வெள்ளி, 6 மார்ச், 2026

குருநகர் இறங்குதுறையிலிருந்து பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு புறப்பட்ட படகு விபத்து...!

குருநகர் இறங்குதுறையிலிருந்து பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்குப் புறப்பட்ட படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த விபத்துச் சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆலயத்திற்குச் சென்ற பயணிகள் படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த படகில் இருந்த முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் எனப் பலர் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அப்பிரதேச கடற்றொழிலாளர்கள் உடனடியாக ஈடுபட்டுள்ளனர்.

இதில் மூன்று பேர் கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வியாழன், 5 மார்ச், 2026

இலக்குகளை அடைந்த பிறகே போரை முடிவுக்கு!!

ஈரான் தனது இலக்குகளை அடையும் வரையிலும், அமெரிக்காவிற்கு கடுமையான அடிகளை வழங்கும் வரையிலும் "இந்தப் போரை கைவிடாது" என்று ஈரானிய ஜெனரல் கியோமர்ஸ் ஹெய்டாரி சபதம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் அரை  அதிகாரப்பூர்வ தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திகளில், கட்டாம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் துணைத் தளபதி ஹெய்டாரி இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தப் போர் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது எங்களுக்கு முக்கியமில்லை. நாங்கள் எட்டு ஆண்டுகால போரை அனுபவித்திருக்கிறோம்.மேலும் எங்கள் இலக்குகளை அடைந்து எதிரியை அதன் அவமானகரமான செயலுக்காக வருத்தப்படவும் விரக்தியடையவும் செய்யும் போது மட்டுமே இந்த போரை முடிவுக்குக் கொண்டுவருவோம்“ என சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தொடர்ந்து ஈரானில் தாக்குதல் நடத்தி வருவதாகவும் கடந்த சனிக்கிழமை முதல் குறைந்தது 1,045 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் இஸ்ரேலியப் படைகளும் லெபனான் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையைத் தடுப்பதற்கான தீர்மானத்தை அமெரிக்க செனட் 53 : 47 என்ற அடிப்படையில் வாக்களித்து தடுத்து நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில்!!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது இலங்கையின் கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலேயே இருப்பதாகவும் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (05) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மேலும் ஒரு ஈரானிய கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். 

 இது குறித்துப் பதிலளித்த அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரிந்த தகவல்களை விட அரசாங்கத்திற்குப் பல தகவல்கள் தெரியும் எனவும், பிரச்சினையைத் தீர்க்கவும், உயிர்ச்சேதங்களைக் குறைக்கவும், பிராந்திய அமைதியைப் பாதுகாக்கவும் தேவையான தலையீடுகளை அரசாங்கம் செய்து வருவதாகவும் தெரிவித்தார். 

இது தொடர்பான நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் விரிவான அறிக்கையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்: "ஒரு நாடாக இலங்கை சர்வதேச அமைதிக்காகச் செயற்படுகிறது. 

இந்தியப் பெருங்கடலின் அமைதியே எமது எதிர்பார்ப்பாகும். கூறப்பட்டதை விட அதிகமான விடயங்கள் தற்போது இந்தியப் பெருங்கடலில் நடந்து கொண்டிருக்கின்றன. அரசாங்கம் என்ற ரீதியில் சர்வதேச சட்டங்களுக்கு அமையவும் மனிதாபிமான அடிப்படையிலும் தலையிட்டு வருகின்றோம்.

 பிராந்திய அமைதியைப் பாதுகாக்கத் தலையிடுகிறோம். மேலதிக தகவல்களைப் பின்னர் அறிவிப்போம்." "நாம் சர்வதேசச் சாசனங்களுக்கு அமைவாக, உயிர்ச் சேதங்களைக் குறைக்கும் வகையிலும், இந்தியப் பெருங்கடலில் அமைதியைப் பாதுகாக்கும் வகையிலும் பொறுப்புடன் செயற்படுகின்றோம். 

