இது தொடர்பாக பலாலி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் அவசரப் பொதுக்கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) சங்க மண்டபத்தில் நடைபெற்ற போதே இவ்விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.
தமிழக மீனவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்ட குறித்த நபர், உண்மையில் இந்தியக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள மீனவர்களின் உபகரணங்களைக் கொள்ளையிட முயன்ற போதே சிக்கியுள்ளார் என்பது இக்கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.
இவ்வாறான சட்டவிரோதக் கும்பல்களால் உள்ளூர் மீனவர்கள் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் மற்றும் உபகரணங்களை இழந்து பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டு வருவதோடு, இரு நாட்டு மீனவர்களுக்கிடையிலான நல்லுறவும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக மீனவப் பிரதிநிதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் மற்றும் அவரது கும்பலுக்கு எதிராக ஏற்கனவே காவல் நிலையங்களில் பல முறைப்பாடுகள் இருப்பதையும், நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதையும் சுட்டிக்காட்டிய சங்கம், இவர்களுக்கு எதிராகச் சட்டத்தை நிலைநாட்டத் தவறியதால் உள்ளூர் மீனவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாகத் தெரிவித்தது.
அண்மையில் இச்சம்பவம் குறித்து உண்மைகளை வெளியிட்ட சங்கத் தலைவருக்கு, குறித்த நபரின் குடும்பத்தினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளமைக்கும் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இவ்வாறான கடற்கொள்ளைக் கும்பல்களுக்கு எதிராகக் காவற்துறையினர் பாரபட்சமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தின் பிரதிகள் பலாலி காவல் நிலையப் பொறுப்பதிகாரி, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கடற்தொழில் நீரியல் வளத்துறை உதவிப்பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலர் ஆகியோருக்கு உரிய நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
