான தாய் ஒருவருக்கு தலைக்கூத்தல் நிகழ்த்த முடிவுசெய்திருந்தார் என்றும் தலைக்கூத்தல் பற்றிய செய்திகள் வெளியாகியிருந்ததால், அந்த நிகழ்வை நிறுத்திவிட்டார் என்றும் தகவல் வந்தது. எனக்கு பெரிய திருப்தி கிடைத்தது. 

பல முதியவர்கள் தங்களது நட்பு வட்டத்தில் உள்ள முதியவருக்கு தலைக்கூத்தல் ஏற்பாடு செய்வது பற்றிய தகவல் தெரிந்தால் உடனே மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்தார்கள். அதனால், பல கொலைகள் நிறுத்தப்பட்டிருந்தன. 

இந்த செய்தியை தொடர்ந்து, பல முறை விருதுநகருக்குச் சென்றேன். எனக்கு ஒரு நட்பு வட்டம் உருவாகியிருந்தது. தன்னார்வலர் இளங்கோ மூலமாக ஹெல்ப்ஏஜ் இந்தியா தொண்டு நிறுவனம் முதியவர்கள் சுயஉதவி குழுக்களை ஏற்படுத்தியது.

 100க்கும் மேற்பட்ட அந்த சுயஉதவி குழுக்கள் மூலம் மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் முதியவர்களுக்கு, நல்ல உடல்நலத்துடன் இருக்கும் முதியவர்கள் நண்பர்களாக மாறினார்கள். அந்த சுயஉதவி குழுக் கூட்டங்களுக்கும் சென்றுவந்தேன். முதியவர்கள் தங்களது பிள்ளைகளிடம் அஞ்சி இருந்த நிலை மாறி, தங்களது உரிமைகளைக் கேட்டுப் பெறும் முதியவர்களாக மாறியிருந்தனர்.

 அடுத்தடுத்த பயணங்களில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முதியவர்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள் நடத்துவது, தேர்தல் காலங்களில் முதியவர்களின் உதவித்தொகை குறித்து அரசியல் தலைவர்களை சந்திக்க அவர்களை அழைத்துச்செல்வது என பல நிகழ்வுகளில் தொடர்ந்து அவர்களுடன் பயணித்தேன். 

பல பாட்டிகளின் அன்பு முத்தங்கள், பல தாத்தாக்களின் கனிவான அழைப்புகள் இன்றும் தொடருகின்றன. அவர்கள் சமீபமாக எனக்குப் பரிசளித்த ஒரு கைத்தறி துண்டு எனக்குக் கிடைத்த பெரிய விருதாக பார்க்கிறேன். 2012ல் வட இந்திய நடிகர் ஆமிர்கான் நடத்திய 'சத்தியமேவ ஜெயதே' என்ற நிகழ்ச்சியில் தலைக்கூத்தல் குறித்த செய்தியை பற்றி பேசவேண்டும் என்று கேட்டனர்.

 என்னுடைய அனுபவத்தைக் கேட்ட அமீர்கான், நிகழ்ச்சி முடிந்த பின்னர், என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, கண்கலங்கினார். ''பெற்றோர்களைக் கூட கொலை செய்ய துணிந்துவிட்ட சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்று முதலில் தோன்றியது. ஆனால் அதுபோன்ற சமூக அவலங்களை வெளிக்கொண்டுவர உங்களை போன்ற பேத்திகள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது,''என்றார். 

சமீபமாக தன்னார்வலர் பூங்கோதையிடம் பேசியபோது, ''அந்த செய்தி வந்தபிறகு, தலைக்கூத்தல் குறைந்துவிட்டது. இப்போது அதுபோல யாரும் கொலை செய்வது இல்லை. முதியவர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு வந்துவிட்டது,''என்றார். 

அதேபோல, முதியவர்கள் தங்களது வீடுகளில் ஏதாவது துன்புறுத்தல்கள் இருந்தால்,காவல் நிலையத்திற்குச் செல்லவும் தயங்குவதில்லை என்றார். இந்த செய்தி சேகரிப்பின் ஊடாக சமூக மாற்றம் ஏற்பட்டதில் பெரிய மகிழ்ச்சி, அதேநேரம், எனக்குள் பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட்டிருந்தது. 

முதியவர்களை நேசிக்கத் தொடங்கிய நான், என் தாத்தா ராமுவுக்கு பிரியமான தோழியாக மாறினேன். அவருக்காக நேரம் ஒதுக்கினேன். அவரின் இறுதிக் காலங்களில், அவருக்கு வாசிப்புப் பழக்கத்தில் ஆர்வத்தை ஊட்டி, அவரை கதை எழுத வைத்தேன், ஒரு புத்தகம் வெளியிடவைத்தேன். அவர் இறப்புக்கு முன்தினம் அவர் எழுத்தாளராக இருந்தார்.

லங்காவிசிறி கனடா

போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியதை ஈரான் கண்டிக்கிறது.

ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள கண்காணிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா மீண்டும் மீறியதை ஈரான் வெளியுறவு அமைச்சகம் வன்மையாகக் கண்டித்தது. "ஜூன் 28, 2026 ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் உள்ள பல கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கும் நிலையங்கள் மீது அமெரிக்காவின் பயங்கரவாத இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களை ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் வெளியுறவு அமைச்சகம் வன்மையாகக் கண்டிக்கிறது," என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 "ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் பிரிவு 2-ன் பத்தி 4-ஐ அப்பட்டமாக மீறுவதாகவும், அதேவேளையில் ஜூன் 18, 2026 அன்று கையெழுத்தான, திணிக்கப்பட்ட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதல் பத்தியை வெளிப்படையாக மீறுவதாகவும் அமைந்துள்ள இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள், அமெரிக்க நிர்வாகம் தனது உறுதிமொழிகளுக்கு மிகக் குறைந்த மதிப்பையும் நம்பகத்தன்மையையும் மட்டுமே அளிக்கிறது என்பதையும், உறுதிமொழிகளை மீறுவது அந்த நிர்வாகத்தின் இயல்பிலேயே உள்ளது என்பதையும் காட்டுகின்றன," என்று அந்த அறிக்கை கூறியது.

 "சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை மற்றும் அதன் பொதுச் செயலாளரின் பொறுப்புகளை நினைவுகூரும் அதே வேளையில், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் பிரிவு 51-க்கு இணங்க, அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக ஈரானின் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தனக்குள்ள உறுதியை ஈரானிய இஸ்லாமியக் குடியரசு வலியுறுத்துகிறது," என்று வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியது.

ஈரானின் ட்ரோன் களஞ்சியங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

அமெரிக்க விமானப் படையினரால் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் (ஆளில்லா விமானம்) களஞ்சியங்களை இலக்கு வைத்து தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 

ஹோமுஸ் நீரிணையில் வைத்து கப்பல் ஒன்றின் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 மேலும், ஈரானின் கடலோர ரேடார் மையம் மீதும் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது 'Truth Social' சமூக வலைத்தளப் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், போர்நிறுத்த உடன்படிக்கையை ஈரான் மீண்டும் ஒருமுறை மீறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

 அவர்கள் ஒருபோதும் கற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது போல் தோன்றுவதாகவும், இனிவரும் காலங்களில் அவர்களுடன் நியாயமான முறையில் நடந்துகொள்ள முடியாது என்றும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Thank You Google

Thank You Google
Thanks