இன்று மாலை மேலதிக தகவல்களைக் கூற முடியும்." "மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடுமையான போர்ச் சூழல் உருவாகி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே, இவ்வாறானதொரு நேரத்தில் பாராளுமன்றத்தையோ அல்லது ஊடகங்களையோ பயன்படுத்தி நகைச்சுவை செய்வதற்கோ, அரசியல் கோபங்களைத் தீர்த்துக்கொள்வதற்கோ, போலி அல்லது அரைகுறை உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு கருத்துக்களைத் தெரிவிப்பதற்கோ இது நேரமல்ல. உலகளாவிய ரீதியில் இவ்வாறானதொரு சூழ்நிலை நிலவும் போது, ஒவ்வொரு அரசியல்வாதியும், மக்கள் பிரதிநிதியும் மிகவும் பொறுப்புடன் கருத்துக்களை வெளியிட வேண்டும்.

" "எமது கரையிலிருந்து 12 கடல் மைல்கள் வரையான தேசிய கடற்பரப்பு எமக்குச் சொந்தமானது. அந்த 12 முதல் 200 கடல் மைல்கள் வரை இருப்பது பிரத்தியேகப் பொருளாதார வலயம். இந்த வலயத்தில் சர்வதேச சட்டம் அமுலில் உள்ளது. பொருளாதார நடவடிக்கைகளுக்கு மாத்திரமே அங்கு எமக்கு அதிகாரம் உள்ளது, இராணுவ நடவடிக்கைகளுக்கு அல்ல." "இந்தச் சம்பவம் காலி துறைமுகத்திலிருந்து 19 கடல் மைல் தொலைவில் நடந்துள்ளது. 

இது தொடர்பில் நேற்று அதிகாலை 5.08 மணிக்கே கடற்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு முதலில் தகவல் கிடைத்தது. தாக்குதல் நடத்தப்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் அல்ல, அப்பகுதியில் சடலங்கள் மிதக்கின்றன என்ற தகவலே முதலில் கிடைத்தது. 

ஒரு மணி நேரத்திற்குள் இலங்கை கடற்படை மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தது. அந்த நேரத்தில் தாக்குதல் குறித்துத் தேடுவதை விட, மனிதாபிமான அடிப்படையில் தலையிட்டு உயிர்களைக் காப்பாற்றுவதே எமது நோக்கமாக இருந்தது." "அதன்படி, அரசாங்கத்தின் தரப்பிலும், கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சும் மீட்புப் பணிகளை முன்னெடுத்தன.

எங்களால் 32 பேரைக் கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு வர முடிந்தது. ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுவரை 87 பேரின் சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன." "எங்களிடம் உள்ள சடலங்களைப் பாதுகாக்கும் குளிர்சாதன வசதிகள் போதுமானதாக இல்லை. எனவே, தனியார்த் துறையிடம் இருந்து இதைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. 

அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இன்னும் சில மணி நேரங்களில் கொழும்பில் இருந்து மேலதிகமாக இரண்டு குளிர்சாதனப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்படும்."

புதன், 4 மார்ச், 2026

மரைக்காயர் பட்டினம் இலங்கைக்கு கடத்தவிருந்த 10 லட்சம் மதிப்பிலான மாத்திரை!!

மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினம் கடற்கரை அருகே உள்எ தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் 10 லட்சம் மதிப்பிலான வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட வயாகரா, வலி நிவாரணி மாத்திரைகள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவைகளை ராமநாதபுரம் கியூ பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் கூட்டாக இன்று (3) அதிகாலை பறிமுதல் செய்து தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இலங்கை இந்திய சர்வதேச கடல் ஊடாக தமிழகத்தில் இருந்து கடல் அட்டை, கஞ்சா போதை பொருள், அழகு சாதன பொருட்கள், வலி நிவாரணி மாத்திரைகள், சமையல் மஞ்சள், முந்திரி, ஏலக்காய், சுக்கு உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு கடல் வழியாக கடத்தப்பட்டு வருகிறது. 

 இந்நிலையில் ராமநாதபுரம் க்யூ பிரிவு மற்றும் ராமநாதபுரம் சுங்க இலாகவிற்கு கீழ் செயல்படும் மண்டபம் சுகத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கூட்டாக மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினம் கடற்கரை பகுதியில் இன்று (3) அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அதிகாரிகள் வருவதை கண்டதும் அங்கிருந்த சிலர் தப்பி ஓடிய நிலையில் கடற்கரை ஓரம் உள்ள தோப்பு ஒன்றில் சோதனை செய்தபோது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக 20,400 வலி நிவாரணி மாத்திரைகள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 4800 வயாகரா மாத்திரைகள், அழகு சாதன பொருட்கள், சோப்பு, உள்ளிட்டவைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததையடுத்து கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்ததுடன், அங்கு இருந்த படகு இரண்டு எஞ்சின்கள் கைப்பற்றிய கியூ பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் மண்டபம் சுங்கத் துறை அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

 பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் பொருட்களின் இந்திய மதிப்பு ரூ.10 லட்சம் எனவும் இதன் சர்வதேச மதிப்பு 17 லட்சம் இருக்கும் என ராமநாதபுரம் சுங்கத்துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் கடற்கரை ஓரம் நடைபெறும் கடத்தல் சம்பவம் தொடர்பாக பொது மக்கள் மற்றும் மீனவர்கள் சுங்கத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என்றும் தகவல் அளிக்கும் நபர்களின் ரகசியம் காக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு இலங்கையில் தற்போது தட்டுப்பாடு இருப்பதாகவும் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக அங்கிருந்து கடத்திச் செல்ல திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

பிரித்தானிய பிரஜைகளை அழைத்து செல்ல மத்திய கிழக்கில் விமானம்!

மத்திய கிழக்கை விட்டு வெளியேற விரும்பும் பிரித்தானிய பிரஜைகளுக்கு உதவுவதற்காக, அந்நாட்டு அரசாங்கம் ஓமானிலிருந்து ஒரு வணிக விமானத்தை வாடகைக்கு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விமானம் மார்ச் 4 ஆம் திகதி உள்ளூர் நேரப்படி 23:00 மணிக்கு (GMT 19:00) மஸ்கட்டில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. 

 மேலும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களை முதலில் அழைத்துச் செல்லும் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஐக்கிய அரபு இராச்சியம் தங்கள் இருப்பைப் பதிவுசெய்து தற்போது ஓமானில் இருக்கும் பிரித்தானியா பிரஜைகள் இந்தப் படிவத்தை அவசரமாக நிரப்ப வேண்டும் என்று வெளியுறவு அலுவலகம் கூறுகிறது..

வெளியுறவு அலுவலகத்தால் அழைக்கப்படாவிட்டால், விமான நிலையத்திற்கு மக்கள் வர வேண்டாம் என்று அறிக்கை வலியுறுத்தியது. மக்கள் பிரித்தானியாவுக்கு திரும்புவதற்கான கூடுதல் வழிகளைக் கண்டறிய விமான நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றும் என்றும் அது மேலும் கூறியுள்ளது.

காலி விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் 180 பேர் கராப்பிட்டியவிற்கு!!

காலி கடற்பரப்பிலிருந்து 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 'IRIS Dena' கப்பலில் 180 பேர் இருந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட அமைச்சர், அவர்களில் 30 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டு, தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

செவ்வாய், 3 மார்ச், 2026

ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்!!!

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளதுடன், அதன் ஊடாகப் பயணிக்க முயற்சிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது. 

ஈரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கொமேனி (Ayatollah Ali Khamenei) படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஈரான் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. ஈரான் ஆயுதப் படைகள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீது தொடர்ச்சியாகப் பழிவாங்கும் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Thank You Google

Thank You Google
Thanks